1976 இல் இருந்து பிரெஞ்சு கலாச்சார மையத்தால் வழங்கப்பட்டு வரும் சீசர் விருதுகள் இந்த ஆண்டு கோலகலாமாக பிரான்சில் தொடங்கியது. 12 பிரிவுகளின் அடிப்படையில் திரைப்பட துறைசார்ந்து இயங்குபவர்களுக்கு வருடாவருடம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருது போலாந்து இயக்குநர் ரோமன் பொலன்ஸ்கிக்கு வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அடேல் ஹெனெல் என்ற பிரெஞ்சு நடிகை பொலன்ஸ்கிக்கு விருந்து வழங்கப்பட்டதால் அரங்கிலிருந்து கோபமாக வெளியேறிய காட்சி அனைவரையும் ஆதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அடேல் ஹெனெலின் இந்த செய்கையைப் பார்த்து விழா அரங்கைவிட்டு பல பெண்களும் வெளியேறினர்.

மீடு விவகாரத்தை புதிய உத்வேகத்தோடு மீண்டும் பல இயக்குநர்களின் மீது குற்றச்சாட்டுகளை அடிக்கிக்கொண்டிருக்கும் அடேல் ஹெனெலின் துணிச்சலை கண்டு பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

86 வயதான போலன்ஸ்கி, 1977 ஆம் ஆண்டிலேயே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தண்டனைக்கு முன்னதாக அமெரிக்காவைவிட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல பாலியல் அத்துமீறல்களுக்கு சொந்தக்காரரான பொலன்ஸ்கிக்கு எதிராக இன்னும் தீர்க்கப்படாத வழக்குகள் நிலுவையில் உள்ளது.

பெண்கள் உரிமை சார்ந்த அமைப்புகள் சில, இந்த விருது வழங்கும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு சீசர் விருதுகளுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில் இந்த விழாவில் பங்கேற்காத பொலன்ஸ்கிக்கு ஐந்தாவதுமுறையாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.