தமிழகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் வெளிநாட்டு குளிர்பானங்களான கோக், பெப்சி விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

உலகமே வியக்கும் அளவுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை மெரினாவில் நடைபெற்ற மாபெரும் போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின்போது தமிழர்களின் பாரம்பரியம் குறித்துப் பேசிவந்த மக்கள், அன்னிய குளிர்பானங்களான பெப்சி மற்றும் கோக் போன்றவற்றை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைதொடர்ந்து, தமிழகத்தில் பெப்சி, கோக் ஆகியவை விற்க மாட்டோம் என வணிக அமைப்புகள் தெரிவித்தன.

காலப்போக்கில், இவை மெல்ல மெல்ல மாறி மீண்டும் தமிழகத்தில் பெப்சி, கோக் ஆகியவை விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில், விழுப்புரத்தில் இன்று (மே 14) செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் வெளிநாட்டு குளிர் பானங்களான பெப்சி, கோக் விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும். இனி வெளிநாட்டு குளிர்பானங்களுக்குப் பதில், உள்ளூர் பானங்களான இளநீர், பதநீர், நுங்கு ஆகியவை விற்பனை செய்யப்படும்.” என்று அறிவித்தார்.

வெள்ளையனின் இந்த அறிவிப்புக்குப் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர்.