த்தரப் பிரதேச முதல்வரும், பாஜகவின் முக்கியத் தலைவருமான யோகி ஆதித்யநாத் நாட்டின் முக்கிய இந்துதுவ தலைவர்களில் ஒருவராகவும் உள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் எந்தக் கலவரமும் ஏற்படவில்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஆனால் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையை ஒப்பிட்டு பார்த்தால் யோகி ஆதித்யநாத் கூறுவது முற்றிலும் தவறானதாக தெரிகிறது.

“மார்ச் மாதத்தில், எனது பணிகாலம் இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்யப்படும். என்னுடைய பதவி காலத்தில், எந்தக் கலவரங்களும் நடைபெற இல்லை” என கடந்த ஜனவரி 3ஆம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் யோகி ஆதித்யநாத். சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலிலும்கூட இதையே அவர் தெரிவித்திருந்தார்.

யோகி ஆதித்யநாத் நேர்காணல்

“பாஜக தலைமையிலான அரசு  உத்தரப் பிரதேசம்மீதான முன் அனுமானங்களை மாற்றியிருக்கிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் நாட்டுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது உத்தரப் பிரதேச மாநிலம். உத்தர பிரதேசத்தில் கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு கலவரமும் நடக்கவில்லை.

கடந்த 2017 மார்ச் மாதம் நான் ஆட்சிக்கு வந்தபோது விவசாயிகள் கடன்சுமையால் பாதிக்கப்பட்டிருந்தனர். கொலைகளும் சுரண்டல்களும் வன்முறைகளும் மாநிலத்தில் அதிகமாக இருந்தன.  மாஃபியாக்கள் மாநிலத்தை சுரண்டிக்கொண்டிருந்தனர். அவர்கள் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் ஆட்சியின்போது சுரண்டலில் ஈடுபட்டனர்.  அவர்களின் ஆட்சிக்காலம் ஊழல்களின் காலம் என்று வர்ணிக்கலாம்.” என்று தெரிவித்தார் யோகி ஆதித்யநாத்.

கலவரங்கள்

“கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு கலவரமும் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவில்லை. 2012இல் 227 முக்கியக் கலவரங்கள் நடந்திருக்கின்றன. 2013இல் 247 கலவரங்களும் 2014இல் 242 கலவரங்களும் நடந்திருக்கின்றன. வன்முறையாளர்கள்மீது எந்தவொரு இரக்கமும் காட்டப்படாமல் போலீஸ் என்கவுண்ட்டரில் 73 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். துரதிருஷ்டவசமாக இந்த என்கவுன்ட்டரில் 6 போலீசார் உயிரிழந்துள்ளனர்.” என்றும் அவர் கூறினார். அவரின் இந்த அறிவிப்பு பொய் என நிரூபிக்கும் வகையில் உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக அறிக்கை

“2017ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 822 வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 195 வன்முறைகள் நடந்துள்ளன. இதில் 44 பேர் இறந்துள்ளனர். 542 பேர் காயமடைந்தனர்.” என கடந்த 2018 பிப்ரவரி 6ஆம் தேதி மக்களவையில் தெரிவித்திருந்தார் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர்.

2015ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 155 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில், 22 பேர் உயிரிழந்தும், 419 பேர் காயமடைந்தும் உள்ளனர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 62 வன்முறை சம்பவங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 488 பேர் காயமடைந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

.பி. நடந்த வன்முறை சம்பவங்கள்

உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையைத் தவிர்த்து உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் கலவரங்கள் ஊடகங்களில் வெளியானது. உத்தரப் பிரதேச மாநிலம், சஹாரான்பூரில் கடந்த 2017ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி தாகூர்- தலித் சமூகங்களுக்கு இடையில் சாதி மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவர் கொல்லப்பட்டார். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2018ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி கஸ்கஞ்ச் நகரில், விஸ்வ இந்து பரிஷத்தும் பா.ஜ.க. மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யும், இணைந்து நடத்திய பேரணியின்மீது மர்ம நபர்கள் கல்வீசியதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. பின்னர் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த இனவாத மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மூன்று பேர் காயமடைந்தனர்.

புலந்த்சாகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் பசுவதை விவகாரம் தொடர்பாக பெரும் வன்முறை வெடித்தது. உத்திரப் பிரதேசத்தின் ஸ்யானா என்ற பகுதியிலுள்ள வயல் ஒன்றில் பசுமாட்டின் உடல் பாகங்களும், கன்னுக்குட்டியும் இறந்து கிடந்துள்ளது. இதை கண்ட பசு பாதுகாவலர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து   சாலைமறியலில் ஈடுபட்டபோது, போலீசார் அங்கு வந்தனர். அப்போது, அந்த கும்பல் போலீசார் மீது தாக்குதல் நடத்தி போலீஸ் நிலையத்தையும் வாகனத்தையும் எரித்தனர். போலீசார் தரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தக் கலவரத்தில், இன்ஸ்பெக்டர் சுபாத் சிங் மற்றும் ஒரு இளைஞரும் உயிரிழந்தனர்.

இந்த வன்முறை சம்பவங்களை பாரக்கும்போது, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பதவிக்காலத்தில் எந்த கலவரமும் நடைபெறவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறானதாக தெரிகிறது.

வெறுப்பு குற்றங்களில் .பி முதலிடம்

மேலும் சில புள்ளி விவரங்களும் யோகி ஆதித்யநாத் கூறுவது தவறு என்பதையே நிரூபிக்கின்றன. சாதி, மதம் மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள்மீது நடத்தப்படும் குற்றங்களின் எண்ணிக்கையை ஆம்னெஸ்டி இண்டர்நே‌ஷனல் அமைப்பு, கடந்த ஆண்டின் முதல் மாதத்தில் இருந்து ஜூன்வரை பதிவுசெய்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஜூலை 13ஆம் தேதி அறிக்கை ஒன்றை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும்  100க்கும் மேற்பட்ட வெறுப்புணர்வு குற்றங்கள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளன. கடந்த 6 மாதத்தில் தலித்துகளுக்கு எதிராக 67 குற்றங்களும், முஸ்லிம்களுக்கு எதிராக 22 குற்றங்களும் நடந்துள்ளன.

“வெறுப்பு குற்றங்களை நிறுத்துங்கள்” என்கிற பக்கத்தில் பதிவாகியுள்ள புகார்களின் எண்ணிக்கையை வைத்து இந்தியாவில் அதிக வெறுப்பு குற்றங்கள் நடைபெறுகின்ற மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 18 வெறுப்பு குற்றங்களோடு உத்தரப் பிரதேச  மாநிலம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.