எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்; எப்போது பார்த்தாலும்ஐயோ ரொம்ப வேலைகள் இருக்குதுங்கஎன களைப்பாக சொல்வார். ஆனாலும் ஒரு உதவி கேட்டால் முடியாதென்று சொல்ல மாட்டார் – “சரிங்கஉடனே பண்ணுவோம். நாளைக்கு வாங்கஎன்பார். இவ்வளவு பிஸியானவர் எப்படி நமக்கு உதவுவார் என நாம் குழம்பாதபடி அவர் பரிபூரணமான அன்புடன் அதைச் சொல்வார். அடுத்தடுத்த நாட்களில் அவரை வைத்து வேலை சுலபத்தில் முடியாது என புரிந்துகொள்வீர்கள். ஏனென்றால் உங்களைப் போன்றே வேறு பலருக்கும் அவர் பல உதவிகளை ஒத்துக்கொண்டிருப்பார். இதுபோக அவரைச் சந்திக்கவோ சும்மா பேசவோ யாராவது வந்தாலும் தன் அத்தனை வேலை சுமைகளுக்கு நடுவிலும் அவர்களிடம் சிரித்தபடி உரையாடுவார். ஒருநாளில் முடிக்க வேண்டிய வேலையை அவர் நான்கைந்து நாட்களாய் எடுத்துக் கொள்வார்அந்த நான்கைந்து நாட்களில் அவர் பத்து பதினைந்து வேலைகளை செய்து முடிக்க முயல்வார். சதா தத்தளித்தபடி இருக்கும் ஒரு நல்ல மனிதர். ஆனால் எனக்கு அவரைப் பார்த்தால் சற்று வருத்தமாக இருக்கும்

இன்று நேர மேலாண்மை இவ்வளவு பெரிய விவாதமாக இருப்பது, அது குறித்து புத்தகங்கள் எழுதப்படுவது, கார்ப்பரேட் அலுவலகங்களில் கருத்தரங்குகள், பயிற்சிகள் நடத்தப்படுவது, அனுதினமும் மக்கள்ஐயோ டைம் இல்லையே, என்ன செய்ய?” என வினா எழுப்புவது அடிப்படையில் இதனாலேநாம் ஒரே நாளில் பத்து நாட்களின் வேலைகளை செய்து முடிக்க முயல்கிறோம். ஒவ்வொரு நாள் முடியும்போது அன்றைக்கான முக்கிய வேலை எதையோ செய்து முடிக்கவில்லையே என கவலைப்படுகிறோம். ஒருவித வெறுமை நம்மீது கவிகிறது. இவ்வளவு வேலைகள் நமது முதுகில் அமர்ந்திருக்கும் இதே காலத்தில்தான், வேறெப்போதையும் விட, நாம் அதிக நேரத்தை பொழுதுபோக்கில் (சினிமா, யுடியூப் காணொளிகள், வாட்ஸ் ஆப் சேதிகள், பேஸ்புக் அரட்டைகள், பயணம், மொபைல் விளையாட்டு, எளிய புத்தக வாசிப்பு) செலசழிக்கிறோம்

இது ஒரு விநோதம் இல்லையா?

ஆக வேலைகள் அதிகமாக ஆக நாம் நேரத்தை வீணடிப்பதும் கூடுகிறது. நேரத்தை வீணடிப்பது கூட நமது குடும்பம் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் அந்தரங்கமான அணுக்கமான அனுபவங்களை பகிர்வது குறைகிறது. நிறைய வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு வயது குழந்தைகளைக் கூட யுடியூப் காணொளி / மொபைல் விளையாட்டு மூலம் பிஸியாக இருக்கப் பண்ணி விட்டு நாம் நமது சின்ன சின்ன வேலைகளில் பிஸியாக மூழ்குகிறோம். வேறெந்த நூற்றாண்டையும் விட இப்போது தான் நாம் நமது குழந்தைகளுடன் பேசுவது குறைந்திருக்கிறது. ஏனென்றால் நமக்கு உண்மையில் நேரமில்லை, வீட்டிலிருக்கும் போது கூட. இது மெல்ல மெல்ல நம் அந்தரங்க உலகை சல்லடையிடுகிறது. ஒவ்வொருவரையாய் இழந்து அவர்களை சமூக உறவுகளால் ஈடு செய்ய முயல்கிறோம். இது முடியாத போது கொஞ்சம் கொஞ்சமாய் பைத்தியம் பிடிக்கிறது. உளவியலாளர்களின் நேரத்தைக் கோரி அதற்கு கட்டணம் செலுத்துகிறோம். நம்மிடம் உரையாடி போராடி அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பைத்தியம் பிடிக்கிறது. இப்படியே போனால், கடைசி வரையில் ஆழ்ந்த அதிருப்தி கொண்டவர்களாக வாழ்ந்து முடிப்போம்

இந்த துன்பியல் முடிவுக்கு வந்து சேராதிருக்க நாம் முதலில் நேரத்தை தாலிகட்டி கூடவே வைத்துக் கொள்ள வேண்டும்; அடிக்கடி அது நம்மை சபித்து வீட்டை விட்டு வெளியேறாதபடி அதனோடு இணக்கம் பாராட்ட தெரிய வேண்டும். இந்த வாழ்க்கை என்பது நேரத்துடனான ஒரு தாம்பத்யம்

நேரத்தை நமக்கு ஏற்றபடி பயன் தரும் வகையில் எப்படி செலவிடுவது?

கீழ்வரும் பத்து பரிந்துரைகளைப் படியுங்கள்.

 1) ஒரு நாளைக்கு ஒரே ஒரு மிக முக்கியமான வேலையை செய்யுங்கள். அவசியமில்லாத வேலைகளை முடிந்தளவுக்கு குறையுங்கள்

அவசியமில்லாத வேலைகள் எவை

எந்த வேலைகளை நாளைக்குத் தள்ளிப் போட்டால் பெரிய பாதிப்புகள் இருக்காதோ அவையெல்லாம் ஓரளவுக்கு அவசியமற்ற, ஆனால் முக்கியமான வேலைகள் (மின்சாரக் கட்டணத்தை நாளைக்கு செலுத்தலாம் என்றால் அதை இன்று செய்ய வேண்டியதில்லை; ஒரு உறவுக்காரரை நாளைக்கோ அடுத்த வாரமோ சென்று பார்க்கலாம் என்றால் அந்த சந்திப்பை தள்ளிப் போடலாம்.)

இந்த முக்கியத்துவத்தை எப்படி தீர்மானிப்பது?

ஸ்டீவன் கோவி தனது First Things First நூலில் சில பரிந்துரைகளை செய்கிறார்:

அன்றன்றைக்கு நமக்கு செய்வதற்கு ஏகப்பட்ட வேலைகள் உண்டுஅவற்றில் நாம் உடனடியாக நிச்சயமாக செய்ய வேண்டிய ஒன்றைஒன்றே ஒன்றைஎடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வேலையை வேறெந்த வேலையுடனும் ஒப்பிடக் கூடாது (அது கடவுளைப் போன்றது). அடுத்து படிநிலையில் முக்கியமாகத் தோன்றும் வேலைகளை 1, 2, 3 என வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வேலைகளை ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு ரத்து செய்யலாம். அப்படி ரத்து செய்யவே முடியாத, அப்படி செய்தால் வேலையே போய் விடும், மனைவி பிரிந்து போய் விடுவாள், ஊரே உங்களை பொங்கல் வைக்கும், கடன்காரன் வீட்டை ஜப்தி பண்ணி விடுவான் எனத் தோன்றுகிறவற்றை மட்டும் (வேலை 1 அல்லது 2) செய்யலாம்.

சில வேலைகளைத் தள்ளிப் போட்டால் பெரிய பாதிப்புகள் வரும் என கற்பனை பண்ணுவோம். டெட்லைன்கள் அப்படியானவை. நான் கவனித்தவரை நமது டெட்லைன்கள் அடிக்கடி தள்ளிப்போடத் தக்கவையே. டெட்லைனை சந்திக்க முடியாவிட்டால் மறுவாய்ப்பு எப்படியும் அமையும். ஆகையால் அதிக  முக்கியமற்ற ஒரு வேலையின் டெட்லைனுக்காக ஒரு மிக முக்கிய வேலையை தள்ளிப் போடாதீர்கள்.

இங்கு நான் பரிந்துரைக்கும் உத்தியானது ஒரு மதிப்பீட்டின் படி பெரும்பாலான வேலைகளை ரத்து பண்ணுவதே. இதன் மூலம் நாம் அன்றாடம் பண்ணுகிற வேலைகளில் நமது தலையான வேலையை மையத்தில் வைத்துக் கொள்வது; அதை செய்வதில் வேறுவேலைகள் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்வது.

சில உதாரணங்கள் தருகிறேன். நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். அதுவே எனக்கு இன்றைக்கான தலையாய வேலை. இப்போது என்னை ஒரு நண்பர் பார்க்க வருகிறார். அவருடனான சந்திப்பு முக்கியமே, ஆனால் எழுத்தளவுக்கு முக்கியமல்ல. நான் அவரிடம் சொல்வேன், “ஒரு முக்கியமான வேலை வந்து விட்டது. ஐந்தே நிமிடங்கள். முடித்து விட்டு வந்து விடுகிறேன்.” இனிமையாக இதை சொன்னால் என் நண்பர் புரிந்து கொண்டு காத்திருப்பார். ஒரு நண்பர் உங்களுக்கு போன் பண்ணுகிறார்அவர் மிக மிக முக்கியமானவர் அல்லவெனில் போனை எடுக்க வேண்டியதில்லை. சரி ரொம்ப ரொம்ப முக்கியமானவர். அவர் உங்களிடம் ஒரு வேலையை பண்ணித் தர சொல்கிறார். நீங்கள் அப்போது யோசிக்க வேண்டியது அது மிக மிக முக்கியமான வேலையா என்பதே, அதனால் உங்களுக்கு பலனிருக்குமா என்றல்ல. பல வேலைகள் பயனுள்ளவை, ஆனால் அவசியமானவை அல்ல. இரண்டுக்குமான வித்தியாசம் இங்கு முக்கியம். அந்த வேலை நீங்கள் தற்போது மிக மிக முக்கியமாய் நம்பி செய்கிற ஒன்றுடன் சம்மந்தமுள்ளது எனில் அதுவும் முக்கியமானதே; அல்லாவிடில் அது வெறும் பயனுள்ள வேலை. இப்போது நீங்கள் அந்த மிக மிக முக்கியமானவரிடம்வேலைப்பளு மிக அதிகம், என்னால் இப்போதைக்கு பண்ண முடியாதுங்க.” என சொல்லி விடலாம்.

2) எப்போதுமே உங்களுக்கு வேலைகள் அதிகம் என ஒரு சித்திரத்தை அடுத்தவர்களிடத்து ஏற்படுத்துங்கள். அப்படியும் யாராவது உதவி / வேலை செய்து தரக் கேட்டால் நிர்தாட்சண்ணியமாகமுடியாதுஎன சொல்லி விடுங்கள். இதற்கு நீங்கள் குற்றவுணர்வு அடையத் தேவையே இல்லை. அவர் உங்கள் வேலைக்காக கவலைப்பட மாட்டார். அவரும் தன் வேலையைப் பற்றி மட்டுமே அக்கறையாக இருக்கிறார்நீங்கள் மட்டும் ஏன் உங்கள் வேலையைப் பற்றி அக்கறையுடன் இருக்கக் கூடாது? இது தன்னலமல்ல. இது சுயக்கட்டுப்பாடு.

3) நாம் நேரத்தை குழாய்த்தண்ணீர் போல செலவிடுகிறோம். குழாயின் பிரச்சனை அதில் தண்ணீர் எங்கிருந்து வருகிறது, தொட்டியில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என நமக்குத்தெரியாதுஎன்பது. இதுவே உங்களிடம் குழாய் இல்லை, ஒரு பக்கெட் தண்ணீர் மட்டுமே இருக்கிறதென்றால் அதை கவனமாக கையாள்வீர்கள்.

 பணம் இந்த ஒரு பக்கெட் தண்ணீரைப் போல. பெரும்பாலனவர்களுக்கு பண விசயத்தில் ஓரளவுக்கு கட்டுப்பாடு உள்ளதற்குக் காரணம் பணம்தீர்ந்துவிடும் என மனக்கணக்கு உள்ளதாலே. அப்போதும் கூட நாம் மட்டுமீறி செலவு பண்ணி விடுகிறோமே, ஏன்? கடைக்குப் போனால் அங்கே குவிந்து கிடக்கும் பொருட்கள் நமக்கு சந்தையில் கிடைக்கும் பண்டங்கள் எவ்வளவு வாங்கினாலும் தீராதவை எனும் தோற்றத்தை அளிக்கின்றன. பண்டங்கள் தீராது என்றால் அவற்றை வாங்குவதற்கான பணம் மட்டும் எப்படி தீர்ந்து போகும் என நாம் குழப்பிக் கொள்கிறோம். இதனால் தான் சுப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் பண்ணும் போது இருபது ரூபாய்க்கு சோப்பு வாங்க செல்கிறவர் இருநூறு ரூபாய் செலவு செய்து விடுகிறார். ஆன்லைன் ஷாப்பிங்கிலும் நமது டிஜிட்டல் பணத்தை கணக்கற்றதாக, தீராததாக கற்பிக்கிறோம். இந்த சூப்பர் மார்க்கெட் மனப்பான்மைதாராளமாகசெயல்படுவது நேர விசயத்திலே. அதற்குக் காரணமென்ன?

நம் முன் (அங்காடிப் பொருட்களைப் போல) குவிந்து கிடக்கின்றன பல்வேறு பயனுள்ள வேலைகள் / சுவாரஸ்யமான பொழுபோக்குகள் / நம்மை மேம்படுத்தும் என நாம் நம்புகிற ஊடக விவாதங்கள், சமூக உறவாடல்கள். கடந்த பத்தாண்டுகளை விட இப்போதே நாம் பரஸ்பரம் அதிகம் பேசுவது மிகவும் அதிகமாகி உள்ளது. ஒருவர் காலையில் கண்ணைத் திறந்ததும் பேச ஆரம்பிக்கிறார் (நேரில் பார்க்கிறவரிடம் அல்லது இணையத்தில்). அவர் வாயை மூடும் போதெல்லாம் மற்றொருவர் அவரிடம் பேசத் தொடங்குகிறார். இரவு கண் சொருக சொருக போனில் பேஸ்புக் நிலைத்தகவலை தட்டச்சி விட்டு / மீமை எட்டி செய்து கொண்டே பாதியில் அதன் மீதே விழுந்து தூங்கும் ஒரு நண்பரை எனக்குத் தெரியும். இந்த இடைவிடாத பேச்சானது ஒரு மலிவுவிலை அங்காடிக்குள் நுழைவதைப் போல. தொடர்ந்து உரையாட முடியும் எனும் சாத்தியமே காலம் முடிவற்றது எனும் பிரம்மையை உண்டு பண்ணுகிறது; தொடர்ந்து நிறுத்தாமல் உரையாட முடியும் என்பதே, முரணாக, நம்மை மிகவும் தனிமையாக உணர வைக்கிறது.

நேரம் போனாலும் வராது என அறிந்திருந்தாலும் நேரத்தின் சுழல் வடிவம் நமக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இன்றைய காலை பத்து மணி நாளைக்கும் வரும். அதனாலே உலகம் முடியுமட்டுள்ள மட்டுமானகாலை பத்து மணிகள்நமக்குத் தான் என எண்ணுகிறோம். ஆனால் அது நிஜமல்ல

நேரத்தை கையிருப்பில் கொஞ்சமாக உள்ள பணத்தைப் போல சிக்கனமாக செலவழிக்க வேண்டும். இதை நான் சொல்லவில்லை, ரோம தத்துவஞானி செனக்கா தனது On the Shortness of Life எனும் நூலில் சொல்கிறார்.

4) முக்கியமான வேலைகளில் எதுவொன்றை செய்ததும் முடிவில் ஒரு பொருண்மையான விளைவு உள்ளதோ அதை செய்யுங்கள். அல்லது பொருண்மையான பலனில் அதிக கவனம் செலுத்துங்கள். நீங்கள் தேர்வுக்காக படிக்கிறீர்கள் என்றால் படித்தவற்றை ஒரு சிறிய தேர்வு எழுதி உங்களுக்கே நிரூபியுங்கள். இப்போது நேரம் என்பது அரூபமாக அல்ல பார்க்கக் கூடிய ஒன்றாக (தேர்வுத்தாள்) உங்கள் முன்பு இருக்கிறீர்கள். இது உங்கள் மனத்தில் பதிந்து விடும். அடுத்தடுத்த நாட்களில் நேரத்தைப் பற்றி யோசித்தாலே எதை கண்ணால் பலனாக காண முடியுமோ (தேர்வுத்தாள்) அதையே நேரமாக கருதுவீர்கள். ஒரு நண்பருடன் போனில் தேர்வை நன்றாக எழுதுவது பற்றி பேசுகிறீர்கள் அல்லது தேர்வுக்கு தயாராவது எப்படி என இணையத்தில் படிக்கிறீர்கள் என்றால் அதற்கு எதிர்கால பயனிருக்கலாம். ஆனால் பொருண்மையான, பார்க்கத்தக்க பலன் இல்லை எனத் தோன்றினால் அத்தகைய நேரசெலவை தவிர்த்திடுங்கள். நீங்கள் எழுத்தாளன் என்றால் நீங்கள் எழுதிய பக்கம், நீங்கள் இசைப்பயிற்சி பண்ணினால் நீங்கள் எழுப்பும் ஒலி, நீங்கள் ஒரு வணிகர் என்றால் விற்பனைக் கணக்கு, இப்படி புலனாகிற பலன்கள் மட்டுமே முக்கியம்.  

5) சிரமமான வேலையை முதலில் செய்யுங்கள். இந்த கருத்தை Eat That Frog நூல் வழியாக பிரையன் டிரேஸி பிரபலப்படுத்தினார் . உங்களுக்கு தினமும் எழுந்ததும் ஒரு தவளையை விழுங்க வேண்டும், அதை நினைத்தால் அருவருப்பாக குமட்டிக்கொண்டு வருகிறது. நாள் முழுக்க இதை நினைத்தே பண்ணாமல் இருக்கிறீர்கள், ஆனால் இதை பண்ணாமல் போனால் பெரிய இழப்பு ஏற்படும். நாளெல்லாம் தவளையை தின்ன வேண்டுமே எனும் அருவருப்புடனும் இன்னும் தின்னவில்லையே எனும் குற்றவுணர்வுடனும் மல்லுக்கட்டி களைத்துப் போவோம். இதற்கு சிறந்த தீர்வு அந்த பணியை உடனடியாக, காலை எழுந்ததும் முதலில், செய்து முடிப்பது, இதன் மூலம் சிந்தனைக்கு வாய்ப்பே அளிக்காமல் இருப்பது. ஆனால் இது சுலபம் அல்ல என அனுபவம் மூலம் உணர்ந்திருக்கிறேன். மனித மனம் சுகமான காரியங்களையே முதலில் செய்யத் தூண்டுவது.

6) மிக முக்கியமான வேலையைதினமும்செய்யுங்கள். அப்போது அது ஒரு பழக்கமாகும். பழக்கத்தை ஒருநாள் உடைத்தால் கூட எரிச்சல் வரும். ஆக வேலையாக அன்றி பழகி விட்டதே என தினமும் செய்வீர்கள். உடற்பயிற்சி இதற்கு நல்ல உதாரணம்.

7) வேலையை திட்டமிடுங்கள், ஆனால் அதிகமாக அதைப் பற்றி கற்பனை பண்ணாதீர்கள். நீங்கள் கற்பனாபூர்வமான ஆள் என்றால் அதைப் பற்றி நினைக்க நினைக்க களைத்துப் போவீர்கள். நீங்கள் எதையெல்லாம் செய்ய உத்தேசிக்கிறீர்களோ அதற்கு நேர்மாறாக செய்வீர்கள். இதற்குப் பதிலாக யோசிக்காமலே வேலையை ஆரம்பித்து விடுங்கள்

8) இந்தியாவில் நாம் சதா கூட்டத்தின் மத்தியிலே இருக்கிறோம். இணையத்துக்கு வந்தால் கூட அங்கும் கூட்டமே நம்மை மொய்க்கிறது. தனிமையில் செய்ய வேண்டிய வேலைகள் இருந்தால் தனிமையை அதற்காக உருவாக்குவதற்குப் பதிலாக, தனிமையான இடம் கிடைக்கவில்லை என வேலையை தள்ளிப் போடுவதற்குப் பதில், மக்கள் அதிகமாக புழங்கும் இடங்களில் வைத்து அவ்வேலைகளை செய்து பழகுங்கள். பழகப் பழக மக்கள் மத்தியிலே வேலை செய்வது கூடுதல் சுலபமாகும்

9) வேலைக்கு தோதான இடங்களில் தொடர்ந்து இருங்கள். என் நண்பர் ஒருவர் சொல்வார், “எனக்கு வீட்டுக்குப் போனாலே ஜாலி மூடு வந்து விடும். என்ன வேலை இருந்தாலும் பண்ணவே மாட்டேன்.” (ஜாலி மூடிக் என்ன பண்ணுவார் என நான் கேட்கவில்லை.) அதனால் இவர் இப்போது மிக முக்கிய வேலைகளை முடித்து விட்டே வீட்டுக்கு செல்கிறார்

மற்றொரு நண்பர் மின்சார  யிலில் தான் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்களை வாசிப்பார். அவர் இதனாலே சிலநேரம் தேவையின்றி கூட ரயிலில் ஏறி நல்ல இடமாக பிடித்துக் கொண்டு வாசிப்பார். மற்றொரு நண்பர் தனது சின்ன சின்ன பதிவுகளை மொபைலில் கழிப்பறையில் இருந்தே நன்றாக எழுதுவார். வேளியே வந்தால் அவரால் மனதை குவிக்க முடியாது. சிலருக்கு வீட்டுக்கு வந்தால் தான் வேலையே நடக்கும். அவர்கள், அலுவலகம் முடிந்ததும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும்

இதே போல உங்கள் வேலைக்குத் தோதான நண்பர்களுடன் மட்டும் இருங்கள். சிலர் தொடர்ந்து குறுக்கிட்டு தொந்தரவு பண்ணுவார்கள், சிலரது இருப்பே நமக்கு எரிச்சலாக இருக்கும். இடமும் துணையும் நம் மன அமைப்போடு இவ்வாறு மிக சிக்கலாக பொருந்திப் போனவை.

பேஸ்புக் உங்களுக்கு இடையூறு என்றால் போன் / இணையத்தொடர்பு இல்லாத இடத்தில் இருங்கள். பேஸ்புக்கையும் வைத்துக் கொண்டு அதை பயன்படுத்தாமல் இருப்பது சிரமம். அதை அகற்றி விடுவதே சாலச்சிறந்தது. என் நண்பர் ஒருவர் தன் முனைவர் பட்டத்துக்காக ஆய்வேட்டை எழுதும் பொருட்டு கேரளாவுக்கு சென்று மற்றொரு நண்பரின் அறையில் தங்கினார். அங்கும் அவரால் எழுதவே முடியவில்லை. தினமும் யாரிடமாவது போனில் எழுதுவது பற்றி பேசிக் கொண்டிருப்பார். ஆனால் போனை மட்டும் அவர் ஒரு வாரம் முழுக்க பயன்படுத்தாமல் இருந்திருந்தால் அவரால் சுலபத்தில் எழுதி இருக்க முடியும்.

10) இறுதியாக: நிறைய நேரத்தை வைத்துக் கொள்ளாதீர்கள்

இது உங்களுக்கு முரணாகத் தெரியும். ஒரு முக்கியமான வேலையை முடிக்க நேரம் தானே மிகவும் அவசியம். எவ்வளவு அதிக நேரம் கிடைக்கிறதோ அந்தளவுக்கு உதவுமே. ஆனால் உண்மை நேர்மாறானது.

18 மணிநேரமும் ஓய்வாக இருக்கிறீர்கள். இதில் நீங்கள் 8 மணிநேரம் ஒரு வேலையைப் பண்ண வேண்டும் என்றால் சிரமம். மிச்ச 10 மணிநேரம் இருக்கிறதே அது உங்கள் தலைமீது இருந்து அழுத்தும். பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு கடைசியில் மிக அவசியமான வேலையை பண்ண முடியாமல் போய் விடும்.

பரீட்சைக்கு படிக்கிறவர்கள் முந்தின நாள், அதுவும் இரவில் விழுந்து விழுந்து படித்து முடிப்பார்கள், ஆனால் ஒரு வாரம் விடுமுறை கொடுத்தால் படிக்க மாட்டார்கள். ஏனென்றால் மிதமிஞ்சிய நேரம் எந்த வேலையையும் பண்ணுவதற்கு பெரிய தடை.

 இதற்கு ஒரு தீர்வு குறைவான நேரத்தை உங்களுக்கு என வைத்துக் கொள்வது. உங்களுக்குத் தேவை 2 மணிநேரங்களே என்றால் அதற்கு மேல் நேரத்தை வைத்துக் கொள்ளாதீர்கள். மிச்ச நேரத்தில் ஓய்வாக இருக்காதீர்கள். ஓரளவுக்கு தவிர்க்க கூடிய ஆனால் முக்கியமான வேலைகள் இருக்கிறதல்லவா அதை அப்போது செய்ய திட்டமிடுங்கள். அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தில் குறைவான சம்பளத்தில் ஒரு பகுதிநேர வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கான குறிப்பிட்ட மணிநேரங்களை மட்டும் தனியாக ஒதுக்கி வைத்து அந்த நேரத்தில் மட்டும் வேலையை செய்யுங்கள்

இப்படி செய்தால் களைத்து விட மாட்டோமா? இல்லை. களைப்பு மனத்தில் இருந்து வருகிறது. மனம் ஓயாமல் அலைகழியும் போது தான் களைக்கிறது. அல்லது பிடிக்காத வேலையை நீண்ட நேரம் செய்தால் களைக்கிறோம். மனதை நீங்கள் செய்யப் போகிற வேலையில் இருந்து அகற்றிட வேறு அதிக முக்கியத்துவமற்ற வேலைகள் உதவும். சரியான நேரம் வரும் போது நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

மிச்ச நேரத்தில் தூங்கலாமே? பகல் தூக்கம் நிஜத்தில் உங்களை அதிகமாக களைக்க வைத்து விடும். ஆகையால் ஓய்வு நேரத்தில் வேலை பண்ணாவிட்டாலும் தூங்கவே கூடாது.

சுருக்கமாக: நேரம் நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். நேரம் சொல்வதை நீங்கள் கேட்கக் கூடாது.