த்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடந்த கும்பமேளாவின் தூய்மைக்கு காரணமான துப்பரவு தொழிலாளர்களின் கால்களைக் கழுவி அரசியல் ஆதாயம் தேடிக்கொண்ட நரேந்திர மோடி அவர்கள்  மீண்டும் ‘நாட்டின் பாதுகாவலன்’ என்று மற்றொரு அரசியல் ஸ்டண்ட் அடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து பல பத்திரிகைகள் நாட்டின் உண்மை பாதுகாவலர்களின் நிலைகுறித்து கட்டுரைகள் வெளியிட ஆரம்பித்தன. அதில் சில உதாரணங்கள்:

மரத்வாடாவிலிருந்து வெளியேறும் ஆடு மேய்ப்பவர்கள்

நிலத்தின் பாதுகாவலர்களாக கருதப்படும் விவசாயிகளின் நிலை இந்த ஆட்சியில் கண்டுகொள்ளப்படவில்லை என்பதற்கு பல சான்றுகள்  இருந்தாலும் குறிப்பாக மாஹாராஷ்டிய மாநிலத்தில் மரத்வாடா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பல நெருக்கடிகளைச் சந்தித்தவர்கள், பருவ நிலை மாற்றங்களால் குறைவான மழை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைவு என இம்மக்களை இயற்கையே கைவிட்டப்பின் அன்றாட பொழுதைக் கழிக்க பல சிரமங்களையும் துயரங்களையும் அனுபவிக்கிறார்கள். செம்மறி ஆட்டை மட்டுமே நம்பியிருந்த  இம்மக்கள் அதை விற்று உயிர் வாழ வேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டனர்.

‘பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் ஆடுகள், இப்போது 5000 – 6000 வரை மட்டுமே வாங்குகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கர்ப்பமான சில ஆடுகளை முன்பு நல்லவிலைக்கு விற்க முடியும். ஆனால், இப்போது அதுவும் குறைவான விலைக்கே வாங்குகிறார்கள்’ என்பது பல விவசாயிகளின் புலம்பல்களாக உள்ளது.

இந்திய கட்டண அமைப்பு முறையால் 135 மில்லியன் ஊழியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

நிலையற்ற வேலை மற்றும் நிரந்த வருமானம் கிடைக்காத பல அரசு ஊழியர்கள் இந்திய அரசின் கட்டண அமைப்பு முறையால் முழுமையாக குழப்பமடைந்துள்ளனர். பொருளாதார வல்லுநர் ஜீன் டிரீஸ் இதுபற்றி கூறும்போது “முழுக்க முழுக்க தொழில்நுட்ப வளர்ச்சியினால் இணையதளமாகியிருக்கும் தற்போதைய அரசு வேலையானது ஊழியர்களின் நேரடி தொடர்பின்றி இயங்குகிறது. இதனால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எந்தவித பிணைப்புமற்று வெளிப்படை தன்மையில்லாமல் பலவகைகளில் ஊழலுக்கு வழிவகைச் செய்கிறது”  என்று கூறுகிறார்.

நாட்டின் பொருளாதாரப் பாதுகாவலர்களாக கருதப்படும் முதலீட்டாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள்,  ஊழியர்களின் இந்தக் குழப்பமான மனநிலையால்  நாட்டைவிட்டு இடப்பெயர்வு அடைந்திருக்கிறார்கள்.

நீண்ட நேர வேலை குறைவான சம்பளம்

உண்மையான சௌகிதார்கள்(காவலர்கள்) அடிப்படை தேவைக்கூட கிடைக்காமல் நீண்ட நேரம் வேலை பளுவில் சிக்கிக்கொண்டுள்ளனர். நீண்ட நேர வேலை பளு மற்றும் குறைவான சம்பளம், வார இறுதிநாட்கள் விடுமுறை கிடைக்காகதது போன்ற பல பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள்.  ஏடிஎம் வாசலில் பெருகியுள்ள காவலர்களின் நிலை இன்னும் மோசமாகவுள்ளது.

பழிவாங்கப்படும் ஊழியர்கள்

கடந்த மாதம் ராயல் என்ஃபீல்டு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இதில் பங்கேற்ற ஊழியர்கள் 27 பேரை இடம் மாற்றம் செய்தும் 200க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு. அதாவது தங்களுக்கு எதிராக எழும் குரலை உடனே அடக்க முயற்சிக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கம்பெனி வளாகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா மூலமும் யூனியன் மெம்பர்கள் மூலமும் இப்பணியைச் செய்துள்ளது.

இப்படி நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு சௌகிதார் என்ற அடைமொழிமூலம்  ‘மக்கள் பாதுகாவலர்’ என்ற வேஷம் போடுபவர்களுக்கு  மக்கள்தான் சரியான தீர்ப்பை இந்தத் தேர்தல் மூலம் வழங்கவேண்டும்.