அவரது மரணத்திற்குப் பின் எழுதப்பெற்ற குறிப்புகள் அவரை நாடகாசியர் எனக் குறிப்பிடுகின்றன. அவரைப் பற்றி முன்பு எழுதிய பல குறிப்புகளும் நாடகாசிரியர் என்றே குறிப்பிட்டிருக்கின்றன. நான் அவரது மேடைக் காட்சிகள் எதனையும் பார்த்ததில்லை. சென்னையின் மார்கழிமாதச் சங்கீதக் கச்சேரிக் காலத்தில் அவற்றிற்கிணையாக முன்னர் நிகழ்ந்த சபாநாடகங்களின் தேவைக்காகப் பலரும் எழுதிய பிரதிகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். அவரும் மாதுபாலாஜி என்பவரும் இணைந்து தந்த சில தொலைக்காட்சித் தொடர்களை அவ்வப்போது பார்த்ததுமுண்டு. இவையெல்லாம் தாண்டி கமல்ஹாசனின் கதை இலாகாவில் செயல்படுபவராக அறியப்பட்டவர். அவரது அபூர்வ சகோதரர்கள் படத்திலிருந்து அங்கத வெளிப்பாட்டுச் சினிமாக்களான வசூல் ராஜா எம்பிபிஎஸ், பஞ்ச தந்திரம், காதலா..காதலா போன்ற படங்களுக்கு வசனம் எழுதுபவராகவும் வெளிப்பட்ட கிரேஸி,  சில படங்களில் கமலோடு நடிக்கவும் செய்துள்ளார். ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தில் கவுண்டமணியோடு இணைந்து அவர் நடித்த காட்சிகள் இப்போதும் நினைவில் இருக்கின்றன.

கிரேஸி மோகனின் எழுத்து, இயக்கம், அன்றாட வாழ்க்கை என அனைத்து வெளிப்பாடுகளும் நகையென்னும் மெய்ப்பாடே. எண்வகை மெய்ப்பாடுகளைப் பட்டியலிடும் தொல்காப்பியம் முதல் மெய்ப்பாடாகக் கூறுவது நகை. அதற்கு உரை எழுதும் பேராசிரியர் பின்வருமாறு கூறுகிறார்: நகையென்பது சிரிப்பு. அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும்,பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப – தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியல்(3). எண்வகை மெய்ப்பாடுகளுக்கு மாறாக ஒன்பதுவகை ரஸாக்களைப் பட்டியலிடும் பரதர் இதனை ‘ஹாஸ்ய ரஸா’ என்கிறது. நாடக இலக்கியத்தின் அடிப்படைகளையும் வகைகளையும் விரிவாகப் பேசும் அரிஸ்டாடில கவிதையியல் நகைச்சுவையை பர்லாஸ்க் – Burlesque- என்கிறது. நிகழ்கால நாடகத் திறனாய்வில் 20 வகையான நகைச்சுவைகள் இருப்பதாகப் பட்டியலிடுகின்றனர். நடிப்பவர்களின் நோக்கம், வெளிப்பாடு, உடல் மற்றும் குரல் மொழிகளைப் பயன்படுத்தும் முறைகளைக்கொண்டு இவ்வகைப்பாடுகள் அமைந்துள்ளன.

கிரேஸி மோகனின் பிரதிகளை நாடகப்பிரதி என வகைப்படுத்துவதில் சிக்கல்கள் உண்டு. அவை, நாடகத்தின் அடிப்படைக் கூறுகளான நிகழ்வெளி, நிகழும் காலம் போன்றவற்றை உருவாக்கும் எத்தணிப்புகள் எதுவும் இல்லாத பிரதிகள். பொதுமக்களோடு தொடர்பு கொண்டிருக்கும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறைகள், சேவைப்பணி நிறுவனங்களில் இருக்கும் விதிகளையும் விதிமீறல்களையும் விமரிசிக்கும் தொனிகொண்ட உரையாடல்கள் கிரேஸி மோகனின் முதன்மையான இலக்குகளாக இருந்தன. அத்தோடு குடும்ப அமைப்புக்குள் இருக்கும் கட்டுப்பெட்டித்தனம் மற்றும் நெகிழ்ச்சி இல்லாத சடங்குகள் மீதான பார்வைகளைக் கொண்ட கிரேஸியின் உரையாடல்கள் அவற்றைக் களையவேண்டும் என்னும் நோக்கம் கொண்டவையும் அல்ல. இவற்றை விமரிசனம் செய்யும் அதே நேரத்தில் தனிமனிதர்களின் எல்லை மீறும் விருப்பங்களும் கூட விமரிசிக்கப்பட்டுள்ளன. எள்ளலும் அங்கதமும் தொனிக்கும் விதமாக உச்சரிக்கப்படும் அந்த நேரத்தில் சிரிப்பலைகளை உண்டாக்கிவிட்டுக் கலையரங்கைவிட்டு வெளியேறும்போது மறந்துபோகக் கூடிய வாய்ப்புகளே அதிகம் கொண்டவை.

சமகாலத்தில் இருக்கும் மனிதர்களின் சில வகைமாதிரிகளின் பேச்சுச் சாதுரியம், பிசகு, மொழிக் குழப்பம், சொல்முரண், சூழல் அர்த்தம் போன்றவற்றால் சிரிப்பை உண்டாக்குவது மட்டுமே அதன் முதன்மையான நோக்கம். அவரது மேடை நிகழ்வுகளிலும் திரைப்படப்பங்களிப்புகளிலும் உருவாக்கிய மனிதர்கள் படித்த – நடுத்தர வர்க்கத்தின் – குறியீடுகளால் முழுமையடைபவர்கள். முழுமையடையும்போது பார்வையாளர்களுக்குக் கேலி, அங்கதம், எள்ளல் எனப் பலவற்றை உண்டாக்கிக் களிப்பூட்டுபவன. அந்தக்களிப்பூட்டும் வேலையைச் செய்த ஒருவரின் மரணம் நினைக்கப்பட வேண்டிய ஒன்று.