ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மறு நியமனம் செய்யும் அரசாணைக்குத் தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழகம் முழுவதும் உள்ள 12,616 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் 2,896 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மாதம் 15,000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கத் தமிழக வருவாய்த் துறை செயலாளர் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் செல்வன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கடந்த 2010ஆம் ஆண்டு இதேபோல ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஓய்வுபெற்றவர்கள் இனி நியமிக்கப்பட மாட்டார்கள் என்ற அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. இதை மீறி ஓய்வுபெற்ற ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்கத் தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி அமர்வு முன்பு இன்று (ஜூலை 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, மறு நியமனத்திற்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படாதது பணி விதிகளுக்கு முரணானது என்றும், தற்போதைய தமிழக அரசு உத்தரவை ரத்து செய்து காலியாக உள்ள 2,896 பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்க உத்தரவிட வேண்டுமென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து இந்த மனுவுக்கு மூன்று வாரத்திற்குள் பதிலளிக்கும்படி தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர், வருவாய் துறை செயலாளர், வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.