ரயில் டிக்கெட், ஏர் இந்தியா போர்டிங் பாஸில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து, ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதனால் நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில், ரயில்வே நிரவாகம் சார்பில் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுக்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, கடந்த வாரம் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, மோடியின் புகைப்படம் இடம்பெற்ற ரயில்வே டிக்கெட் நிர்வாகத்தின் மூலம் திரும்பப் பெறப்பட்டது.

அதேபோன்று, பஞ்சாப் மாநிலத்தின் முன்னால் டிஜிபியான சஷிகாந்த் கடந்த 25ஆம் தேதி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், “2019 மார்ச் 25 இன்று டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி படங்கள் அச்சிடப்பட்ட வைப்ரண்ட் குஜராத் விளம்பரம் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் பணத்தை ஏன் இப்படி வீண் அடிக்கிறோம் என்று தேர்தல் ஆணையம் கேட்காமல், பேசாமல் இருப்பது ஆச்சிரியமாக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ட்விட்டர் பதிவு குறித்து விளக்கம் அளித்தார் ஏர் இந்தியாவின் செய்தித்தொடர்பாளர் தனஞ்ஜெய் குமார். பின்னர், ஏர் இந்தியா நிறுவனத்தில் மோடியின் புகைப்படம் இடம்பெற்ற போர்டிங் பாஸ்கள் திரும்பப் பெறப்படும் என்று அவர் தெரிவித்தார். இதைதொடர்ந்து, போர்டிங் பாஸ்கள் திரும்பப் பெறப்பட்டது.

இதுதொடர்பாக, ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தபிறகும் ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகளில் மோடி புகைப்படத்தை ஏன் அகற்றவில்லை என்று கேள்வி எழுப்பிய தேர்தல் ஆணையம், இதுகுறித்து ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மூன்று நாட்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.