கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, துப்புக் கொடுத்தால் சன்மானம் அளிக்கப்படும் என்றும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், துடியலூர் அருகே பன்னிமடை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஷ்- வனிதா. இவர்களது மூத்த மகள் (வயது 6) திப்பனூரில் உள்ள அரசு பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25ஆம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை காணவில்லை. இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் தடாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் புதூர் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடல்முழுவதும் காயங்களுடன் சிறுமியின் உடல் கிடந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்காக சிறுமியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

நேற்று காலை வெளியான சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. மேலும், சிறுமி கொல்லப்படுவதற்கு முன்பே பல நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும் இந்த அறிக்கைமூலம் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில், கொலை பிரிவுடன், போக்சோ பிரிவையும் தடாகம் காவல் துறையினர் சேர்த்து விசாரணை நடத்திவருகின்றனர். சிறுமியின் வீட்டின் அருகே உள்ள 4 பேரை கைதுசெய்து சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறுமி கொலை தொடர்பாகத் துப்புக் கொடுத்தால் சன்மானம் அளிக்கப்படும் என்றும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நோட்டீஸ் அடித்துள்ள காவல் துறை பகுதியில் ஒட்டியும், மக்களிடம் விநியோகமும் செய்துவருகின்றனர். குற்றவாளிகள் பற்றிய தகவல் தெரிவிக்கவேண்டிய தொலைப்பேசி எண்களையும் அந்த நோட்டீஸில் காவல் துறை வெளியிட்டுள்ளது.