அசைவறு மதி

கரிமேடு மார்க்கெட் அருகில் இருக்கும் மதுரை முத்து துவக்கப்பள்ளியில் தான் படித்தேன். ஐந்தாம் வகுப்பு அப்பொழுது.

என்னடா எப்ப பார்த்தாலும் கதை சொல்கிறான் என்பவர்களைப் பசித்தப் புலி திண்ணட்டும் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார் என்பதை நினைவுகூற விரும்புகிறேன். ஒரு பெரிய அறை.  அதில் இரண்டு வகுப்புகள் 5 A 5 B. நடுவே ஒரு சின்ன மரத்தாலான ஸ்க்ரீன் போட்டு மறைத்திருப்பார்கள்.

அறையின் நடுவே அந்த ஸ்க்ரீன் பாதி தான் வந்திருக்கும்.

ஆதலால் கடைசி நான்கு வரிசை மாணவர்களின் 5 ஏ 5 பி எல்லைகள் படு சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வகுப்பையும் பார்த்துக்கொள்ளலாம். இந்த வகுப்பையும் பார்த்துக்கொள்ளலாம்.

நான் 5 ஏ. ஆயுதலட்சுமி டீச்சர்.  பெயருக்கேற்ற மாதிரி ஹிம்சைவாதி டீச்சர் . 5பி டீச்சர் சகுந்தலா டீச்சர்.

அஹிமைசைவாதி போல் தான் தெரிவார். ஆனால் ஒரு மர ஸ்கேலால் பக்கத்து வகுப்பு மாணவனை ஆராதிக்கும்பொழுது பார்த்திருக்கிறேன்.

இதில் ஒரு டிஸ்கி. சகுந்தலா டீச்சரின் மகள் என் அப்பாவின் மாணவி. ஆதலால் எங்கள் குடும்ப நண்பர் என்ற அந்தஸ்து எனக்கு இருந்தது. வீட்டிற்கு வந்தால் அவரை ‘அத்தை’ எனவும் பள்ளியில் ‘டீச்சர்’ எனவும் அழைக்கப் பணிக்கப்பட்டிருந்தேன்.

ஆனால் 5 ஏ வகுப்பைச் சார்ந்த எனக்கு ‘ஆயுத லட்சுமி’ டீச்சருக்கு ஏதும் மகளோ மகனோ இருந்து அவர் என் தந்தையிடம் ஏன் படிக்கவில்லை என்ற ஏக்கம் இருந்தது.

நம் மனம் எப்பொழுதும் அப்படித்தான். நமக்கு ஒரு சலுகை கிடைக்கும். அதில் லயிக்கத் தோன்றாது. இல்லாவிடில் நாம் லயிப்பதை நம்மை உணரவைக்காது. மாற்றாக கிடைக்காத ஒரு விசயத்தில் சலுகையை எதிர்பார்த்து ,இருக்கும் சலுகைகளை நரகமாக்கிக்கொள்ளும்.

தினமும் காலையில் பள்ளியில் வாய்பாட்டு வகுப்பு உண்டு.

“ஓரெண்ட ரெண்டு, ஈரெண்ட நாலு’ என ஆரம்பித்து பதினாறு பதினாற 256 என்று வரை சொல்ல வேண்டும்.

அந்த அரைமணி நேரம் 5 ஏ வகுப்பிற்கும் 5பி வகுப்பிற்கும் இடையில் தொடுக்கிக்கொண்டிருக்கும் ஸ்க்ரீன் விலக்கப்படும்.

வரிசையாக ஒரு மாணவன் எழ வேண்டும்.

இரண்டாம் வாய்பாட்டைச் சத்தமாகப் பார்க்காமல்  சொல்லவேண்டும். ‘ஓரெண்ட ரெண்டு’ எனச் சொல்வான்.

ஒட்டு மொத்த இரு வகுப்பு மாணவர்களும் ‘ஓரெண்ட ரெண்டூஊஊஊ’ எனக் கத்துவோம்.  இப்படி அந்த மாணவன் பதினாறு இரண்ட முப்பத்திரண்டு வரைச் சொல்வான்.

அடுத்த மாணவன் எழுந்து மூன்றாம் வாய்பாடு சொல்ல அனைவரும் சொல்வோம். இப்படி ஒவ்வொருவனாக எழுந்து பதினாறாம் வாய்பாட்டின் பதினாறாம் நிரல் வரை சொல்லவேண்டும். எழுந்து சொல்பவன் தவறாகச் சொன்னால் அங்கேயே பூஜை நிகழும். இரு தரப்பு மாணவர்களும் வேடிக்கை பார்ப்பது கூடுதல் ரணம்.

ஒருவன் சொல்லும்பொழுதே அடுத்த வரிசை மாணவர்கள் ஒவ்வொரு எண்ணாக எண்ணி தனக்கு எந்த வரிசை வரும் என்று அதைப் படித்துக்கொண்டிருப்பார்கள். இரண்டாம் வாய்பாடு ஐந்தாம் வாய்பாடு பத்தாம் வாய்பாடு வருபவர்களைக் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் போல் நாங்கள் வேடிக்கைப் பார்ப்போம்.

இப்படித்தானே நாம் எப்பொழுதும் வாழ்க்கையில் எதுவுமே எளிதாக நடந்துவிடாதா என்றுலாம் அமர்ந்திருப்போம். அப்படி பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது லாவகமாக நடந்துவிட்டால் அவர்களை அப்படி ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் போலும் நமக்கு அப்படி நடக்காவிட்டால் ஏதோ சாபம் நம்மைப் பிடித்தலைகிறது என்றுதானே சொல்லிக்கொள்வோம்.

அந்த வகையில் நான்லாம் சபிக்கப்பட்டவன். பதினொன்றாம் எண்ணிற்கு பிறகு தான் வாய்பாடு வரும்.

பொதுவாக அந்தச் சமயத்தில் இரு டீச்சர்களும் அவரவர் வேலைகளில் இருப்பர். ஆனால் காது இங்கு தான் இருக்கும்.

ஒரு முறை என் பக்கத்தில் இருப்பவன் பதின்மூன்றாம் வாய்பாடு. அவன் எழுந்து சொல்ல ஆரம்பித்தான். நான் மெதுவாக வாய்பாட்டு புத்தகத்தை அடியில் வைத்து பதினான்காம் வாய்பாட்டைப் படிக்க ஆரம்பித்தேன். அடுத்து நான்தானே.

என் நேரம். பதின்மூன்றாம் வாய்பாடு சொல்லிக்கொண்டிருந்தவன் 6×13 78 என்பதற்குப் பதிலாகப் பயத்தில் 58 என்றுவிட்டான்.

கேட்டுக்கொண்டிருந்த மொத்தமாணவர்களில் பாதி பேர் அது தவறு எனப் புரிந்து சொல்லவில்லை.  மீதி பாதி ரகம் ஆட்டுக் கிடை போல். 58 எனக் கத்தியது.  ஆயுத டீச்சர் திரும்புகிறார்.

சகுந்தலா அத்தை திரும்புகிறார்.

கருமமே கண்ணாயிரமாய் நான் பதினான்காம் வாய்பாட்டைப் படித்துக்கொண்டிருந்தேன். சில சமயங்களில் அப்படித்தான். நாம் உண்டு நமது வேலை உண்டு என்றிருப்பதில் சமூகத்தில் என்னென்ன முன்னேற்றங்கள் நடைபெறுகின்றன என்ன் விசயத்தில் சமூகத்தில் பாதிப்புகள் நடக்கின்றன என்றேல்லாம் நாம் பார்ப்பதில்லை. தனிமனித முன்னேற்றம் அல்லது ஒழுக்கம் என்பது சமூகத்தையும் சார்ந்து தான் அமையும்.

ஆயுத டீச்சர் ஒரு சத்தம் கொடுத்தார். ஒட்டுமொத்த அறையும் மயான அமைதிக்குத் திரும்பியது. நான் பதினான் காம் எண்ணிலிருந்து 5 ஏ க்கு வந்தேன்.  கொஞ்சம் பிரச்சினையை உள்வாங்குவதற்கு தாமதமானது. எருமை மாடு என்று நின்றவனைத் திட்டினார். ஆறு பதின்மூன எவ்வளவுடா என்றார் டீச்சர்.

நின்ற நண்பன் அப்படியே ஸ்தம்பித்துப் போனான். அவனுக்குக் கையும் காலும் ஓடவில்லை. சொல்லப்போனால் அவன் என்னைவிட நன்றாகப் படிக்கக்கூடியவன். ஓர் ஓட்டத்தில் , நிகழ்வில் ஏதாவது சின்ன தடை இருந்தால் அவ்வளவுதான் சிலர் ஸ்தம்பித்துப் போய் விடுகிறார்கள் அல்லவா. நிதானத்துடன் இருத்தல் தான் அசைவறுமதியா என்ன?

அவனால் சரியானப் பதிலைச் சொல்லமுடியவில்லை.

ஆயுத டீச்சர் என்னை எழுப்பி ஆறு பதிமூண எவ்வளவு பழனிக்குமார் என்றார். நான் வெகு சுட்டி . 78 டீச்சர் என்றுவிட்டு சகுந்தலா அத்தையையும் ஒரு பார்வை பார்த்தேன். அவர் கவனிக்கவில்லை. ஏதோ அட்டெண்டன்ஸ் நோட் பார்த்துக்கொண்டிருந்தார். ஆயுத டீச்சர் என் பக்கதில் நின்ற நண்பனைத் திட்டிவிட்டு நின்றுகொண்டே படி என்றுவிட்டு என்னை ஆரம்பிக்கச் சொன்னார்.

நான் தான் பிரகஸ்பதி ஆயிற்றே. ஒரு பதினால பதினான் கு னு கத்தினேன்.

எருமை….

இப்பொழுது ஆயுத டீச்சர் என்னை அப்படி அழைத்தார்.

ஒரு பதினான் க பதினாலு தான எதுவும் மாத்திட்டாய்ங்களா என்பது போல் பார்த்தேன்.

பதின்மூன்றை முடிக்காம பதினாலுக்கு போயிட்ட…பதின்மூணை முடி என்றார்.

என் தலையில் இடி விழுந்தது. கிட்டத்தட்ட பதினொன்றாம் வாய்பாடு சொல்ல ஆரம்பித்தவனிலிருந்து எண்ணி பதினான்கை மென்று தின்று கொண்டிருந்தவன். இந்த பூலோகத்தில் பதினொன்றிற்கு அடுத்தபடி பதினான்கு என்று இருந்த தருணம் அது.

நம் எதிர்பார்ப்புகளை எல்லாம் நம் எதிர்காலத்தின் மேல் பூசி மெழுகி இப்படித்தான் இருக்கவேண்டும் என வாழ்வாதிக்க மனப்பான்மையை வளர்த்துக்கொள்கிறோம். பிசிரளவு பிறழ்வாய் நிகழ்ந்தாலும் நம் ஒட்டு மொத்த ஓட்டமும் தடைபெறுகிறது.

இப்படியெல்லாம் தத்துவம் பேச முத்துப் பள்ளியில் நேரமில்லை. பதின்மூன்றை ஆரம்பிக்கவேண்டும்.

ஒரு பதின்மூண பதின்மூணு கத்தினேன்

ஒட்டுமொத்த அறையும் எதிரொலித்தது.

மூணு பதின்மூண முப்பத்தொன்பது சொல்லும்பொழுது பக்கத்திலிருப்பவன் எதில் தவறிழைத்தான் என மனம் யோசிக்க ஆரம்பித்திருந்தது.

உளவியலில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது என்று பாருங்கள். நமக்குத் தெரிந்த வாய்பாடு. இன்னொருவன் எதில் தவறிழைத்தான் என ஆராய்கிறது.

இந்திய வீரன் வெகு பாதுகாப்பாய் பாகிஸ்தான் எல்லையைக் கடப்பதுபோல் ஆறு பதின்மூண எழுபத்தெட்டு எனக் கத்தினேன். அடுத்தவன் தவறிழைத்ததைக் கண்டம் என நினைத்தபடி அதைத் தாண்டினேன்.

என் நினைவு முழுக்க ஆறு பதின்மூணில் இருந்தது.

அதன் விளைவு ஏழு பதின்மூண 91 க்குப் பதில் 81 எனக் கத்திவிட்டேன்.

நன்றாகத் தெரிந்த விசயத்தை நிதானமிழந்து செய்தாலோ பதற்றத்துடன் செய்தாலோ நேர்மறை விளைவுகள் கிடைப்பதில்லை.

இந்த எருமைக்கு என்னாச்சு என்ற சத்தம் கேட்டது.

நம்ம ஆயுத டீச்சர் தான்.

என் கவனம் சகுந்தலா அத்தைப் பக்கம் திரும்பியது.

நீங்கள் அனுமானிப்பது சரி.

நான் சரியானப் பதிலைச் சொன்னபோது கவனிக்காத அத்தை ஒரு தவறானப் வினைக்கு சகுந்தலா டீச்சராக என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

நம் வெற்றிகளையும் பெருமைகளையும் கண்டுகொள்ளாத இந்தச் சமூகம் தான் நம் தவறுக்கான நேரத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும்.

அப்பாட்ட சொல்லனுமா என்றார்.

91 என்று பதிலளித்தேன்.

ஒரு எருமையோடு கருணை வழங்கப்பட்டு பதின்மூன்றை முடிக்க அனுமதிக்கப்பட்டு சொல்லி முடித்தேன்.

பதின்மூன்றைவிடக் கடினமானது பதினான்காம் வாய்பாடு. அதில் அத்துபிடி. ஆனால் பதின்மூன்றில் சறுக்கியதில் சலித்துக்கொண்டேன்.

நமக்கு எது எந்த நேரத்தில் சறுக்குமெனத் தெரியாது.

எல்லாமே மிகச் சரியாக நாம் எதிர்பார்ப்பது போல் நடந்துவிட்டால் சுவாரஸ்யமே இல்லாமல் போய்விடும்.

சறுக்கும் தருணங்களை அப்படியப்படியே எதிர்கொள்வதில் நிதானம் வேண்டும். வெற்றி நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் தோல்விதான் கற்பிதங்களையும் சுவாரஸ்யங்களையும் வாழ்வு குறித்தானப் பிடிப்பையும் தரும். வெற்றி குறித்தான மன எரிபொருளை அதுவே ஊட்டும்.

இன்னொரு சுவாரஸ்யம் ஏழு பதின்மூன்றில் இருக்கிறது.

2004ம் வருடத்தில் மிகப்பெரிய மருந்து நிறுவனத்தில் மூன்றுகட்ட நேர்முகத்தேர்வில் தேர்வாகி கடைசிகட்ட நேர்முகத் தேர்விற்காக மும்பையில் அழைக்கப்பட்டேன்.

அந்நிறுவனத்தின் இந்திய சேல்ஸ் மேனேஜர் அறை.

கிட்டத்தட்ட நான் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டேன்.

ஒப்புக்காக உங்களை அறிமுகப்படுத்த உங்கள் ஆங்கில அறிவையும் ஒரேஒரு கேள்வியும் கேட்பார் என்றார்கள்.

சிவப்பாய் அமர்ந்திருந்த ஆறடி ஆஜபாகுவான்

டெல் மீ பெழனிக்கொமார்…..செவன் தேர்ட்டீன்ஸார்…(7*13) என்றார்.

மறுநாள் அந்த நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட  மருந்துவிற்பனை பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் இருந்தேன்.

அசைவறுமதி தொடரும்….

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
  2. "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
  3. "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
  4. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
  5. யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
  6. தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
  7. உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
  8. குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
  9. உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
  10. கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
  11. பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
  12. நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
  13. உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
  14. ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
  15. 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
  16. இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
  17. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்