கோயில் வளாகத்திலுள்ள கடைகளை அகற்ற தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியன்று இரவு தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கோயில் வளாகத்தில் இருந்த 36 கடைகள் எரிந்து சாம்பலானது. மேலும் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கலைநயமிக்க தூண்கள், வண்ணப்பூச்சுகள், வீரவசந்தராயர் மண்டபம் ஆகியன முற்றிலுமாகச் சேதமடைந்தன.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கோயில் வளாகங்களில் கடைகள் அமைக்கத் தடைவிதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் மனுதாரர்கள், இந்து சமய அறநிலையத் துறை, தமிழக அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தமிழக கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுவதற்கான அரசாணை மீது இடைக்காலத் தடைவிதித்தது உச்ச நீதிமன்றம். மேலும், விசாரணையின்போது, மனுதாரர்களின் தரப்பில் கருத்துகளை அறிய தமிழக அரசு ஏன் முயற்சி செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 8) விசாரணைக்கு வந்த வழக்கில், கோயில் வளாகத்திலுள்ள கடைகளை அகற்ற கடந்த ஜனவரி 12இல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.