யாராலும் மறக்கமுடியாத 2015 இல் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையே மூழ்கடித்த வெள்ளம் முதல் 2017 இல் எண்ணூரிலுள்ள காமராஜர் துறைமுகத்தில் நடந்த மிகப் பெரிய எண்ணெய்க் கசிவு வரை மிக மோசமான சுற்றுப்புறச்சூழல் அழிவுகளை இம்மாநகரம் எதிர்கொள்கிறது. .

இந்த இரு பெரும் நிகழ்வுகள் மட்டுமல்லாமல், சென்னை மாநகரின் பெரும் விரிவாக்கத்தின் காரணமாக அதிகரித்த மக்கள்தொகை நகரத்தின் நீர்நிலைகளையும் சுற்றுப்புற காற்றையும் கடுமையாக மாசுபடுத்தின.

டிசம்பர் 2015-ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, சென்னையிலுள்ள புகழ்பெற்ற கடற்கரைகளான மெரினா மற்றும் எலியட் கடற்கரைகளில்,  பிளாஸ்டிக் பொருட்கள், ரேப்பர்கள், பாட்டில்கள், கவர்கள், உலோகங்கள், ஸ்கிராப் மற்றும் மர பதிவுகள் போன்ற குப்பைகள் மலை போலக் குவிந்து காணப்பட்டன.

அதற்கு ஒரு வருடம் முன்பு ஜனவரி 28, 2017 இல் காமராஜர் துறைமுகத்தில் வெளியே செல்லும் பி.டபிள்யூ. மேப்பல் எனும் சரக்குக் கப்பல் உள்ளே வரும் எண்ணெய்க் கப்பலான டான் காஞ்சிபுரத்துடன் மோதியதில் மொத்தம் 251.46 டன் எடையுள்ள கருத்த பிசுபிசுப்பான எண்ணைக் கொட்டி எண்ணூர் கடற்கரை முழுவதும் பரவியது.

அப்படிக் கொட்டப்பட்ட எண்ணெய் கசிவுகள் பெரும்பாலும் கையால் நீக்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன; 2000 க்கும் அதிகமான தன்னார்வலர்கள் மற்றும் தொழிலாளிகள் குவளைகள் மற்றும் வாளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அதை அகற்றினர். இருப்பினும், அந்த நச்சுத்தன்மை  ஆலிவ் ரிட்லி ஆமைகள் மற்றும் பிற கடல் விலங்குகளைச் சென்னை கடற்கரையில் கொன்றது.

மாசுபட்ட கொசஸ்தலை ஆறு

136 கிலோமீட்டர் நீளமுள்ள கொசஸ்தலை ஆறு தான் சென்னை, திருவள்ளூர் மற்றும் சில வட ஆற்காடு தாலுக்காக்களுக்கு முக்கிய நீர் ஆதாரம். ஆந்திராவில் இருந்து இந்த நதி உருவாகி தமிழ்நாட்டின் வழி பாய்ந்து எண்ணூர் கடற்கரை வழியாக கடலில் கலக்கிறது. சென்னை பெருநகரப் பகுதியான கூவம் ஆற்றில் நுழையும் இந்த நதி, மாவட்டத்தின்  மிகவும் மோசமான நீர் நிலைகளில் ஒன்றாகும்.

டிசம்பர் 2017 ல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி கொசஸ்தலை ஆறு, தொழிற்துறை கழிவுப்பொருட்களை விட மோசமாக மாசுபட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்பகுதியில் எடுக்கப்பட்ட மொத்த 20 மாதிரிகளில், கொசஸ்தலை ஆற்றிலிருந்து பெறப்பட்ட அனைத்து ஐந்து மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஈயம், பாதரசம் மற்றும் ஆர்சனிக் மிக அதிக அளவிலிருந்ததை கண்டறிந்தனர்.

பெருகிவரும் கொடுங்கையூர் குப்பைமேடு

கடற்கரையிலிருந்து நகரத்திற்குள் வருவோமேயானால், சென்னை நகரத்தின் மாபெரும் குப்பை கூளமான கொடுங்கையூரில், 12 மில்லியன் கன மீட்டர் கழிவுப்பொருட்கள், 30 வருட காலமாக இங்கே கொட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 2018 இல் இங்கு நடத்த தீ விபத்து இந்தப் பகுதியை ஸ்தம்பிக்கச் செய்தது. இப்பகுதி மக்கள் எரியும் அந்த நச்சுப் புகையினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் தாங்க முடியாத துர்நாற்றம் காரணமாக அந்த பகுதியைவிட்டே ஓடினர்.

மாநில அரசு பெப்ரவரி 2019 அன்று இதற்காக 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. நகரத்தின் திடக் கழிவுகள் மேலாண்மைக்கும், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் இருக்கும் குப்பை கூளங்களை மறுசீரமைப்பதற்கும் மீட்பதற்கும் அந்த நிதி செலவிடப்பட உள்ளது.

வேலை வாய்ப்புகள் காரணமாகப் பிற ஊர்களிலிருந்து சென்னைக்குத் திரண்டுவரும் மக்கள்தொகையைச் சமாளிக்க இந்த நகரத்தின் கட்டமைப்பு தடுமாறுகிறது. அரசுகளும் கடும் மெத்தனமாக இருக்கின்றன. இதன் விளைவே இந்த அழகிய நகரத்தின் சீர்கேடு. எண்ணற்ற தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் கடுமையாக முயன்றாலும் இந்த சீர்கேட்டின் தாக்கத்தைக் குறைக்க முடியவில்லை. மக்கள் தங்கள் பொறுப்பை உணர்வதும் அரசு இயந்திரம் முழுமையாகவும் உண்மையாகவும் செயல்படுவதும்தான் இதைக் குறைக்க முடியும்.