புனேவில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரியும் தொழிலாளரை மனித மலம் உண்ணச் சொல்லி கட்டாயப்படுத்திஅச்சூளையின் முதலாளி, காவல்துறையினரால் கைது செய்யபட்டார்.

புனே மாநிலம் ஹிஞ்சோடி கிராமத்தில் உள்ள செங்கல் சூளையின் முதலாளி, சந்திப் பவார்(40). இவரின் செங்கல் சூளையில் பணிபுரிபவர், சுனில் பவாலே(22). இவர் கடந்த புதன்கிழமை(மார்ச்,13) அன்று உணவு சாப்பிட்டுவிட்டு வேலைக்கு தாமதமாக திரும்பியுள்ளார். இதனால் கோவமடைந்த பவார், பவாலேவையும் பவாலேவின் தந்தையும் மலம் உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்தியுள்ளார். இருவரும் மலத்தை உண்ண மறுத்ததால் அவர்களை அடித்துள்ளார், பவார். வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாததால் வேறு வழியின்றி மலத்தை உண்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து பவாலே கடந்த வியாழனன்று, சமூக ஆர்வலர் ஒருவரின் உதவியுடன் ஹிஞ்சோடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பவாரை, பிரிவு 323( தானாகமுன் வந்து காயப்படுத்துதல்), பிரிவு 504(சமாதானத்தின் மீறலை தூண்டி, வேண்டுமென்றே அவமதித்தல்) மற்றும் பிரிவு 506(குற்றவியல் அச்சுறுத்தல்) ஆகிவற்றின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து பவாரின் சகோதரி கூறுகையில், “பவாலே மூன்று நாட்களாக வேலைக்கு வரவில்லை. கடந்த வியாழனன்று வேலைக்கு திரும்பிய பவாலே குடித்துவிட்டு வந்திருந்தார். அவரை வேலையை கவனிக்கச் சொன்னப்போது என் அம்மாவிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்தார். இதனால் கோவமடைந்த என் சகோதரன் பவார், அவனை மலம் உண்ணச் சொல்லி தண்டித்தார்” என்றார்.

இதனை விசாரித்து வரும் துணை கமிஷனர் அஷ்வினி ராக் கூறுகையில், ” இது மிகவும் உணர்வுபூர்வமான ஒரு விஷயம் என்பதால் இதனை பல கோணங்களில் விசாரித்து வருகிறோம்” என்றார். மேலும், பவார் வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தின்முன் ஆஜர் படுத்தப்பட்டார். மார்ச், 18 வரை போலீஸ் காவலில் இருப்பார் என தெரிவித்தார்.