மனிதர்கள் நாய்கள் மீது செலுத்தும் அன்பிற்கு ஈடுயிணை இல்லை என்பது வரலாறு. அதேபோல் நாய்கள் மனித இனத்தின்மீது செலுத்தும் விசுவாசத்தையும் குறைத்து சொல்லிவிடமுடியாது. தமிழர்களின் வரலாறுதொட்டே நாய்களை வீட்டுபிராணியாக வளர்த்துவருகிறார்கள். நாய்களை குடும்பத்தில் ஒரு அங்கமாக சேர்க்கும் அளவிற்குப் பாசத்துடன் பல வீடுகளில் இன்றும் வளர்க்கப்படுகின்றன.

நாய்கள் பலவகைகள் உண்டு, நாய்களுக்கென்று தனி குணாதிசியங்கள் உண்டு, மனிதனைபோல நாய்களும் முழுமையாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் மனிதர்களுடன் ஒட்டிஉறவாடி வரும் நாய்கள் தற்போது மனிதர்களைக் கவர அவற்றின்  இரு கண்கள் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டு விஞ்ஞானிகள் சேர்ந்து நடத்திய ஆய்வு கூறுகிறது.

பரிணாம வளர்ச்சியின் கோட்பாட்டின்படி, எல்லா உயிருள்ள பொருட்களும் காலத்திற்கேற்ப பயன்பாட்டிற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கின்றன. பொதுவாக நாய்களின் கண்களைப் பார்த்தே அவற்றின் குணங்களை எளிதில் கண்டறியலாம். மனிதர்களைப்போலவே நாய்களும் கண்களிலேயே தான் கோபமாக இருப்பதாக, சந்தோசமாக இருப்பதாக, கவலையுடன் இருப்பதாக, ஏன் பொறாமையில் இருப்பதாகக்கூட காட்டி விடுகின்றன.

பல வருடங்களாக மனிதர்களுடன் பழகி, தன் விசுவாசத்தை வெளிப்படுத்திய நாய்களுக்கு தற்போது மனிதர்கள் மூலமாக பரிணாம வளர்ச்சியை எட்டியிருப்பது வரவேற்கத்தக்க விஷயமாகும்.