கன்னன் கொடுத்த பசுக்கிடையும்
கடவுள் கொடுத்த திருவோடும்
தென்னன் கொடுத்த மணிவீடும்
சேரன் கொடுத்த பொன்னாடும்
மன்னன் கச்சி யுவரங்கன்
வாவாவென்று பஞ்சத்தில்
அன்னங்கொடுத்த கொடைக்கு நிகர்
அன்றாம் என்றும் இல்லையே.”

என இப்பாளைய தேச சிற்றரசன் யுவரங்கனைப் பற்றி‌ பெருமைபாடுகிறது கட்டளை கலித்துறைப் பாடல்.

முற்கபுரியென்னும் பெயரால் வழங்கிவந்த இவ்வூர் சின்ன நல்லப்ப உடையாரின் இராஜ்யத்திற்க்கு பின்பு உடையார் பாளையம்‌ என மருவி வழங்கிவரலாயிற்று.

உடையார்பாளையம் சமஸ்தானத்திலிருந்து சிலம்புக்கால வாய்ப்பாட்டால் 2000 சிறுகோல் தொலைவில் வடதிசையில் அமையப்பெற்ற அழகியதொரு வனப்பு மிக்க வனப்பகுதி. சோழ மண்டல மாமன்னர்களும்,சிற்றரசர்களும்  இன்னும் பல வீராதி வீரர்களும் தங்களது ஓய்வுக்காலங்களில் அடங்காத ஆர்வங்கொண்டு முறுக்கேறிய வீரத்துடன் வேட்டைக்கு  சென்றுவரும் சுந்தரவனக்காட்டுப்பகுதி இது.

பாளையத்தின் கோட்டைக்கு நேர் வடக்காக பயணித்தால் எதிர்ப்படுகிறது பயறனிநாதர் எனும் சிறிய சிவன்கோவில். அடுத்த 700 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பிரமாண்டமாக‌ எழுப்பப்பட இருக்கும் இந்த சைவ சமய திருக்கோவில்  மற்றும் தெப்பக்குளத்தின் மேற்கு வாயிலை ஒட்டி  சற்று ஒத்தையடி பாதையே பயணிக்க. அங்கு கண்ணில் படுகிறது    விசாலமான சேந்தன் தேக்கம் எனும் சிறிய ஓடை.அதைத்தொடர்ந்து பயணிக்க. வடக்கே ஒரு காத தூரத்தில் அமைந்துள்ளது இந்த வனப்பகுதி.


நகர வீதிகளில் மட்டுமே பயணப்பட்டும் அரசர்களின் ரத வாகனங்கள் இவ்வழியே அடிக்கடி பயணப்பட்டதன் அடையாளமாக வண்டிப்பாதை எனும் அடைமொழியினை உருவாக்கியிருந்தது‌ சக்கரங்களின் தடங்கள்.

பாதையின்‌ இரு மருங்கிலும் ரம்மியமான வான்நோக்கி வளர்ந்த  மரங்களும் செடிகளும் கொடிகளும் அசைந்தாடி உள்ளத்தை கொள்ளை கொள்ளச் செய்யும் அழகிய தோப்புகளும். தேன் வண்டின் ரீங்காரம் கிர்ர்ர்ரென காதில் கேட்டுக்கொண்டே பயணிக்க. முழுமையாக போர்த்தப்பட்ட போர்வையின் உள்ளே பட்டொளிவீசும் கதிரவனோ, கார்முகில் சந்திரனோ தனது ஒளிப்படலத்தை தன்னுள் படரவிடாது அடைத்துக்கொண்டுள்ள முந்திரிக்காடுகளும், மாந்தோப்புக்களும், பலாக்காடுகளும். புளியஞ்சாவடிகளும்,  அழகோவியமாக தீட்டி அமைந்த அந்த இடத்தை பார்க்கும் நம்மை ஒரு ஓவியனாகவோ ரசிகனாகவோ மாற்றிவிடும் வல்லமை கொண்டது இந்த வழிப்பகுதி. மற்றும் காட்டில் வசிக்கும் புலி, யானை, பசு, மாடு, ஆடு, மான், காகம், மயில், முயல்‌, காடை, கவுதாரி என அளவில்லா எண்ணிக்கையில் அனந்தக்கூப்பாடு போட்டு மகிழச்சிக்களிப்பில் வலம் வரும் இயற்கை தாலாட்டும் சொர்க்கபுரி இது வென்றால் மிகையாகாதுதான்.

இவ் அடர்ந்த பகுதியில்  கிட்டதட்ட 30 காணி இடத்தினை  வட்டமாக சூழ்ந்து ஆழமாக வெட்டப்பட்ட  “வெட்டுக்குழி பள்ளம்” என்றழைக்கப்படும் பெரிய ஏரி நம்மை வரவேற்கிறது.அதன் படி
ஏரியின் நடுவே பெரியதொரு ஊற்று ஐந்தாள்  ஆழத்திற்க்கு வெட்டப்பட்டு இருப்பதனாலேயே இதற்கு இந்த  புனைப் பெயரும் இணைந்து கொண்டது.

இயற்கை மனிதனுக்கு அளித்துள்ள கொடைகள் எண்ணிலடங்காதவை. நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் என்ற ஐந்து பெரும்பிரிவுகளில் சோழமரபு இவற்றைக் கருத்தில் கொண்டு ஆள்கிறது . இவற்றில் நீரின் முக்கியத்துவம் வார்த்தைகளில் அடக்கிவிடக்கூடிய ஒன்றல்ல. நீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவர்கள் சோழப் பேரரசர்கள் என்றால் மிகையாகாது.

எழில்மிகு ஏரியினைச் சுற்றிலும் அடைத்துக்கொண்டு  வளர்ந்துள்ள தென்னை. பனை, புளிய மரங்கள். பூத்துக்குலுங்கும் கொன்றையோடு ஆடி அசையும் ஆனா செடிகள்.   தண்ணீரில் தவழ்ந்து தவழ்ந்து தாவி விளையாடும் தவளைகள். மகிழ்ச்சியாக தவளையோடு சண்டையிடும் தாமரைமலர்கள்.

கரைப்பகுதியெங்கும்  ஆறடி நீண்டு வளர்ந்திருக்கும் கோரைப்புற்க்கல்  என ரம்மியம் கலந்த அழகோவியமான‌அந்தப் பகுதியில் மன்னர்களும் வேட்டையாளர்களும் வேட்டையாடியது போக மீதமுள்ள விங்குகளின்‌ உடல்களை அங்கேயே போட்டுவிட்டு வந்திடுவதால் அந்த உடல்களை கொத்திக் திங்க கூட்டம் கூட்டமாக கழுகுகள் படையெடுத்து இந்த
வனத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதாலே வனத்திற்கு அடைமொழியாக கழுகும் இணைந்துக் கொண்டு “கழுகுவனம்” என அழைக்கப்பட்டது.

சித்திரையில் கூட வற்றாத ஏரியும். வானம் பார்த்த பூமி எனினும் வருடத்திற்கு மும்மாதமே விலையும் முந்திரி சாகுபடியும்‌ கடலை,கம்பு, சோளம், கீரைகள்  என வளம் கொழிக்கும் பயிர்களை பயிரிட்டு வளமான வாழக்கை வாழ்ந்தனர்  இந்த அடர்வனக்காட்டில்  வசிக்கும்  சிறுகூட்டத்தார்.

நாப்பக்கம் சூழ்ந்திருக்கும் பெரிய ஏரியின் தடாக நடுவில் கம்பீரமாக வீற்றிருக்கும் அய்யனாரும் .கோவிலுக்கு வெளியே கருங்கற்களால் ஆன நடு கற்கள் நடப்பட்டிருந்தன.  மழை காலங்களில் ஏரியில் நீர் நிரம்பி வழியும்‌ வேளையில் அந்தப் பகுதியே சிறு தீவு போல காட்சியளித்து, பெரிய ஏரிக்கு நடுவே அழகாக கற்றளியாக காட்சித் தருகிறார் யாணைத்திருமேனியான் அய்யனார்.

ஏரியைத்தாண்டி வடக்கே பயணித்தால் எதிர்படுகிறது வனச் சிற்றூர்.
மாதம் மும்மாரி பெய்யாத நிலம் என்பதால் எப்போதும் மழைநீர் சேகரிப்பு திட்டம் ஊரைச்சுற்றி மும்மருங்கிலும் அழகாக குளம் வெட்டி அமைக்கப்பட்ட ஊர். எல்லையில் இடது பக்கம் அமர்ந்திருந்த பெரிய ஏரியும். ஊரைக் கடந்து வடக்கே செல்ல செல்ல இடதுபுறம் கருப்புசாமி கோவிலும சற்று முன்னே பயணிக்க. கூப்பிடு தூரத்தில் இடது புறத்தில் பெருமாள் கோவிலும், வடக்கே சென்றால் எதிரே விழுதுகள் வளர்ந்துள்ள  ஆலமர தோப்பும். அடுத்தாற்போல் இலுப்பைத்தோப்பும். தோப்பிற்க்கு நடுவே கோரையால் வேயப்பட்ட குருகுலக்குடிலும். குடிலுக்குப்பின்னால்  கார் தேக்கம் என்ற   சிறிய குளமும். வனப்பு மிக்க வனத்தில் வளமான பகுதியாக ஜனங்கள் சஞ்சரிக்கும் இடமாக அருமையான சூழலில் அமையப்பெற்றுள்ளது. இப்பகுதி
“கார் தேக்கம்” மழைநீர் சேகரிப்பு பகுதி என்பது இதன் கருப்பொருள்.
அதையும் தாண்டி கிழக்கே பயணத்தோடு காட்டுக்கு செல்லும் வழியில் அங்கு மக்களும் ஆடு மாடுகளும் . அங்கே உலாவும் இன்னும் பிற விலங்குகளும் நீர் அருந்தும் இடமாக அமைக்கப்பட்டிருக்கிறது
சாந்தன் நீர்த் தேக்கம்.

ஊர் முப்பரிமாண  வளர்ச்சியாக, வான் கொடை நீரை தேக்கி வைத்து தண்ணீர் பஞ்சங்கள் வரும்போது இந்த நீர் நிலைகளை பயன்படுத்திக்கொள்ளும் எதிர்கால திட்டமிடலால், மழைநீர் சேகரிப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தி இருந்தது இவ்வூரில்.
அதையும் மீறி தண்ணீர் பஞ்சம் ஏற்படுமாயின் பெரிய ஏரியின் நடுவே அமைக்கப்பட்ட பெரிய ஊற்று இந்த ஊர் மக்களுக்கு நீர் கொடுக்கும் ஒரு வரப்பிரசாதம்.

மழைக்காலங்களில் ஊரிலுள்ள பெரிய ஏரி உடைப்பெடுத்தால் அதன் கடைமடை தண்ணீர் மதகுவழியே ஓடை வாய்க்கால் வழியாக ஊர் வட எல்லையில் உள்ள கார் தேக்கத்தில் சென்றடையும் அளவிற்கு சரியான திட்டமிடல் வகுக்கப்பட்டிருந்தது. ஏழு தலைக்கட்டுகள் சேர்ந்து என சுமார் 100 க்கும் குறைவான ஒன்றிணைந்த மக்கள் வாழும் பூமியிது.
கல்விக்கு அச்சாரமிடும் நந்தவர்ம சோழர பெயரில்  குருகுலம் ஒன்று‌ பெரிய ஏரியின் நேர் வடக்கில் உள்ள இலுப்பைத்தோப்பின் நடுவே. கார்தேக்கத்திர்க்கும் முன்னமே ஆலமரகூட்டமும்‌ இலுப்பை தோப்பும் இணைந்த இன்பமான அமைதியான  சூழலில் ஆர்ப்பரித்து அமைந்துள்ளது.

பெரிய எரியின் கரைக்கு மேற்கே அமையப்பெற்ற இடத்தின் பெயர் முனையதரையன் பட்டினம்.சுமார் 15 குடும்ப உறுப்பினர்களை அடக்கியுள்ள இப்பகுதி,  சோழ மன்னர்களின் தனி அந்தஸ்து பெற்ற இவர்கள் தஞ்சை அரண்மனையின் பாதுகாவலர்களில் உள்ள பிரிவில் வேளைக்காரப் படைப்பிரிவினருக்கு  அடுத்ததாக இந்த முனையதரைய படையினருக்கு முக்கியதொரு அங்கீகாரம் உண்டு.

உடையார்பாளையம் சமஸ்தானத்தை நிறுவிய பின்னர் இந்த முனையதரையர்களை பாதுகாவலர்களாக நியமித்து சோழ மன்னர்கள் இவர்களை இங்கே குடியமர்த்தி உள்ளனர்‌.
முக்கிய வேறு சில காரணங்களாலும் இவர்கள் இங்கு குடியமர்த்தப்பட்டிருந்தனர். இந்த ரகசியம் அறிந்தவர்கள் இருவர் மட்டுமே.ஒருவர் பாளைய சிற்றரசர். மற்றொருவர் மாமன்னர் ஸ்ரீலஸ்ரீ அருள்மொழிவர்மர்.

– தொடரும்.