சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் வங்கிக்கணக்கில் ஜூன் மாத ஊதியம் ஊதியம் செலுத்தப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளது போக்குவரத்துத் துறை.

சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு ஜூன் மாதத்திற்கான ஊதியம் 60% மட்டுமே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதால், அதிருப்தியடைந்த போக்குவரத்து ஊழியர்கள் திடீரென இன்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீதம் 40 சதவீத ஊதியம் வழங்கப்பட்டால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போக்குவரத்து ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர். இந்நிலையில், ஊழியர்களுக்கு இன்று இரவுக்குள் ஊதியம் வழங்கப்படும் எனவும் அதனால், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் இன்று மதியம் வாபஸ் பெறப்பட்டது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்ததாவது, “ஜூன் மாத ஊதியம் முழுவதையும் இன்று மாலை 5 மணிக்குள் எங்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. அதனால், நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்.” என்று தெரிவித்தது.

சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு மாலை 5 மணிக்குள் ஊதியம் வழங்கப்படும் என அரசு தெரிவித்திருந்த நிலையில், ஜூன் மாத ஊதியம் முழுவதும் ஊழியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளது போக்குவரத்துத் துறை.