கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 11

04/04/2020 சனிக்கிழமை காலை மணி 09 : 00

‘’எழுந்து கிளம்புங்க’’

‘’என்னாச்சு ?’’

‘’ரேஷன்ல பணம் கொடுக்கிறாங்களாம்.’’

‘’அதெல்லாம் ச்சும்மா.  முதல்ல டோக்கன் கொடுப்பாங்க இல்லைன்னா நேர்ல அவங்களே வீடு வீடா வந்து பணம் கொடுப்பாங்க, சி எம்மே சொல்லிட்டாரு, அப்பால போ சாத்தானே, இப்ப தூங்க விடு !’’

‘’ஏங்க அவர் சொல்றத எல்லாம் செல்லூர் ராஜூ கூட கேக்க மாட்டாரு, எனக்கு சொல்ல வந்துட்டீங்க.  மாலா வீட்டுக்காரர் லைன்ல போய் நிக்கிறாராம்.  கன்ஃபார்மா தர்றாங்களாம், பல் தேச்சுட்டு வாங்க டீயத் தர்றேன், குடிச்சிட்டு கெளம்புங்க !’’

வீட்டில் தண்டமாய் இருந்துக்கொண்டு, வரவைத் தட்டிக்கழிக்க இதற்கு மேலும் தர்க்கம் புரிவது சனிக்கே சனி பிடிக்க வைக்கும் செயல் என விளங்கியதால், பர பரவெனக் கிளம்பிவிட்டேன் !

காலை மணி 10 : 00

தலைக்கு மேல் சூரியன், வாடா மாப்ள என்று வரவேற்று அனைவரையும் கைக்குட்டையால் விசிறவிட்டுக் கொண்டிருந்தான்.   வரிசையில் 150 பேர் வரை நின்றிருந்தார்கள்.  அனைவரும் தனிமனித இடைவெளி ஒழுக்கத்தைக் கடைபிடித்ததால் / கடைபிடிக்க வைக்கப்பட்டதால், அந்த வரிசை ரேஷன் கடைக்கருகே தொடங்கி ஒரு கிலோ மீட்டருக்கு அந்தப்புறமாய் நீண்டிருந்தது !

கூட்டத்தைக் கண்டதும் கால்கள் தன்னிச்சையாய் நடுங்க ஆரம்பித்துவிட்டது.  பொதுவாக வரிசையில் நின்று இலக்கைத் தொடும் போட்டியில் நான் மழலைப் பொழுதிலிருந்தே வென்றதில்லை !

ஆமாம், இதைச் சொல்வதிலென்ன வெட்கம் ?

சின்ன வயசுல பாண்டியன் தியேட்டர்ல படம் பார்க்க, அம்மா தொண்ணூறு காசு வரிசைல நின்னா கூட்டமும், பொறுக்கி பசங்களா தலைக்கு மேல ஏறி புகுவானுகன்னு, அப்பவே டாம்பீகமா 1 ரூபா 55 காசு டிக்கெட் வரிசைல போய்த்தான் நிக்கச் சொல்வாங்க.  அப்படியும் கவ்ண்டர் கிட்ட போறப்ப, எனக்கு இதயம் வேகமா துள்ள ஆரம்பிச்சிடும்.  கொஞ்சம் எக்கி உள்ள பார்ப்பேன்.  டிக்கெட் கொடுக்கிறவர் கைல டிக்கெட் கத்தையா இருக்கா, ஒத்தையா இருக்கான்னு ?  அது பெரும்பாலும் ஒத்தையாத்தான் இருக்கும்.  இருந்தாலும் நமக்கு மூணு டிக்கெட்தான, கெடச்சிராதான்னு நினைச்சிக்கிட்டுருக்கும் போதே, போ போ ஹவுஸ்புல்லுன்னு பொடக்குன்னு ஒரு தகரத்த அந்த கவ்ண்டருக்குள்ள செருகுற சத்தம் கேக்கும்.  இத்தனைக்கும் எனக்கு முன்னால இருக்கிறவன் கவ்ண்டருக்குள்ள கைய கூட நுழைச்சிருந்திருப்பான்.  அதுபோல ஒரு முறைல்லாம் இல்ல, ஏகப்பட்ட முறைகள் ஏமாந்திருக்கிறேன்.  ஆட்டுக்கார அலமேலு, தனிக்காட்டு ராஜா, நான் சிவப்பு மனிதன்ல ஆரம்பிச்சு கேளடி கண்மணி வரைக்குமே அது தொடர்ந்தது !

இது ஒரு சாம்பிள்தான், சொல்ல ஏகப்பட்ட வரிசைச் சம்பவங்கள் உள்ளன என்பதால் நிற்கும் முன், உண்மையிலேயே நிவாரண நிதி தர்றாங்களா என கடையை நோக்கி ஒரு நடை போட்டேன் !

‘’என்ன சார் வேணும் ?’’

ஒரு லேடி கான்ஸ்டபிள் மூக்கு வரை பொத்தி, கண்கள் மட்டும் தெரிய, அந்தக் கண்களோ நெருப்புக் குழம்பாய் தகிக்க,

‘’எங்க தெருவுக்கு தர்றாங்களான்னு பாக்க வந்தேன் மேம்’’

‘’என்னா ஒங்க தெரு ?’’

‘’சஞ்சீவராயன் கோயில் தெரு.’’

‘’தர்றாங்க போய் நில்லுங்க, அரிசி கார்டா, சக்கர கார்டா ?’’

‘’ரெண்டும்தான் சார் சார்ரி மேடம்.’’

‘அய்ய’ என்பது போல் அந்த மையிட்ட கண்களால் அவர் பார்ப்பது போல் பட்டது.

‘’எங்கிருந்து சார் வர்றீங்க ?’’

‘’சஞ்சீவ…’’

என்னைத் தொடரவிடாமல், அவருக்கு உதவ இன்னொரு காவலர் உதவிக்கு வந்துவிட்டார்.  சார், சார் அடிக்கிற வெய்யில்ல கடிக்காதீங்க சார், கார்ட காட்டுங்க.  பச்ச கார்டு.  அரிசி கார்டுதான்.  போய் வரிசைல நில்லுங்க.  சாவடிக்கிறானுகல்ல மேடம் ?

காலை மணி 11 : 00

அந்திம பங்குனி திங்கள் வெய்யில் தன் உக்கிரத்தை ஒட்டுமொத்தமாக இறக்க ஆரம்பித்திருந்தது.  ஒரு கூரைப் பந்தலாவது போட்டிருக்கலாம் என்று முன்னால் நின்ற பெரியவரிடம் வாஞ்சையாகச் சொன்னேன்.  என் கெரகம் அந்தாள் ர ர போல ..

‘’ம்க்கும், இந்தியால எந்த கவுருமெண்டுமே கொடுக்காதத இந்த மனுஷன் இவ்ளோவ் சீக்கிரமா குடுக்குறாரு, இதுல போய் பந்தலப் போடு, மோரு குடுன்னு கேக்கறதெல்லாம் நாயமே இல்ல.’’

அடக் கருமாந்திரம் புடிச்சவனுகளா உங்களுக்கெல்லாம் நிரந்தரமா ராஜேந்திர பாலாஜிதான்டா பாலவள அமைச்சர்ன்னு மனசுக்குள்ள சபிச்சிட்டு, வாய விட்டாத்தான்டா வம்பு ? என கைப்பேசியில் ஃபுல் ப்ரைட்னெஸ் ஏற்றி, அதற்குள் மூழ்கினேன் !

நண்பகல் 12 : 50

யார் செய்த நல்லூழோ, வரிசை கடை இருக்கும் தெருவில் நுழைந்தபோது, அந்த தெருவே மர நிழலில் குளித்துக் கொண்டிருந்தது.   அப்பாடா என்று அனிச்சையாய் பெருமூச்சு வந்தது !

கடைக்குள் நுழைய எனக்கு முன்னால் மூன்று பேரிருக்கும் போது, கடையின் ஷட்டரை கடகடவென இறக்கினார்கள்.  ஆஹா, ஊழ்வினை வந்து விடாம உறுத்துதேய்யா என்று நான் மனம் தளர இருந்த நிலையில் அது ஊழியர்களுக்கான மதிய உணவு இடைவேளை, அரை மணி நேரம் பொறுத்தால் போதும் என்று சொன்னார்கள் !

பிற்பகல் மதியம் 02 : 00

ஸ்மார்ட் கார்டை ஒரு மெஷின் மேல் வைத்ததும் நம்முடைய வரலாறு ஒரு திரையில் தோன்றுகிறது.  ஒரு பதிவேட்டில் நம் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு,  கையுறை அணிந்த  பெண்மணி ஒருவர் புத்தம்புது ஐநூறு ரூபாய் தாளிரண்டை உருவி என் கையிலளித்தார்.

ஹிஹி, என்னதான் முகக்கவசம், சானிடைசர் உடன் நான் வந்திருந்தாலும், அந்தப் பதிவேடு, கையெழுத்திட அவர்கள் கொடுத்த பேனாவைத் தொடர்ந்து பல நூறு பேர்,  தங்களின் வெறுங்கைகளை ஆழமாய்ப் பிடித்து தங்களின் உள்ளங்கை ரேகைகளைப் பதித்தனர் !

ஆயிரம்தான் நம்ம எடப்பாடியார் நிர்வாகத்தை நாம் நக்கலடித்தாலும், உரிய காலத்தில் கொடுக்கப்பட்ட இந்த ஆயிரம் ரூபாய், உண்மையாகவே பல சாமானியர்கள் வீட்டில் கேஸ் அடுப்பெரிய நான்கைந்து நாட்களுக்கு நிச்சயம் உதவும் !

மாலை மணி 05 : 00

குளித்து முடித்து மதிய உணவைச் சாப்பிட அந்திமாலை ஆகிப் போயிருந்தாலும், வெற்றிகரமாகச் சாதித்த எனக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கப்பட்டது !

அடேய் பக்தாள்ஸ், லைட்ட மட்டும் ஆஃப் பண்ணுங்கடா.  நீங்கபாட்டுக்கு மெயினையே ஆஃப் பண்ணிட்டு, வெளக்கு புடிச்ச பத்தாவது நிமிஷம், திரும்ப மெயினப் பட்டுன்னு போட்டீங்கன்னா ஒட்டுமொத்த நாட்டோட எலக்ட்ரிகல் சிஸ்டமே புட்டுக்கும்டா லகடபாண்டிகளா என்கிற பலவகையான குறுஞ்செய்திகள் என் வாட்ஸ் அப்பில் வலம் வர ஆரம்பித்தன !

ம்க்கும் காக்கா பிரியாணி துன்னுட்டு பாடினா உன்னிகிருஷ்ணன் வாய்ஸா வரும் ?

இரவு மணி 09 : 00

இன்று மட்டும் இதுவரை மூன்று பேய்படங்களை தைரியமாகப் பார்த்ததாக மகன் பெருமையாகச் சொன்னான்.

’’அடப்பாவிகளா ஏன்டா இப்படி ரத்தவெறி புடிச்சி அலையுறீங்க ?’’

‘’போப்பா.  எல்லாம் சூப்பரா இருந்துச்சி.  சரி, நீயும் உள்ள வா.  எனக்கு தனியா படுக்க பயமாருக்கு.’’

‘’ஓ.. இதுதான் உன் தைரியமா ?  நீ இவ்ளோவ் நேரம் டிவி பாத்தல்ல ?  நான் ராஜா புரோக்ராம் பாக்கப் போறேன்.  அது 12 மணிக்குதான் முடியுமாம், சார்ரி தம்பி, நீ போய் லைட்டப் போட்டுக்கிட்டு கதவ திறந்து வச்சிட்டு தூங்கு டியர்…’’

நள்ளிரவு மணி 11 : 50

ஜானகி, சுவர்ணலதா குரலுக்கெல்லாம் வயதான சித்ரா ஈடாகவில்லையெனினும், அவர் சிரத்தையாகப் பாடியது இதமாகவே இருந்தது.  ஆனால் மனோவெல்லாம் பாவம்.   இந்த நிகழ்ச்சிப் பதிவின் போது எஸ் பி பியுடன் ராஜாவுக்குப் பிணக்கு.  அவரில்லாத குறையை ராஜா நன்கு உணர்ந்திருப்பார் !

கடுமையான களைப்பும், சோர்வும் மிகுந்திருக்கும் வேளையில் மண்ணின் சொர்க்கமாய், தென்றல் வீசும்போது கிடைக்கும் பேரின்பத்தை அளிக்கவல்ல மந்திரம் ராஜா இசையிலுண்டு என்றால் அதை மறுப்பாருண்டோ ??

 

தொடரும்

 

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  29. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  30. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  31. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  32. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  33. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  34. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  35. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  36. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  37. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  38. திடீர் தீபாவளி இரவில்......
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்