காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த பரிசோதனை செய்வதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதியின் மூலம், காவிரி டெல்டா மாவட்டங்களின் 40 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான கிணறுகள் தோண்டப்படும்.

இதுகுறித்த அனுமதியை பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கியுள்ளது. அதன்படி, கடலூரில் 35 இடங்களிலும், நாகப்பட்டினத்தில் 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோகார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் கொள்கையை மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அனைத்து வகையான ஹைட்ரோகார்பன் வளங்களையும் ஒரே உரிமத்தின் மூலம் கண்டறிந்து எடுப்பதுதான் இக்கொள்கையின் நோக்கமாகும்.

அதன்படி மொத்தம் 14 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அவற்றுக்கான ஏலம் மற்றும் விண்ணப்ப அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கான அனுமதியை தற்போது வழங்கியுள்ளது.

ஏற்கெனவே புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த தீர்மானித்த மத்திய அரசு, அதற்கான உரிமத்தை பெங்களூரைச் சேர்ந்த ஜெம் என்ற நிறுவனத்திற்கு வழங்கியது. ஆனால், மக்களின் எதிர்ப்பு காரணமாக அத்திட்டத்திலிருந்து ஜெம் நிறுவனம் விலகியது.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்த ஏற்கெனவே பலவகையில் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் இந்த அனுமதியானது கண்டிக்கத்தக்கது.