வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளரின் பெயரை அறிவித்துள்ளது.

17ஆவது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் வேலூர் மக்களவை தொகுதியைத் தவிர்த்து 39 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது.

இதற்கிடையில், வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்ததாக அத்தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வரும் 11ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

இந்நிலையில், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தை மீண்டும் வேலூர் மக்களவை தொகுதியின் வேட்பாளராக அறிவித்துள்ளது திமுக. அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என அதிமுக அறிவித்துள்ளது. இந்த இரண்டு பேரும் ஏற்கனவே களத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.