‘என் மனதில் தாங்க முடியாத வேதனை, கடினமான வலி ஏற்பட்டது. எனக்கென்று இந்த உலகத்தில் சொந்தமாக எதுவுமே இல்லை. வெறும் நிர்வாணமான இந்த நான்கூட என்னுடையதுதானா? பாரதத்தின் ஒவ்வொரு நகரங்களிலும் எத்தனையெத்தனை ஆண்டு காலங்கள் சுற்றித் திரிந்து ஏதேதோ ஜாதி மக்களுடன் எங்கெங்கெல்லாமோ தங்கியிருக்கிறேன். யாருடைய ஆகாரங்கள் எல்லாம் சேர்ந்தது இந்த நான். எனது இரத்தமும் எனது மாமிசமும் எனது எலும்பும் இந்த பாரதத்திற்குரியது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் கராச்சி முதல் கல்கத்தா வரையிலும் – அப்படி பாரதத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். பெண்களும் ஆண்களுமான அந்த அத்தனை நண்பர்களையும் நான் இன்று நினைவுகூர்கிறேன். நினைவு… ஒவ்வொருவரையும் தழுவியபடியே என் அன்பு அப்படியே வியாபித்துப் பறக்கட்டும். பாரதத்தைக் கடந்தும்… உலகைக் கடந்தும்… சுகந்தம் வீசும் வெண்நிலவுபோல்…

தனது பிறந்தநாள் அன்று காலையிலிருந்து சாப்பிடக் கையில் துளி காசும் இல்லாமல், நண்பர்களிடம் கடன் வாங்கக் குறுகும் மனமும், பசியில் துடிக்கும் வயிருக்குமான போராட்டத்தில் வெம்பிக் கொண்டிருக்கும்போது அவர் இப்படி எழுதுகிறார். வைக்கம் முகமது பஷீர்! 1908-இல் வைக்கமில் பிறந்த இவர் ஜூலை 5, 1994-இல் மறைந்தார். நேற்று அவரின் 25-வது நினைவு தினம்.

எழுத்தில் ததும்பும் மனிதநேயம்தான் பஷீரை நினைவு கூற வைக்கிறது, ஒரு புரட்சியாளனாக, மனிதனை மனதளவில் முடக்கிப் போடும், பசியையும் வறுமையையும் தாண்டி அன்பையும் அதன்வழி அறத்தையும் விடாது பேசினார். சுதந்திரப் போராட்டக் காலங்களில் சிறைவாசம், அர்ரெஸ்ட் வாரன்டிலிருந்து தப்ப வேறு ஊர்களுக்கு ஓடுவது, எழுதுவது, பொது கூட்டங்களில் பேசுவது, கிடைத்த வேலைகளை எல்லாம் செய்துகொண்டே நாடோடியாகப் பயணம் செய்வது… இப்படித்தான் உலகிற்கு பஷீரின் படைப்புகள் கிடைத்தன. இதோ இப்போதுவரை மலையாள வாசகர்கள் எத்தனையோ எழுத்தாளர்களை வாசித்து, கடந்துபோயிருந்தாலும் பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டால் பஷீர் என்று உச்சி முகர்கிறார்கள். இவரின் எழுத்தால் விழுந்து விழுந்து, நினைத்து நினைத்துப் பார்த்து சிரிக்கவைக்கவும் முடியும், கண்ணீர் மல்க மயிர்கூச்செறிய வைக்கவும் முடியும். ஆனால், உண்மை என்னவென்றால் இந்தப் பெருமைகள் எல்லாம் பெருமையே அல்ல, சாதாரண இயல்புகள் என்று அவர் தெரிந்து வைத்திருந்தார். கேரள மாநில விருதுகள், சாகித்திய அகாடெமி விருதுகள் என்று எல்லாமே அவருக்கு அப்படித்தான். வேலை, வருமானம் என்பது இல்லாமல் தனது படைப்புகளைத் தானே வெளியிட்டு, அதை எடுத்துக்கொண்டு விற்பனை செய்ய வீதிவீதியாக அலைந்தவர்தான் இவர், மாறாத மனிதநேயப் பண்பாளர்.

தான் பார்த்த மனிதர்களை, அவர்களாக தனது படைப்பில் உலவவிட இவரால் முடிந்தது, பஷீரின் கண்வழி தெரிந்த மனிதர்களாக அவர்கள் இல்லை, பஷீரின் வாழ்க்கை, பயணம் அவருக்கு இதைக் கற்றுக்கொடுத்திருக்கலாம். சக மனிதர்களைப் புரிந்துகொண்டு அவர்களை நேசிப்பது என்பதுதான் எப்படிப்பட்ட மகத்தான காரியம்? அதற்கு சமூகம் கற்றுக்கொடுக்கும் வேறுபாடுகளைத்தாண்டி, ‘தான்’ என்ற பெரும் சுவரைத் தாண்டி எல்லோரையும் பார்க்கமுடிய வேண்டும், இல்லையா? இதோ, பஷீர் தன்னால் இயன்றளவு அப்படியான வாழ்க்கையை வாழ்ந்து மறைந்து போயிருக்கிறார். நன்றி பஷீர், இந்த நன்றியைக்கூட நீங்கள் தேவை இல்லாதது என்று மறுதலிக்கலாம், ஆனால் இது நாங்கள் உங்கள் மீது கட்டும் சிறு அன்பு, நன்றி.