ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று ஆர்பிஐ வாரியத்தின் கூட்டத்தை மும்பையில் கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நிதியுதவி வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவிற்குப் பொருளாதார வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த நிதியை ஆர்பிஐ ஆளுநராக ரகுராம் ராஜன் இருந்தபோதும் சரி, அதற்குப் பின்னர் வந்த உர்ஜித் பட்டேல் கால கட்டத்திலும், மத்திய அரசுக்கு மாற்றுவதற்கு முயற்சிகள் நடந்தன. ஆனால், இவர்கள் இருவரும் இந்த நிதியை மாற்றுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், மத்திய அரசுக்கும், உர்ஜித் பட்டேலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, தனது பணியை உர்ஜித் ராஜினாமா செய்து இருந்தார்.

இதையடுத்து, சக்திகாந்த தாஸ் ஆளுநராகப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து ஜலான் கமிட்டி உருவாக்கப்பட்டு, நிதியை மாற்றுவது குறித்து ஆராய்ந்து அறிக்கை கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மத்திய அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்தா தாஸ் இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா டிவிட்டர் பதிவில், பாஜக அரசு தான் செய்த பொருளாதார தவறுகளை ஈடுகட்டப் பணத்தை வாங்கியுள்ளது. இதன் மூலம் ஆர்பிஐ அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பொருளாதார சீரழிவிலிருந்து நாட்டை மீட்க வழிதெரியாமல் பிரதமரும் நிதியமைச்சரும் தவிப்பதாகவும், ரிசர்வ் வங்கியிலிருந்து பணத்தை‘திருடுவதால்’ பிரச்சனையைத் தீர்க்கமுடியாது என்றும், இது மருந்தகத்திலிருந்து ஒரு பேண்ட்-எய்டைத் திருடி துப்பாக்கிச் சூட்டுக் காயத்தில் ஒட்டுவது போன்றது என ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.