சென்னை- சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் வரும் 8ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை – சேலம் இடையே 10 ஆயிரம் கோடி செலவில் எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது மத்திய, மாநில அரசுகள். இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,900 ஹெக்டர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதை தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் பணியையும் நடைபெற்றுவந்தது.

இத்திட்டத்திற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகளும், பொதுமக்களும் நடத்திவந்தனர். இதைதொடர்ந்து, தங்களுடைய விவசாய நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் 6 மாதங்களுக்கு மேலாக நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையில் இத்திட்டத்திற்காக 5 மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடைவிதித்து உத்தரவிட்டிருந்தனர் நீதிபதிகள்.

அதேபோல, இந்தத் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடர மாட்டோம் என மத்திய அரசும் உத்தரவாதம் அளித்திருந்தது. மேலும், ஜனவரி 4ஆம் தேதிக்குள் எழுத்து பூர்வ வாதங்களை அனைத்து தரப்பிலும் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு வரும் 8ஆம் தேதி காலை 10.30 மணியளவில் வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம்.