மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையின்  பயிற்சிப்பள்ளியில் இன்று (ஏப்ரல் 6) தொடங்கியது.

2019 மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் வரும் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரங்கள் என நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் களைகட்டியுள்ளது.

நடைபெறும் மக்களவை தேர்தலில் பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் தங்களுடைய சொந்தவூரில் வாக்குப்பதிவு செய்ய முடியாது என்பதால், தபால் மூலமாக தங்களுடைய வாக்குகளை அவர்கள் செலுத்தலாம்.

நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் வரும் 11ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இங்கு வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில், அருணாச்சல பிரதேசம், லோகித்பூரில் உள்ள இந்தோ திபெத் எல்லைப் படையினருக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 6) தொடங்கியது.

லோகித்பூரில் இருக்கும் விலங்குகள் பயிற்சி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வீரர்கள் தபால் ஓட்டுகளைப் பதிவுசெய்தனர். வாக்குச்சீட்டு முறைப்படி பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். அதன்படி, மக்களவைத் தேர்தலுக்கான முதல் வாக்கு அருணாச்சலப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

டிஐடி சுதாகர் நடராஜன் என்ற வீரர் தன்னுடைய வாக்கை முதலில் பதிவு செய்தார். இதன் மூலம் 2019 மக்களவை தேர்தலில் முதலில் ஓட்டுப்போட்டவர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.