பண்டித ஜவகர்லால் நேருவின் ஆட்சியில் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியை ஒப்பிட்டு இப்படி ஒரு உரிமைக் குரலை எழுப்பி அறிஞர் அண்ணாதுரையால் முழங்கப்பட்டதுதான் மேற்கண்ட தலைப்பு.
கடந்த சில ஆண்டுகளாக , தெற்கும் வடக்கும் பாரபட்சமாக வளர்வதாக பன்முக குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அதைக் காதுகொடுத்துக் கேட்கத்தான் எவருக்கும் நேரமில்லை போலும்.
வேலியில் உள்ள ஓணானை வேட்டியில் விட்ட கதைபோல அங்கொன்றும் இங்கொன்றுமாக வட மாநிலத்தவரை  வேலைக்கு அமர்த்திய காலம் போய், இன்று முழுவதுமாக வடமாநில தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழக தொழில்துறையானது செய்வதறியாது விழிபிதுங்கி நிர்க்கதியாக நிற்கின்றது. இது மெல்ல மெல்ல ஊடுருவும் பிற மொழி அரசியல் என குறிப்பிடுகின்றனர் அரசியல் வல்லுனர்கள்.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின்படி. தமிழகத்தில்  58.2 லட்சமாக இருந்த ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு  வட இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளில் 77.5 லட்சமாகி இருக்கிறது என்கிற அதிர்ச்சித் தகவலை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்தக் கட்டுரையை வாசிக்கும் நாளில் இந்த எண்ணிக்கை மேலும் கூடி இருக்கலாம்.
சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள உணவகங்களின் பணிக்காக ஒடிஷாவைச் சேர்ந்த 100 பேர் அழைத்துவரப்பட்டு ஒரு காலனி போன்ற குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது ஒரு தகவல்.
இது சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டுமே ஆகும். சென்னையில் உள்ள உணவகங்களில் கிட்டத்தட்ட 60 சதவிகிதத்திற்கும் மேல் வடமாநிலத் தொழிலாளர்கள் ஆக்கிரமித்துள்ளதைக் கண்கூடாக காண முடிகிறது. இப்படி வட இந்தியாவில் இருந்து கொத்து கொத்தாக தமிழக தொழிற்சாலைகளுக்காக தொழிலாளர்கள் ‘இறக்குமதி’ செய்யப்படுவதும்.
இங்கே கிடைக்கும் சொற்பக் கூலி அவர்களுக்கு சொர்க்கமாக இருந்தாலும், தமிழகத்தில் முறைகேடாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் பெற்றுவிட முடியும் என்கிற ரீதியில் சுகமான வாழ்விற்காக தமிழகத்தை நோக்கி படையெடுத்து தொடர்ந்து நடைபெற்று வருவதால். தங்களுக்கான வேலை வாய்ப்பை இழந்து வருகிறார்கள் தமிழ்நாடு இளைஞர்கள். இந்தக் கொடுமை ஏந்தத் தேசத்திலும் நடக்கவில்லை என்றே கூறலாம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள், அரசு துறை,டோல்கேட், சிப்காட் தொழில்சாலைகள் என  அனைத்து இடங்களில் வட இந்தியர்கள் ஆதிக்கம் நீக்கமற நிறைந்திருக்கிறது என்றால் மிகையாகாதுதான்.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட இந்தியாவிலிருந்து வந்த ஒரு தொழிலாளி நாகர்கோவிலில் வாக்களித்ததும், அதேசமயம் முன்தோன்றிய மூத்தக்குடியான தமிழர்கள் 40 ஆயிரம் பேருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதையும் ஊடகங்கள் வழியாக கேட்டுக்கொண்டுதான் பயணிக்கிறோம் அவசரகால உலகத்தில்.
ஒரு தொழிலாளிக்கென்று இருக்க வேண்டிய குறைந்தபட்ச சலுகைகளையும், வேலை செய்வதற்கு ஏற்றச் சூழலையும்தான் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை இன்றைய முதலாளிகளுக்குத் தர விருப்பம் இல்லை. இந்தப் பிரச்சினைக்கு மாற்றாகவே வெளி மாநிலத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்துகிறார்கள். வெளி மாநிலத் தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் குடும்பங்கள் இங்கு இருப்பதில்லை.
ஆகையால், கூடுதல் நேரம் வேலை செய்கிறார்கள். வெளியிடங்களில் வேலை பார்க்கும் எல்லாருக்குமே இது இயல்பானது. இந்தியாவில் வேலை தேடி பிற மாநிலங்களை நோக்கிச் செல்வோரின் முதல் தேர்வு இப்போது சென்னைதான். ஏனைய இந்திய நகரங்களைப்போல உள்ளூர்வாசிகளின் கோபம் இங்கு கிடையாது.  “தீவிரவாதம், வேலை இல்லை, கடன் தொல்லை… குடும்பச் சூழல் காரணமாகவே இங்கு வேலைக்கு வந்தோம்” என்கிறார்கள். வெறுமனே தொழிலாளர் பிரச்சினையாக மட்டுமே இதைப் பார்க்க முடியாது. எங்கிருந்தோ வருகிறார்கள், வேலை பார்க்கிறார்கள், திடீரெனக் காணாமல் போகிறார்கள். இவர்கள் எல்லாம் யார்?,  இவர்களின் பின்னணி என்ன…? ஒரு விவரமும் நம் அரசிடம் கிடையாது. இப்படி வருபவர்கள் இங்கு ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு தப்பித்துவிட்டால்! அவர்களை எப்படி நம்மால் பிடிக்க முடியும்? தொழிலாளர்கள் என்கிற வடிவத்தில் பயங்கரவாதம்கூட இங்கு இறக்குமதி செய்யப்படவதும் இப்போது நடைமுறையில் நடந்து கொண்டுதானே உள்ளது!
மற்றொரு பக்கம் முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் மத்திய அரசுப் பணிகளில் முறைகேடாக திணிக்கப்படும் வட இந்தியர்கள். அண்மையில் தமிழக தபால் நிலையங்களில் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் நியமிக்கப்பட்டதும். இவர்கள் தமிழில் நடைபெற்ற தேர்வில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களாக சான்றிதழ்கள் வைத்திருந்தனர் என்கிற தகவலும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகம் தொழில் துறையில் முன்னணி 5 துறைகளின் சங்கத்தின் உயர் பதவியில் இருப்பவர்களும் வடமாநிலத்தவர்கள் தான். ஒரு காலத்தில் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தோடு பயணப்பட்ட திராவிட இயக்கங்கள் இன்று வாய் மூடி மௌனமாக பயணிப்பது எதிர்கால சந்ததியினருக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டும் காணாமல் பயணிக்கிறதோ என்கிற ஆதங்கம் எழுகிறது.
தமிழகத்தின் நகை அடகுத் தொழிலில் 95% விழுக்காடு மார்வாடிகள் வசம்தான் இருக்கிறது. நகைக்கடைகள், எலக்ட்ரிக்கல் பொருட்கள், மின்சாதனப் பொருட்கள், ஜவுளித்துறை என பல்துறையிலும் அவர்களது ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. வளர்ந்து வரும் சமூகக் கட்டமைப்பில் இவை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
தென் இந்திய மாநிலங்களில் இருக்கும் பொருளாதார வளர்ச்சியும், வட மாநிலங்களில் இருக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் இல்லாததும், தென் மாநிலங்களில் தொழில்துறைக்கு போதிய அளவு மனித சக்தி இல்லாதது போன்றவையே பொதுவான காரணங்களாகக் கருதப்பட்டாலும், தென் இந்தியாவில் நிலவும் அமைதியும், சமூகச் சூழல், பருவநிலை ஆகியவையும் பிற ஊரைச் சேர்ந்தவர்கள் வந்து நீண்ட காலம் தங்கத் தூண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் வேலைவாய்ப்புகளுக்காக தமிழகத்தை நோக்கிய வடமாநிலத்தவரின் குடிபெயர்தல் என்பது தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது.
இந்தியா ஒரு விவசாய நாடு என்பதை விட உடலுழைப்பு தொழிலாளர்கள் நிறைந்த நாடு என்பதே மெத்தப் பொருத்தும்.
தற்போதைய சூழ்நிலையில், பாட்டாளி வர்க்கம் பெருந்திரளாக பெருகியுள்ள இந்திய சமூகத்தில், தொழில்நுட்பம் தனது செல்வாக்கினை கிளைவிட்டு வளர்ந்திருக்கிறது இந்திய தேசத்தில்!
உடலுழைப்பு என்பது உணர்வுப்பூர்வமாகவும், மேற்கத்திய கலாச்சார நாகரீக வழியில் வளர்ச்சி அடைந்திருக்கும் சித்தரிக்கப்பட்ட இன்றைய நவீன கால தொழிலாளர் வர்க்கத்தினரும், முதலாளிகளின் நலன்களுக்காகவும் தேசத்தின் பொருளாதார எழுச்சிக்காகவும் வீருகொண்டு போராடுவது தெரிகிறது.!
பெரும்பான்மையோடு நடத்தும் இந்த பணநாயக சிந்தனை அணுகுமுறையில்..! பாட்டாளி வர்க்கமானது சமூக அரசியல், மற்றும் கலாச்சார நிலைமைகளை  தன் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்கான போராட்டமான பாதையாக வகுத்து பயணிக்கிறது என சுருக்கமாக சொல்லலாம்.
மேலும் வட மாநிலத்தவரின் வருகை என்பது  திட்டமிடப்பட்ட ஒரு குடிபெயர்தல் என ஒரு காட்டமான எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார் மதிமுகவின் பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்கள்.
இந்தி பேசுபவர்கள் குறிப்பாக மத்திய அரசு பணிகளில் தமிழகத்தில் வலுக்கட்டாயமாக மறுகாலனியாக்கமாக அமர்த்தப்படுகிறார்கள் என்பது சமீப காலமாக தமிழக இளைஞர்களிடம் ஓங்கி ஒலிக்கிறது.
கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தங்கள் மாநில மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக இயற்றியுள்ள சட்டங்கள் ஒருபுறம் இருப்பினும் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை மற்றும் பணியாளர் தேர்வாணையமானது அளவில்லா வெளிமாநிலத்தவரை அன்போடு அழைத்துக்கொண்டு அமுதத்தை அவர்களுக்குக் கொடுத்து. தன் சொந்த மாநிலத் தொழிலாளர்களுக்கு விஷத்தினை ஊட்டிக் கொண்டிருக்கிறது.
உதாரணமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிசியில் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் ஆங்கிலத்திலும் இந்தியிலுமே குரூப்-1 குரூப்-2 தேர்வுகள் நடைபெற்றதும், அதன் பின்னர் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களுக்கு முன்பு மகாராஷ்டிர அரசு ஒரு சட்டத்தினை அமுல்படுத்தி உள்ளது.
அதன்படி அம்மாநிலங்களில் தொடங்கப்படும் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 80 சதவிகித மகாராஷ்டிர மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க அந்த சட்ட வரைமுறை கூறுகிறது.
அப்படி உள் மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கவும் அந்த சட்டம் வழிவகை செய்யும்படி இயற்றப்பட்டிருக்கிறது
இதற்கு ஒரு படி மேலே போய் கர்நாடக அரசானது.
மாநில குரூப் சி மற்றும் குரூப் டி போன்ற அனைத்துப் பதவிகளும் கன்னடர்களுக்கே வழங்கப்படும் வகையில் சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்காகவே கர்நாடக தொழிற்சாலை நிலையாணை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு 1986 இல் இயற்றப்பட்ட சரோஜினி மகிஷி சட்டத்தினை ஆதரிக்கும் விதமாக சில மாறுதல்களை முன்னிறுத்தி. அரசு, பொதுத்துறை, மற்றும் தனியார் துறையில் உள்ள பதவிகள்  அனைத்திலும் கன்னடர்களுக்கே முன்னுரிமை கொடுக்கும் விதமாக கர்நாடக மாநில தொழில்துறை அரசமைப்புச் சட்டம் வழிவகுக்கிறது.
1968இல் மகாராஷ்டிரா
1986ல் கர்நாடகா
1995 இல் குஜராத்
1999இல் மேற்குவங்கம்
2003-ல் இமாச்சல் பிரதேசம்
2007இல் உத்தராகண்ட்
2008ல் ஒடிசா
2010இல் மத்திய பிரதேசம்
2014 கேரளம்
2015ல் சத்தீஸ்கர்
இறுதியாக 2017ல் ஆந்திரா, தெலுங்கானா ,கோவா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கே அரசு வேலைகளில் முக்கியத்துவம் என அரசு பணியாளர் தேர்வாணைய சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து. பூர்வ குடிகளான உள் மாநிலத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தமிழகத்தில் தற்போதைய அதிமுக அரசினால் நூறு சதவிகித வெளிமாநிலத்தவர்கள் பணியமர்த்தும் விதமாக சட்ட திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர். திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள தொழில்நுட்ப பழகுனர் பதிவுகளுக்கு முழுக்க முழுக்க வடமாநிலத்தவர்களையே தேர்வு செய்திருப்பது தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
பாஜக மத்திய அரசில் அங்கம் வகித்த பிறகு குறிப்பாக தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் நியமிக்கப்பட்டிருப்பதும்.
2014ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த குரூப் டி பணிகளுக்கான  தேர்வில் இரண்டரை லட்சம் தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதும் மறக்க இயலாதுதான்.
தென்னக ரயில்வேயில் 1765 இடங்களில் 1600 வட இந்தியர்கள் தேர்வு செய்திருப்பதுடன் மேலும் தபால் துறைக்கு தமிழில் நடைபெற்ற தேர்வில் பீகார் மாநிலத்தவர் நூற்றுக்கு நூறு சதவிகித மதிப்பெண் எடுத்ததும் அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா?
இதேபோல வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் இந்நேரம் தேச விரோத செயல் என்று முத்திரை குத்தப்பட்டிருக்குமே.!!!
என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விமர்சனம் செய்ததையும், தமிழகத்தில் வட மாநிலத்தவரின் ஆதிக்கமும் குடியேற்றமும் எந்த அளவு வலுவாக நடைபெற்று வருகிறது என்பதை காண முடிகிறது.
சென்னையின் மிகப் பெரிய மால்கள், மல்டிஃபிளக்ஸுகள், பெரிய – சிறிய கடைகள், உணவகங்கள், சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், தொழிற்சாலைகள், அழகு நிலையங்கள்… எங்கும் வேலைகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் வெளி மாநிலத்தவர்கள்தான்!    எப்போதுமே வெளியூர்களில் இருந்து வேலை தேடி வருவோருக்குக் கிடைக்கும் முதல் வாய்ப்பு கட்டுமானப் பணியாகும். சென்னையின் வரலாற்றிலேயே அதிகமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் காலகட்டம் இது. ஆனால், கட்டுமானப் பணிகளில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட அடைபட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. சாதி மத பாகுபாடின்றி சமத்துவம் பரவிக்கிடக்கும்      தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து அதன் மூலம் ஆக்டோபஸ் போல பரவி தமிழக இறையாண்மையை துண்டாட நினைக்கிறது ஆளும் சக்திகள்.
தென் ஆசியாவிலேயே பெரிய தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணியாற்றுவோரில் 70 சதவிகிதத்தினர் வெளி மாநிலத்தவர்கள். சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்யும் இந்தத் தொழிற்பேட்டை சென்னையின் வேலைவாய்ப்புக் கேந்திரங்களில் மிக முக்கியமானது.தமிழ்நாட்டில் இருந்து முன்பெல்லாம் வட மாநிலங்களுக்கு முறுக்கு கம்பெனி, செங்கல் சூளை, போன்ற தொழிற்சாலைகளுக்கு கொத்தடிமைகளாக வேலைக்குப் போன காலம் இருந்தது.
ஆனால் அவர்களுக்கு என்றுமே ஓட்டுரிமை வழங்கியதில்லை பிற மாநிலங்களில்.! அவர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படுத்தினர். ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாகிவிட்டது.
வட இந்தியர்கள் இடம்பெயர்ந்து தமிழகம் நோக்கி வருவது அதிகரித்துள்ளது. இவர்கள் அதிகமாக கட்டுமானப் பணியில் தான் ஈடுபட்டுள்ளனர். தமிழக தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு, 500 ரூபாய் சம்பளம் கேட்கின்றனர். வட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படும் தொழிலாளர்களுக்கு, 250 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கின்றனர். இதன் மூலம் தமிழக உழைப்பளிகளின் உழைப்பு மறைமுகமாக சுரண்டப்படுகின்றது.
ஒசூரில் மட்டும் 30,000 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. இதேபோல் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் வட மாநிலத்தவர்கள்தான் அதிக அளவில் வேலை செய்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
திருப்பூரில் உள்ள பனியன் மற்றும் அது சார்ந்த தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களில் 80 சதவீதம் பேர் வெளியூர் மற்றும் வெளிமாநில மக்கள். முன்பெல்லாம் மதுரை, நெல்லை என்று தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வேலை தேடி தொழிலாளர்கள் அதிக அளவில் திருப்பூரை நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போதோ இந்தியாவின் வறுமை மாநிலங்களான பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிஸ்ஸா, மேற்கு வங்காளம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து திருப்பூரை நோக்கி தொழிலாளர்கள் படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
கீழ்மட்ட வேலைகள்தான் என்று இல்லை, தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட உயர் நிலைப் பணிகளிலும் வெளிமாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. உதாரணமாக தகவல் தொழில் நுட்பத் துறையில் சென்னையில் பணியாற்றுவோரில் 40-50 சதவிகிதத்தினர் வெளி மாநிலத்தவர்கள் என்கிறது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். – நிறுவனத்தின் ஆளெடுப்புத் துறை. இங்கே என்ன ஒரு வேறுபாடு என்றால், கீழ்மட்ட வேலைகளில் ஆதிக்கம் செலுத்துவது வட இந்தியர்கள் என்றால், மேல்மட்ட வேலைகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான்!
அங்கே, இங்கே என்று இல்லாமல் எங்கும் வெளிமாநிலத்தவர்கள் வியாபித்து இருக்கிறார்கள். மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இரவு தோறும் ஏழெட்டு பேருந்துகள் வந்து நிற்கின்றன. அத்தனையும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பயணிப்பவை. முன்போல் அல்லாது இப்போது சென்னை தெருக்களில் சாதாரணமாக இந்தியில் உரையாடி செல்லும் இளைஞர்களை காணலாம் என்று கூறுகிறது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் கருத்துக் கணிப்பு.
பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் துறைகளில் எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்தப் பிரச்சினை மீது ஆழ்ந்த கவனம் செலுத்திவில்லையெனில், தமிழகத்தின் ஒவ்வொரு ரூபாய் வருமானத்திலும் 60 பைசாவை வட மாநிலத்தவர் கைக்குப் போய்ச் சேரும்.
மீண்டும் மீண்டும் நாம் இங்கே உருவாக்கும் வேலை வாய்ப்புக்களையும் சேர்த்து சுரண்டுவது வேதனையிலும் வேதனையான விஷயம்.
போதாதற்கு நம் கல்வி, கல்லூரிகளை வேட்டையாட வசதியான ‘நீட்’ சட்டங்கள் வேறு .
தங்களது சுய லாபத்திற்காக வெளி மாநிலத்தவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும்  தமிழக அரசானது. இங்கே கத்தியின்றி யுத்தமின்றி நம் மண்ணிலேயே நம்மை பொருளாதார சிறுபான்மையினர் ஆக்கி, நம்மை அகதிகளாக்குகிறது இந்திய தேசம்.!
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு.!! இனியாவது தமிழர்களை வாழ வைக்கட்டும்.!!