இந்திய விமானப் படை தாக்குதல் நடத்திய இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சர்வதேசப் பத்திரிகையாளர்கள் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்மாவில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளும் நிறுத்திவைக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு படை கடந்த பிப்ரவரி 26ஆம் தேதியன்று பதிலடி  கொடுத்தது.

பாகிஸ்தான் நாட்டின் வடகிழக்குப் பகுதியான பாலகோட் அருகே செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மீது தாக்குதல் நடத்தியது இந்திய விமானப் படை. இதுகுறித்து இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பிறகு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் குழு தாக்குதல் நடந்த பகுதிக்கு சென்றது. அங்கு தாக்குதல் நடந்ததற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்றும் செய்தி வெளியிட்டது.

100 மீட்டர் தொலைவில் இருந்து அந்த பகுதியை பார்த்த ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள், அங்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை எனத் தெரிவித்தனர். பைன் மரங்களுக்குக் கூட பாதிப்பு ஏற்படவில்லை என்றும் விமானத் தாக்குதல் நடந்து 6 நாட்கள் கழித்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்துக்கும், 2018 ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட புகைப்படத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தாக்குதல் நடந்த மலைப் பகுதிக்குச் செல்வதற்கு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு நேற்று முன்தினம் (மார்ச் 7) மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, தற்போது அந்த பகுதிக்கு சர்வதேச பத்திரிக்கையாளர்கள் செல்லவதற்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதற்கான சரியான காரணம் இன்னும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை.