மூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில் பதிவிடப்படும் சர்ச்சைக்குரிய பதிவுகளையும், கணக்குகளையும் அந்நிறுவனம் நீக்காவிட்டால், அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு.

சர்ச்சைக்குரிய கருத்துக்கள்

நாட்டில் நடக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் ஊடகங்கள் வெளியிடுவதை போன்று சமூக வலைதளங்களிலும் பலர் வெளியிடுகின்றனர். ஒரு செய்தி ட்ரெண்ட் ஆவது என்றால் அதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளம்தான். இதில், ட்விட்டரில் பதிவிடப்படும் கருத்துகள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், ட்விட்டரில் பதிவிடப்படும் பல கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளன. மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்களில் பல்வேறு கணக்குகள் போலியாக ட்விட்டரில் உருவாக்கப்பட்டு, சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிடப்படுகின்றன. இந்தச் சம்பவம் பல்வேறு விவாதங்களுக்கு உள்ளாகிறது.

7 ஆண்டு சிறை தண்டனை

2019 மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தேர்தல் நெருங்கும் வேளையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் ட்விட்டரில் பதிவிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டத்துறை கடிதம் எழுதியிருந்தது. அதில், ட்விட்டரில் பதிவிடப்படும் சர்ச்சைக்குரிய பதிவுகள் மற்றும் கணக்குகளை நீக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை ட்விட்டர் நிறுவனம் இதை நிறைவேற்றவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டிய நிலையில், சர்ச்சைக்குரிய பதிவுகளையும், கணக்குகளையும் அந்நிறுவனம் நீக்காவிட்டால், அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் சில கருத்துக்கள் இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராக உள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டால், தொழில்நுட்ப சட்டம் 69A-வின் படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரித்த மத்திய அரசு, ட்விட்டர் மட்டுமல்லாமல் பேஸ்புக், வாட்ஸ் அப், ஆகிய நிறுவனங்களும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.