2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தின்போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

கடந்த 2002ஆம் ஆண்டு, பிப்ரவரி 27ஆம் தேதி, கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து, குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மதக் கலவரம் ஏற்பட்டது. குஜராத் மாநிலத்தின் தகோத் மாவட்டத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு, தனது 3 வயது குழந்தை உட்பட குடும்பத்தினர் 14 பேருடன், கடந்த 2002ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி சபர்வாத் என்ற இடத்திலிருந்து வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திய ஒரு கும்பல், பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 14 பேரை அந்த இடத்திலேயே படுகொலை செய்தது. அத்துடன், 5 மாதக் கர்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவையும், 12 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியது.

குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழிந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம் மக்கள். இந்தக் கலவரத்திற்கு பின்னர் 2000க்கும் அதிகமான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அதில், பில்கிஸ் பானுவின் வழக்கு முக்கியாமான வழக்காகப் பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2008ஆம் ஆண்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் குற்றவாளிகள் 12 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டனர் நீதிபதிகள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட 11 பேர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பினை உறுதி செய்து உத்தரவிட்டது.

குஜராத் மாநில அரசு பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ரூ.3 லட்சம் இழப்பீடை எதிர்த்துப் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தனது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டார்.

தற்போது பில்கிஸ் பானுவிற்கு 40 வயதாகிறது. அவருக்குப் போதிய கல்வித் தகுதி இல்லை. அவரது குடும்பத்தையும் இழந்துள்ளார். எனவே, அவரது வாழ்வாதாரத்தை உறுதி செய்ய குஜராத் அரசு ரூ.50 லட்சம் இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும்.” என்று தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு அரசு வேலையும், தங்குவதற்கு இடமும் மாநில அரசு வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.