கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட இன்று (ஏப்ரல் 4) வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. முதன்முறையாக தென்னிந்தியாவைச் சேர்ந்த மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அதேநேரத்தில் இரண்டாவது தொகுதியாகக் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியானது. தென்னிந்திய மக்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே தான் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக இதற்கு விளக்கம் அளித்திருந்தார் ராகுல்.

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்றிரவு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கேரள காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் கல்பெட்டா பகுதிக்கு வந்தார் ராகுல் காந்தி. இன்று காலை முதலே காங்கிரஸ் தொண்டர்கள் அப்பகுதியில் அதிகளவில் குவிந்தனர்.

பின்னர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி, கே.சி.வேணுகோபால், மூத்த தலைவா்கள் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோருடனும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ஊா்வலமாகச் சென்று 11.30 மணியளவில் இன்று மனுத்தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி கேரளாவிலும், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் மே 6ஆம் தேதியும் நடைபெறுகிறது.