சாதி, மதத்தைக் கொண்டு தேர்தலில் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யத் தடைவிதித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்.

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 11ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வரும் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதைதொடர்ந்து, தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியுள்ளன. இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் சாதி, மதத்தைக் கொண்டு பரப்புரை செய்யும் வேட்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று (ஏப்ரல் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதி, மதத்தைக் கொண்டு பரப்புரை செய்யும் வேட்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர் நீதிபதிகள்.

வெறுப்புப் பேச்சுகளைக் கொண்டு பரப்புரை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு எங்களுக்கு அதிகாரம் இல்லையென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசும் அரசியல்வாதிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை எனக்கூறினர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 16) மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத ரீதியான உணர்வுகளைத் தூண்டும்படி பேசிய, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 72 மணி நேரமும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 48 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதைகேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்துக்கு இப்போது அதிகாரம் வந்துவிட்டது என நினைக்கிறோம் என்று தெரிவித்தனர். மேலும் தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிகாரம் என்ன என்பதையும் தெரிந்துகொண்டு விழித்துக்கொண்டுள்ளது என்று கூறிய நீதிபதிகள், அதனால்தான் சரியான நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிராகத் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.