லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் இன்று (மார்ச் 23) பதவியேற்றார்.

உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான பினாக்கி சந்திர கோஷ் இந்தியாவின் முதல் லோக்பால் எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதன்படி, அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் பங்கேற்றனர்.

ஊழல், பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாகத் தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 2013 டிசம்பர் மாதம் லோக்பால் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டு ஐந்தாண்டுகளுக்குமேல் ஆன நிலையில், பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், லோக்பால் அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர்.

நாட்டின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரகோஷ் நியமனத்துக்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அவருடன் மேலும் 8 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். நீதிபதிகள் திலீப் பி.போஸ்லே, பி.கே.மொஹந்தி, அபிலாஷா குமாரி, ஏ.கே.திரிபாதி மற்றும் தினேஷ் குமார் ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங், ஐ.பி. கவுதம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக 5 ஆண்டுகள் பணியாற்றிய பினாக்கி சந்திர கோஷ், இவர் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பதவியில் இருந்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு பணியிலிருந்து இவர் ஓய்வுபெற்றார்.