இங்கிலாந்தில் நடைபெற்றுவந்த உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் (9.07.2019) நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதைதொடர்ந்து 11ம் தேதி நடக்கவுள்ள இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

ஏகப்பட்ட கணிப்புகளுக்கு மத்தியில் இந்த நான்கு அணிகள் மட்டும் அரையிறுதி வாய்ப்பை பெற்றுள்ளன. மேலும் பல முன்னணி கிரிக்கெட் ஜாம்பவான்கள் கணிப்புப்படி இந்தியா 2019க்கான உலகக்கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதிபெற்ற ஒரே ஆசிய அணி இந்திய அணிதான்.

இந்நிலையில் இப்போட்டிகளுக்கான அம்பார்கள் பட்டியலை ஐசிசி., வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா, நியூசிலாந்து போட்டிகளுக்கு இங்கிலாந்தின் ரிச்சர்டு லிங்வொர்த், ரிச்சர்டு கெடில்போர்க் ஆகியோர் கள அம்பயர்களாகவும், ஆஸ்திரேலியாவின் ராட் டக்கர் மூன்றாவது அம்பயராகவும் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் நைஜல் லாங் நான்காவது அம்பயராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதே போல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போட்டிகளுக்கு இலங்கையின் குமார் தர்மசேனா, தென் ஆப்ரிக்காவின் மராயஸ் எராஸ்மஸ் கள அம்பயர்களாகவும், நியூசிலாந்தின் கிறிஸ் காப்னே மூன்றாவது அம்பயராகவும். அறிவிக்கப்பட்டுள்ளனர், பாகிஸ்தானின் அலீம் தார் நான்காவது அம்பயராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக நடந்துவந்த இப்போட்டிகள் முடிவை எட்டியுள்ளது. அரையிறுதியில் வெல்லும் அணிகள், 14ஆம் தேதி லண்டனில் நடக்கும் இறுதிபோட்டியில் மோதுகின்றன. இதில் வெல்லும் அணியே 2019க்கான உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தையும் பரிசு தொகையையும் பெரும்.