31/03/2020 செவ்வாய்

காலை மணி 10 : 00

வழக்கமான மார்ச்சாக இருந்திருந்தால் இன்றைய நாள் எனக்கு….. சரி நம் அனைவருக்குமே,  மிக முக்கியமான நாள்.   கணக்கு வருடத்தின் கடைசி நாள் என்பதால் ஏகப்பட்ட வேலை இருக்கும்.  TDS, IT ரிட்டன், GST, LIC ப்ரீமியம்கள், சம்பளம், அனைவருக்கும் வருடாந்திரக் கணக்கு பார்த்து பாக்கி தீர்த்தல், போனஸ் & சம்பள மாற்றங்கள் அறிவிப்பு,  அதிலும் நாளை முதல் நாள் என்பதால் அதற்கான சிறப்பு பூசை, இனிப்பு, அலுவலகத்துக்கு வண்ணப் பூச்சு, புதுப் பொருட்கள் வாங்க ஆயத்தங்கள்….. மூச்.  இங்கு ஆழ்ந்த பெருமூச்சு !

மோடி அறிவித்த மூன்று வார ஊரடங்கின் முதல் வாரத்தின் இறுதிநாள், இப்படியாக பூஜ்யமாய் விடிந்தது.  ஆடிட்டரிடம் கேட்டதில் ஜூலை 1 தான் உனக்கு புதுகணக்கு, நல்லா கவுந்தடிச்சு தூங்கு, ஆப்பிஸ் கீப்பிஸ் வந்து தொற்றப் பரப்பாத, டேவிட்சன் தெருவுல ஒரு பாஸிட்டிவ் கேஸ், தெரியும்ல்ல ?  நேற்றிரவு பேசியபோது சொன்னார்.  அப்போது ஏதோ ஒரு கவனத்தில் அதைச் சரியாக உள்வாங்கவில்லை !

காலை மணி 11 : 30

ஆமாம், இரண்டு நாட்களாக வெளியே வருவதால் வீட்டுச்சிறை நாட்கள் என வீட்டைப்பற்றி நிறைய எழுத வாய்ப்பற்று போகிறது.  பரோலில் விடப்பட்ட கைதி போல, கட்டுப்பாடுகளோடு கொஞ்சம் சுதந்திரம்.

ஆக, அலுவலகத்திற்கு நேற்றைய பிஸி கனவுகளோடு வந்தேனா ?  அங்கு ஒரே களேபரம்.  கசகசவென்றிருந்த அந்த மண்டியில் எங்கு பார்த்தாலும் காக்கிச் சீருடைகள், லத்திகள்.

அங்கு கடைகளில் கூட்டம் சேர்க்கவில்லை.  ஆனால் ஒட்டுமொத்தமாக லாரிகள், வேன்கள், மாட்டு வண்டிகள், கை வண்டிகள், மீன்பாடி வண்டிகள் என அத்தியாவசிய மளிகைப் பொருட்களை ஏற்ற இறக்க குவிந்து விட்டார்கள்.  விளைவு, ஊரே மயான அமைதியிலிருக்க, இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் !

பூக்கடை துணை கமிஷனர் தலைமையில் வந்திருந்த படை, முதலில் வண்டிக்கார அப்பாவிகளைப் பந்தாடியது.

எங்க மேல என்ன சார் தப்பு, மொதலாளிமாருங்க கூப்ட்டாங்க, வந்தோம் என்று அவர்கள் கூட்டணி அமைத்தவுடன், கடையேறி அங்கு வேலையாட்களை அடிக்க ஆரம்பித்து விட்டனர் !

முதலாளிகளுக்கு திட்டு மட்டும் விழுந்தது.  அப்போதுதான் அந்த அதிகாரி பேச்சின் வீரியம் புரிந்தது.

” நம்ம பக்கத்து தெருவுல ஒரு கொரோனா கேஸ்.  நேத்து ஆம்புலன்ஸ்ல ஜி ஹெச் போயிருக்கு.  இந்த நேரத்துல இப்படி பொறுப்பில்லாம கூட்டம் சேத்தீங்கன்னா நாசமாத்தான்  போவோம்.  எங்களுக்குத்தான் அதிக கஷ்டம்.  இங்க நடக்கிற ஒவ்வொரு நிமிட நிகழ்வுகளும் போட்டோ, வீடியோவோட மேலிடத்துக்கு போய்டுது.  நாங்க புது பொய் சொல்லில்லாம் சமாளிக்க முடியாது.  ப்ளீஸ் கோஆப்ரேட் பண்ணுங்க.  இப்ப வந்த புகாருக்கு ரெண்டு கடைகள சீல் வைக்கிறோம்.  நாலு பேர அரஸ்ட் பண்றோம்.  உடனடியா எல்லோரும் கடைகள மூடுங்க.  சாயங்காலம்  ஆறுமணிக்கு நீங்க கடைகளைத் திறக்க,  நான் எழுத்துப்பூர்வமா பர்மிஷன் வாங்கித் தாரேன், ஆனா restrictions உண்டு, அதை நீங்க மீறக்கூடாது ”

நண்பகல் மணி 12 : 30

உடனடியாக அனைத்துக் கடைகளும் ஷட்டர் இறக்கப்பட்டு, மண்டி வெறிச்சோடியது.   எனக்கு டிவி பார்ப்பதை தாண்டி வேறென்ன வேலை ?

டெல்லி தப்லீக் ஜமாஅத் கூட்டிய மாநாட்டில் பங்கு பெற்ற பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  இங்கிருந்து சென்றவர்கள் 1500 பேருக்கும் மேல்.  சோதனை செய்யப்பட்டவர்கள் 600 பேர் மட்டுமே.  மிச்சம் 800+ மக்கள் யாரென்றே தெரியவில்லை.

இன்று ஒரே நாளில், அவர்களில் 57 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதால்,  கண்டறியப்படாதவர்கள் அவர்களாக முன்வந்து ஒத்துக்கொள்வதே அவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும்  நல்லது என்றெல்லாம் கடுமையான மிரட்டல்களுடன் விஷப்பரப்புரைகள் நிகழ்ந்துக் கொண்டிருந்தன !

வட இந்தியச் சேனல்களில், இந்நிகழ்வை, முஸ்லீம்களின்  திட்டமிட்ட சதிச்செயல் என்பதைப் போல முட்டாள்தனமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.  இப்படி ஓர் அவலச் சூழ்நிலையில் பொறுப்புடனும் அக்கறையுடனும் மக்களைக் காக்கவேண்டிய அரசுகள், இதிலும் மதவெறிப் பேச்சுக்களைத் தூண்டிவிடுவதின் மூலம், தங்களின் தோல்விகளை மக்கள் கேள்வி கேட்டுவிடாமல் மடை மாற்றத் துடிப்பது புரிகிறது.

அட வடக்கு எப்போதுமே அப்படித்தான், தமிழக ஊடகங்களாவது அரசின் இந்த அய்யம்பேட்டை வேலையை தோலுரித்துக் காட்ட வேண்டாமா ?  அவர்களுமா கொடுக்கப்பட்டச் செய்திகளை அப்படியே வாசிப்பது ?  எத்தனை தண்டனைகள் கிட்டினாலும் திருந்தாத ஆட்சியாளர்களை பின் எப்படித்தான் சீர்படுத்துவதாம் ??

அந்திமாலை மணி 06 : 00

துணை ஆணையர் அறிவுரைப்படி, அனைவரும் மாலை ஆறுமணிக்கு கடைகளைத் திறந்து, இன்றைய காலை போலல்லாது, நெரிசல்களைத் தவிர்த்து, சுயக்கட்டுப்பாட்டுடன் சரக்குகளை ஏற்றி, இறக்க ஆரம்பித்தனர்.

முன்னிரவு மணி 08 : 00

கொரோனா ஒரே சூழலில், ஒருவருக்கு பெரும் ஏற்றத்தையும், இன்னொருவருக்கு கடும் வீழ்ச்சியையும் தந்துக் கொண்டிருக்கிறது.

கடவுளுக்குத்தான் இந்தப் புத்தி உண்டு  என்று பார்த்தால் சாத்தான்களுக்கும் அதே புத்திதான் !

அத்தியாவசிய மளிகைப் பொருட்களெல்லாம் ஒரே வாரத்தில் 25 முதல் 50 % வரை விலைகள் கூடி, இருப்பு கையிலிருந்த அனைவரும் பிஸியான வணிகம் கொளுத்த லாபம் என இந்த ஊரடங்கிலும் ஏற்றம் காண, வாழை மற்றும் பூக்களைப் பயிரிட்ட விவசாயிகள், அது சார்ந்த வியாபாரிகள், ஏஜண்ட்கள், தொழிலாளர்கள் அடியோடு நட்டத்தைச் சந்தித்திருக்கிறார்கள் !

விதைத்தவர்களுக்கு விளைந்ததை அறுக்கும் கூலி அளவுக்கு கூட விலை கிட்டாததால், செடிகளிலேயே அவைகள் காய்ந்து வீணாய்ப் போவதைக் காட்டியபோது ஏ கல்நெஞ்சுக் கொரோனாவே என வசைபாடத் தோன்றியது !

இரவு மணி 09 : 00

நான் இப்படி திடுக்கென அலுவலகம் போய் வருவது மகனுக்குப் பிடிக்கவில்லை.  அரசு உத்தரவை மீறுவது தவறு என்று சங்கிகளைப் போல போதிக்க ஆரம்பித்தான்.

கொரோனா பயத்தில் அக்கம்பக்க குழந்தைகளுடனும் விளையாட யாருமே அனுமதிக்க மறுப்பதால், வீட்டுக்குள்ளேயே விளையாடி, டிவி, செல்ஃபோன் என அனைத்துமே அவனுக்குப் போரடித்துப் போய்விட்டது.  ஸ்கூல் இருந்தா நல்லாருக்கும் என்று ஏக்கத்துடன் சொன்னான்.  ஆமாம், இவர்களுக்கு தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கும் மேலாக விடுமுறை போய்க்கொண்டிருக்கிறது அல்லவா ?  பள்ளியின் இறுதி நாட்கள் மற்றும் தேர்வுகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும்.  இவையெல்லாம் முதலில் இல்லையென்றபோது துள்ளிக் குதித்த அந்த உள்ளம், வெறுமையாய்க் கழியும் இந்த நாட்களை விட அதுவே தேவலை என்று ஏங்க வைத்துவிட்டது.  இக்கறைக்கு அக்கறை பச்சை என்று சும்மாவாச் சொன்னார்கள் ?  அவனுடன் ஒருமணி நேரம் விளையாடியதில், முதல் வாரம் ஒருவழியாக முற்றுப் பெற்றிருந்தது !

 

தொடரும்…..

 

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  29. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  30. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  31. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  32. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  33. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  34. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  35. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  36. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  37. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  38. திடீர் தீபாவளி இரவில்......
  39. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  40. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்