தேச துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு வழங்கிய ஒரு வருட சிறை தண்டனை நிறுத்தி வைத்த நிலையில், மாநிலங்களவை எம்.பி தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் வைகோ.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல், வருகிற 18ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். திமுக சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையைச் சேர்ந்த சண்முகமும், வழக்கறிஞர் வில்சனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணிக் கட்சியான மதிமுகவுக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் நேற்று (ஜூலை 5) தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ஓராண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்தது. பின்னர் இந்த தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட எவ்வித சிக்கலும் இல்லாத நிலையில், திட்டமிட்டப்படி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார் வைகோ. இதேபோல, திமுக வேட்பாளர்கள் சண்முகம் மற்றும் வில்சனும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “மாநிலங்களவைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் நலனுக்காகவும், தமிழக நலனை காக்கவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவேன்.” என்று தெரிவித்தார். மேலும், வாய்ப்பு தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.