பொன்னிற சந்திரன் புகழ் மதியால் வளர்ந்து, வான் நோக்கிய பயணத்தில் தன் ஒளி வெள்ளங்களை. 
உலகம் முழுதும் அழகுமதியாக பதிந்து,  
வான் மேலே புதியதொரு புதினம் போல், 
முழு மதியாய் பூரித்து, 
பழைமையான வெண்மதியாய்.
மேலெழுந்து செல்கின்ற வான்மதியே என. மலர்விழி மதிமுகஞ்  சிவக்கும் வேலையில்.
செப்பு பதிந்திந்ததுபோல சிறப்பினை கொடுத்து, 
வானில் உறங்கும் ஓவியப் பேரெழிலே.!
உலகை உற்று நோக்கும் “ஒரு புள்ளி இரவுச் சூரியனே”.!  

என வெண்ணிலவின் மகரந்த ஒளி மண்ணில் பட்டு கழுகு வனத்தின் இரவுகளை அழகுப் பகலாக ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது பள்ளிப்படை அய்யனார் கோவில் திருவிழாவின் முதல் நாளான இன்றைய இரவு வேளையில்.

வனத்தின் வண்டிப்பாதையில் திடீரென
சரக். சரக். சரக். என ரதச் சக்கரத்தின் இடைவிடாத சத்தங்களுடன் ரகத்திற்கு பாதுகாப்பாக முன்னேயும் பின்னேயும் என நான்கு  குதிரைகளின் குளம்படிச் சப்தங்கள் டக் டக் டக் டக் என்று அதிர்ந்து ஒலியெழுப்பிச் செல்கையில். அவ்விருள் வேலையில் பெரும் பாதையில் பயணித்த புழுக்களும், பூச்சிகளும். செடிகளில் உறங்கிக் கொண்டிருந்த வண்டுகளின் உறக்கமும் கலைந்து, உயிர் பயத்தில் தங்கள் மறைவிடங்களை தேடி ஓட ஆரம்பித்தன.

அதேவேளையில். பசுமையான வயல்களில் அறுவடை நடக்கும் இளவேனிற் காலத்தில்.
உதிரும் பயிர்களை உண்பதற்கு. உற்றார் உறவினரோடு வந்து தங்கிய பறவைகளும், அதன் குஞ்சுகளும், பூத்துக்  குலுங்கும் மலர்களிலிருந்து தேன் எடுக்க வந்த தேனீக்களும், அதன் ரீங்காரங்களை இசையாக முழங்கி சிறகடித்து பறந்தன இந்த இரவு ஜாமத்தில்.

குதிரைகளின் குளம்படி சத்தங்களோடு. வேல் கம்பு ஆயுதங்களோடு பாதுகாப்பு வீரர்களின் நடுவே ரதம் ஏரிக்கரை அருகிலே பயணப்படுகையில், பள்ளிப்படை கற்றளி அய்யனாருக்கு படைக்கப்பட்ட நெய்வேத்திய படையல்களின் மனம் சிறிது கூட குறையாமல் இவர்களின் மூக்கைத் துளைத்து வாசனைகளால் வளைந்து நெளிந்து சென்றன.


கழுகு வன எல்லையில் அமைக்கப்பட்ட மா. வேம்பு. வாழை. கொன்றையின் தோரணங்கள், வந்தவர்களை வருக வருக என வரவேற்கும் விதமாக இருமருங்கிலும் அசைந்தாடி வரவேற்று கொண்டிருந்தன.

தடித்த பெரு உருவம் முற்றிலும்  திரைச்சீலையால் போர்த்தப்பட்டுள்ள தேரினில் அமர்ந்திருக்க. இரு குதிரைகள் பூட்டப்பட்ட ரதமாக , தேர்ச்சக்கரம் ஆகாயத்தில் பறந்து செல்லும் புஷ்பக விமானம் போல வேகமாக பள்ளிப்படை கோவில் தாண்டிச் சென்று இடது பக்கம் திரும்பியது.
சித்திரைத் திருநாளின் முதல் நாள் திருவிழா நன்னாளில், முழுமதியில் ஒளிர்ந்திருக்கும் அந்த இரவு வேளையில், ஊர் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில். சிறிய தீப்பந்தங்களோடு நான்கைந்து பேர் இவர்களின் வரவினை காத்துக் கொண்டிருந்தனர். அந்த சிறிய கூட்டத்தை நோக்கி ரதத் தேர் மெது மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க. தேரின் வடத்தை இழுத்துப் பிடித்துக் கொண்ட தேரோட்டி, குதிரையின் வேகத்தை குறைத்துக் கொண்டிருந்தார். வேகம் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வர இறுதியாக அந்த சிறு கூட்டத்தின் அருகினில் வந்த குதிரையின் இரவுப் பயணம் முடிவுற்றது.

ஔவ். ஔவ். ஔவ். என குதிரைக்கு ஆணையிட்டு அதன் பயண எல்லை முடிந்தது என்ற சாயலில் அதற்கு உத்தரவிட. அந்த தேரோட்டியின் முகம் தீப்பந்த வெளிச்சத்தில் துல்லியமாக தெரிந்தது.
பின்னால் அமர்ந்திருந்தவர் முறுக்கிய மீசையுடன் உடல் முழுவதும் போர்த்தப்பட்ட செங்காந்தள் மலரைப்போல மிடுக்கான, முறுக்கேறிய உடம்புடனும், உலகம் முழுவதும் பல போர்களைக் கண்ட வெற்றி வீரன் இவன் – என சீரும் சிறப்பும் மிக்க அடையாளங்களைக் கொண்டு ஆர்ப்பரிக்கும் விழிகளோடு. செருக்கான வீரத்துடனும், கூரிய விழிகள் இரண்டும்  வேட்டைக்குத் தயாராக உள்ள வேங்கை போல கழுகுப் பார்வையால் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்து விட்டு. பிறகு சிறிய கூட்டத்தாரை பார்த்து சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு. தேரின் பக்கவாட்டில் உள்ள படியினில் காலை கீழே வைத்து இறங்கினார்.
முறையே ரகத்திற்கு முன்னும் பின்னும் பாதுகாவலர்களாக வந்த நான்கு வீரர்கள் ரதத்தில் இருந்த குதிரையை அவிழ்த்து அருகில் உள்ள சுந்தரவனக் காட்டின் தோட்டத்தில் கட்டி வைத்து மேலும்
அவர்கள் வந்த குதிரைகளுக்கும் சேர்த்து தண்ணீர் காட்டி மேலும் எள்ளு, கொள்ளு சேர்த்த கழனி நீர்க்கஞ்சிகளை கொடுத்து அதன் தாகத்தினை தீர்த்து கொண்டிருந்தனர்.

உயர்குடி மக்கள் அணிந்துள்ள காலணியும், உடல் முழுவதும் போர்த்தப்பட்டுள்ள புலியூர்ப்பட்டோடு வந்த அவரைப் பார்த்த அந்த சிறு கூட்டத்தினர் தலையை கீழே சாய்த்து தங்களது வணக்கத்தை தெரிவித்து இருவரையும் வரவேற்றனர்.

அவர்களுக்கு பின்னாலேயே சிறிய ஒரு குடிலும் அந்த குடில் உள்ளே மங்கலான வெளிச்சத்தில் அழகாக புனையப்பட்ட சஞ்சாரமும். சாமரங்கள் போல வீசும் செங் காற்றுடன் செம்மண் மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

வந்திருந்த இருவரையும் மரியாதை ததும்ப வரவேற்று, குடிலின் உள்ளே அழைத்து சென்றனர்.வெளியிலிருந்து பார்க்கும்போது மங்கலாகத் தெரிந்த அந்த விளக்கு ஒளி உள்ளே பிரகாசமாக படர்ந்து. வந்திருந்தவர்களை ஆரத்தழுவி அணைத்துக்கொண்டு வெளிச்சத்தை கக்கியது.
பாதுகாவலருக்கு அந்த 4 வீரர்களும் அந்த குடிலின் வாயிலுக்கு இருபுறமும் உயர்த்தி வைக்கும் போது நின்று கொண்டனர்.

வந்திருந்த இருவரும் செம்மண் மேடையில் அமர வைக்கப்பட்டு அவர்கள் பருகுவதற்கு பானம் கொடுக்கப்பட்டது.
சிறிது நாழிகைகள் மௌனம்.
ம்ம். ம்ம். ம்ம் என தன் குரலை கணைத்து மௌனத்தை கலைத்து மற்றவர்களை நிதர்சன உலகிற்கு அழைத்து வந்தார் தேரில் உட்கார்ந்து வந்தவர்.

 

மன்னர் மன்ன. சோழ குலத் திலகம். சோழர்குலம் வெற்றி கொடி நாட்ட, இலங்கை சென்று  பெரும் பங்காற்றிய வாணர்குல வேந்தே.மாமன்னரின் தளபதிக்கு பணிவான வணக்கங்கள் என கூட்டத்தாரில் தீப்பந்தம் பிடித்திருந்தவர் தனது வணக்கத்தினை கூறி, தீப்பந்த ஒளியியை அவர் அருகே கொண்டு செல்ல. பிரகாசமான அந்த வீரவேங்கையின் முகம் அனைவருக்கும் புலப்பட்டது.

சாதனை நாயகனாகவும், சாகசப் பயண போர்த்தளபதியாகவும் இன்றைய சூழ்நிலை என்னை உருவாக்கியிருக்கிறது. சுந்தரரின் புதல்வர், சோழ தேச பட்டத்து இளவரசர். ஆதித்த கரிகாலரே என் ஆத்மார்த்த குருவும், எனக்கு வாழ்வளித்த மகானும் ஆவார். ஆதித்த கரிகாலரின் தூதுவராகவே சோழ தேசத்திற்கு எண்ணற்ற பல கனவுகளோடு அனுப்பப்பட்டேன். பட்டத்து இளவரசரின் அந்த அந்த உத்தரவினை ஏற்க எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும்.

வளவர் குலத்தினர் வழங்குறுந் தவமாய் அளவிலா அறிவும் ஆண்மையும் கெழுமிய பெருநற்கிள்ளி.! பெரும்பே ராள.!
உரியநின் றந்தை ஒருபெருஞ் சோழர்
நெஞ்சப் போக்கில் நீகாண் மாற்றம்
எஞ்சா துரைமதி எளியவர் கினியே.!

என்கின்ற இந்த வரிகளுக்கேற்ப. துணிவிற்க்கே துணைபோன இளவரசர் கரிகாலர் நிர்பந்தத்தின் பேரிலே இந்த தேசத்தை அடைந்து. எண்ணற்ற பல சோதனைகளையும், மாமன்னரின் நட்பை பெற்ற சாதனையும். என் உயிரிலும் மேலான இளவரசர் ஆதித்த கரிகாலரின் எதிர்பாரா இழப்பினையும் சந்தித்த இந்த சோழ தேசம். உத்தம சோழரின் ஆட்சிக்குப் பிறகு. நமது மாமன்னர் ராஜேந்திர சோழரின் ஆட்சியில். நாடும், நாட்டு மக்களும் நலமாக செழிப்புடன் இருக்கின்றார்கள். மகிழ்ச்சி ததும்பிய இந்த வேலையில், உள்ளம் குமுறும் நம் எண்ணங்கள் என்னவோ தினம் தினம் உறங்காது துடித்துக் கொண்டிருக்கிறது. பட்டு பாய் மெத்தையில் படுத்தாலும், உறக்கம் இன்றி.
பல்லவ சாம்ராஜ்யம் வெற்றி கண்டு, பொன்வேய்ந்த காஞ்சி தலைநகரில் ஆட்சி புரிந்து. சோழ சாம்ராஜ்யத்தை நிலைநாட்டி. வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்த கரிகாலரின் வீரத்தை நினைக்கும் போதெல்லாம் மனம் ஏதோ ஒரு ஏக்கத்தோடு  இழப்பினை நோக்கி பயணிப்பதாக தோன்றுகிறது.

மேலும்.கடந்த ஆறு ஆண்டுகளாக நான் மாமன்னர் அருள்மொழிவர்மனோடு இணைந்து. தஞ்சாவூர் பெரிய கோவிலின் சிற்ப, கோபுர, கல்வெட்டு வேலைகளை  கவனித்து வந்ததுள்ளேன். இன்னும் இரு தினங்களில் கோவில் குடமுழுக்கு கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.  இந்த வேளையில், தஞ்சை தேசத்தில் நாட்டு மக்களும், அயல்தேச வணிகர்களும். பலதேச மாமன்னர்களும். சிற்றரசர்களும். படைத்தளபதிகளும் கைக்கோளர் படையினர் .வேளாரர் படையினர். வேளக்காரப் படையினர். விந்திய மலையினரும் தஞ்சை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்க. என்னுடைய எண்ண ஓட்டம் என்னவோ உங்களை நோக்கியே பயணித்துக் கொண்டிருந்தது.
அதன் பொருட்டே நானும் என்னுடைய உற்ற தோழர் பார்த்திபேந்திர பல்லவரும் இங்கே வந்துள்ளோம் என தனது உரையை முடித்தார் வாணர் குல  வந்தியத்தேவன்.

வந்தியத்தேவன் முழங்கிய வீர முழுக்கதிணைக் கேட்டு அருகில் தலை குனிந்து அமர்ந்திருந்த பார்த்திபேந்திர பல்லவர் சட்டென நிமிர்ந்து.
மன்னர் மன்ன. அரசர் அவர்களின் தலைமை தளபதி. வெற்றி வேந்தே. கடந்த சில நாட்களாகவே தங்களின் சோகம் ததும்பிய சுரம்சூழ்ந்துள்ள முகத்தினைக் கவனித்து  வருகிறேன். அரசர் குலமும், மண்டல மக்களும், தஞ்சைப் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு திருவிழாவினால் சந்தோஷத்தில் திளைத்திருக்க. அந்த மகிழ்ச்சியில் சிறிதுகூட பங்கெடுக்காமல் நீங்கள் முக வாட்டத்தோடு  இருந்ததையும் கவனிக்க மறக்கவில்லை நான். அதன் பொருட்டே இன்று காலை தங்களிடம் தனியாக நான் பேசினேன்.
வீரமும் தியாகமும் விந்தையாக சிந்தையில் மலர்ந்து காணப்படும் தங்கள் முகத்தில்.!
கடந்த சில ஆண்டுகளாகவே முன்பிருந்த சந்தோஷங்களை காண இயலவில்லை. கடந்த சில ஆண்டுகளாக எண்ணற்ற பல தேச படைகளுக்கு தலைமை ஏற்று வழி நடத்திய தாங்கள் உள்ளம் சிதறிக் கிடைப்பதையும் என்னால் கண்டு சகிக்க இயலவில்லை.

அதன் பொருட்டே உங்களை நான் இங்கு அழைத்து வந்துள்ளேன் என தனது கருத்துக்களை கூறி அமர்ந்தார் ஆதித்த கரிகாலனின் அருமைத் தோழரும் வல்லவரையன் வந்தியத்தேவனின் நெருங்கிய நண்பருமான தேரோட்டி வந்த பார்த்திபேந்திர பல்லவர்.

இருவரும் பேசி முடித்த பின்னர் அந்த சிறு கூட்டத்தில் தீப்பந்தங்களை பிடித்து வரவேற்ற அந்த இளைஞன் தனது பேச்சினை தொடங்கினான்.

எந்தந்தை தந்தைதம் வாணர் குலத்தோங்க. ஏழ்படிகால் சோழஞ்செழிக்க.
ஈழம் சென்றே எந்தை வேந்தே.
சோழம் செழிக்க வாழிய பல்லாண்டு.
என வாழ்த்துகிறேன். மேலும்
பல்லாண்டுகளாக சோழ தேச அரச மரபினருக்கு அரணாகவும். படைத்தளபதியாகவும் பயணித்து. தங்கள் உயிரையே துச்சமென கொடுக்கத் துணிந்த என் தந்தையே.! உங்களுக்கு எம் பணிவான வணக்கங்கள் எனக்கூறி தனது சிரம் தாழ்த்தி வந்தியத்தேவன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றான் அய்யனார் கோவிலில் மூழாம் வாசித்து முறுக்கேறிய உடம்புடன் காணப்பட்ட ரங்கமஞ்ச ஆதித்தன்.

ஆம். குந்தவை பிராட்டியார் வந்தியத்தேவன் தம்பதியரின் மகன் இந்த ரங்க மஞ்ச ஆதித்த சோழன்.

ஆதித்த கரிகாலர் சுந்தரசோழர் மறைவிற்குப் பிறகு உத்தம சோழர் ஆட்சி மலர்ந்தது சோழ தேசத்தில். அந்த இடைப்பட்ட காலத்தில் அருள்மொழிவர்மர் அவரது மனைவி வானதி தந்திசக்தியும். தாயார் வானவன் மாதேவி. பெரிய தாயார் செம்பியன் மாதேவி  தலைமையில். வந்தியத்தேவன் குந்தவை பிராட்டியின் மணவிழாவால் பூக்கோலம் பூண்டது பழையாறை அரண்மனையில்.

சில ஆண்டுகள் கழித்து மன்னர் அருள்மொழிவர்மரின் கட்டளைக்கிணங்க. தனது நண்பன் பார்த்திபேந்திர பல்லவர் உடன் இலங்கையை நோக்கி பயணிக்க பணிக்கப்பட்டது.  அங்கே கொடும்பாளூர் வேளாளர்களின் படைக்குத் தலைமை ஏற்று. ஈழத்துச் சேனாவீரர்களை விரட்டி வெற்றி வாகை சூடி, சோழ தேசம் சில ஆண்டுகளில் வாணர்குல தளபதியின் தவப்புதல்வனாக பழையாறை அரண்மனையில் பிறப்பெடுத்தான் இந்த ரங்க மஞ்ச ஆதித்த சோழன்.
இவன் பிறந்த அந்த வேலையில் நாட்டின் அரசியல் சூழ்நிலை சோழ மண்டலத்தாருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாலும். சோழ மன்னர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் பாண்டிய தேச ஆபத்துதவிகளாலும், இலங்கை அய்ந்தாம் மகிந்தனின் ஒற்றர்களாலும் இவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல்கள் இருக்கின்றதென இலங்கையிலிருந்து கொடும்பாளூர் தேவர் அவசர அறிவிப்பு அனுப்பியிருந்த காரணத்தினால். பிறவருடங்களிலேயே அன்னையிடமிருந்து பிரிக்கப்பட்டு. தனது அடையாளத்தை மறைத்து. இங்கே முனையதரையர்கள் மற்றும் காலாட் தோழ உடையார் வேங்கட உடையாரின் பாதுகாப்புடனும் சீரும் சிறப்புமாக. வனத்தில் மிகுந்த பாதுகாப்போடு வளர்க்கப்பட்டு வருகிறார் வாணர்குல முடிசூடா இளவரசனான ரங்க மஞ்ச ஆதித்த சோழன்.
அவனோடு அருகில் இருந்தவர்கள் காலாட் தோழ உடையாரின் புதல்வர் நல்லப்ப உடையார். ரெங்கமஞ்ச ஆதித்த சோழனின் வளர்ப்புத் தாய்  செல்லம்மா.  அவரது கணவர் வைத்திலிவைத்தியலிங்கம். சிவ பக்தையான சீட்டம்மாள் மற்றும் பெருமாள் கோவில் பூசாரி சின்னாழ்வான் அவனது மனைவி மற்றும் மகன் மகள். என எழுவர் எண்ணிக்கையில் ஒன்றாக வசித்து வந்தனர்.

ஓவிய ஆர்வலர்களுக்கும் , வரலாற்று அறிஞர்களுக்கும் ஒத்த கருத்துக்களை  காண இயலாதவாறு சர்ச்சைக்குரிய பல ஆச்சரிய
வரலாறுகளை தனக்குள் புதைந்து வைத்து பயணப்பட்டுக் கொண்டிருக்கும் சோழ சாம்ராஜ்யம். எண்ணற்ற பல விந்தைகளையும் வீரம் செறிந்த போர் முனைகளையும். ஆகச் சிறந்த பாருலகில் பல சரித்திரங்களை பெற்ற பேரரசு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சோழர்கள் பற்றிய ஆயிரமாயிரம் வரலாற்று சரித்திரங்கள் தினம் தினம் விளைந்த வண்ணம் இருந்தாலும். முதலாம் ராஜேந்திர சோழன் என புகழ் பெற்ற அருள்மொழிவர்மரின் மூத்த தமையனான ஆதித்ய கரிகாலச் சோழனின் எதிர்பாராத மரணம்  சோழ வம்சத்தையே சில ஆண்டுகாலம் நிலைகுலையச் செய்தது என்றால் மிகையாகாது.

சுந்தர சோழர் தனது இறுதி காலத்தில் மூத்த மகனின் அகால மரண செய்தியை தாங்கிக்கொள்ள முடியாத மன வருத்தத்திலேயே இறந்து உள்ளார் என்பதையும் வரலாறு நமக்கு எடுத்துரைத்துள்ளது.
காஞ்சி கொண்ட.  வீர பாண்டிய சோழன் தலை கொய்த வீர புருஷன். பாண்டிய குலத்தை வென்றெடுத்த வெற்றிவேந்தன் என அரும் பெயரெடுத்த ஆதித்த கரிகாலனுக்கு பின்னர் பல அமானுஷ்ய கதைகள் வெளிவந்தாலும். பட்டத்து இளவரசரான அவரின் அகால மரணத்திற்கு உடந்தையாக இருந்தவர்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இன்றைய தினம் நடுநிசியில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வால் பிடித்த கை. வேல் பிடித்து எதிரியை நேருக்கு நேராக சந்தித்து தலையைக் கொய்த கை. போர் முறை என்றாலும் புனித பக்தி முறை என்றாலும் ஆகச்சிறந்த அறிவிலர் போல் சோழ சுந்தரருக்கு இணையான சிந்தனைவாதியாக வலம் வந்த ஆதித்ய கரிகாலன் சோழருக்கு வீரவணக்கம் செய்கின்றேன் என வீர முழக்கமிட்டார் பார்த்திபேந்திர பல்லவர்.

தெற்கில்பாண்டியர்களும்,வடக்கில் இராட்டிரகூடர்களும் வலிமையில் மேலோங்கி வந்து கொண்டிருக்கும் போது.ஆதித்த சோழர் நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை விரட்டி. அவர்கள் மேலும் வராதபடி வலுவான படைகளை உருவாக்கி.விசயாலய சோழன் காலத்தில் தொடங்கி ஐந்து தலைமுறைகளுக்குப் பினனால் சோழ நாட்டிற்கு ஓயாத தொல்லையாக இருந்த இரு பெரும் அரசுகளை  முற்றிலுமாக ஒழித்து சோழப்புகழ் செறிந்த மாவீரன் என வீர முழக்கமிட்டனர். மேலும்
காவிரி வள நாடு, பொன்னி வள நாட்டுச் சோழர்கள் என புகழ் விளங்க . தொண்டை மண்டலம்.விளாம்பாடி. கலிங்கம். கடாரம் என இன்னும் இமய வரம்பினில் புலிக்கொடி ஏற்றி‌ வெற்றியோடு பாரில் பரந்து விரிந்த மும்முடிச் சோழர்கள் எனப் பெயரெடுத்து. காஞ்சியில் தங்கத்தால் மாளிகை செய்து ஆட்சி புரிந்த மாமன்னன் ஆதித்த கரிகாலன் சோழனின் படைத் தளபதியான வந்தியத்தேவன் ஆகிய நான் உறுதிபடக் கூறுகிறேன்.

சோழ சாம்ராஜ்ஜியத்தை அருள்மொழிவர்மர் ஆண்டு கொண்டிருக்கும் இந்த வேலையில் இளவரசர் ஆதித்த கரிகாலரைக் கொலை
செய்தவர்களை தண்டிக்க. உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்க மாமன்னரிடம் வலியுறுத்தி வருகிறேன். மீண்டும் அரசரிடம் இதுபற்றி முறையிட்டு. இதில் சம்பந்தப்பட்டு. உத்தம சோழனால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு. நாடுகடத்தப்பட்ட பாண்டிய தேசத்து ஆபத்துதவிகள் மற்றும் காந்தளூரில் இருக்கும் சில நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கி! ஆதித்த கரிகாலருக்கு பிராயச்சித்தம் தேடும் வரையில் எனக்கு உண்ணவோ. உறங்கவோ. நேரமில்லை என வீராவேசத்தோடு எதிரில் இருந்தவர்களிடம் உக்கிரமாகக் பேசினார் முழங்கி அமர்ந்தார் வல்லவரையர் வந்தியத்தேவர்.

வாணர்குல வந்தியத்தேவன் மண் மேட்டில் அமர்ந்து மறுபடியும் கர்ஜனை குரலில்.
ரெங்கமஞ்சஆதித்த சோழனினைப் பார்த்து.

என் அருமைத் தவப் புதல்வ. சோழ சாம்ராஜ்யம் பல வெற்றி சரித்திரங்களையும். வீர சரித்திரங்களையும் ஒருங்கே பெற்று இருந்தாலும். நமது குலத்தில். யாரும் எதிர்பாரா வேளையில் பல துர்மரணம் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருந்துள்ளன உதாரணமாக.

முப்பத்திரண்டு போர்களில் ஈடுபட்டு, உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களை ஆபரணங்களாகப் பூண்டிருந்த விஜயாலய சோழனின் வீர மரணம் சோழ சாம்ராஜ்யத்தை சில காலங்கள் நிலைகுலையச் செய்தது.
முதலாம் பராந்தகனின் மகன் இளவரசன் தக்கோலப் போரில் இறந்தாரே. அந்த மரணத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் பராந்தகர் இல்லை என்றாலும், தனது இரண்டாவது மகன் கண்டராதித்தனை அரியணை ஏற்றினார்..
கண்டராதித்தன் மகன் உத்தம சோழன் இள வயதாக இருந்ததால் தனது தம்பி அரிஞ்சயனை அரியணை ஏறினான். ஆத்தூர் போரில் அகால மரணம் அடைந்தார் அரிஞ்சய சோழர்.  இந்த அரிஞ்சயனுக்குப் பிறந்த உனது தாத்தா சுந்தர சோழர் ஆட்சிக்கு வருகிறார். அவர் ஆட்சியில் உனது மாமாவும் சுந்தர சோழரின் மூத்த மகனும் நமது பட்டத்து இளவரசருமான இரண்டாம் ஆதித்த கரிகாலர் அகால மரணம் அடைகிறார்.அதற்குப் பின் சோழ சாம்ராஜ்யம் பல திருப்பங்களை சந்தித்திருந்தாலும் இளவரசரின் மரணத்திற்கு காரணமான எவரும் இதுவரை தண்டிக்கப் படாமல் இருப்பது பெருத்த சந்தேகத்தை எனக்கு ஏற்படுத்தி உள்ள காரணத்தினாலேயே.! உன் அன்னையின் அனுமதியோடும். சோழ தேச அரசமரபினரின்  ஆலோசனையின் படியும்.
இளம் பிராயத்திலேயே உன்னை அரண்மனையில் வளர்க்காமல். யாருக்கும் தெரியாமல் இந்த வனத்தில் வெங்கடப்ப சிற்றரசரின் உதவியோடும். முனையதரையர் படையினரின் உதவியுடன் வளர்த்து வருகின்றோம்.
குறிப்பிட்ட சிலரை தவிர உன் பிறப்பு பற்றிய ரகசியம் யாருக்கும் தெரியாது. வனத்தில் உள்ள மக்களுக்கு நீங்கள் அனைவரும் சைவ வைணவ மதப் பற்றாளர்கள் எனவும். முனையதரைய படையினரின் ஆசியோடும், உடையார்பாளையம் மன்னர் வேங்கப்ப உடையாரின் அனுமதியோடும் இங்கே உள்ள கழுகு வன மக்களோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும். நேரம் வரும்போது மக்களுக்கு நாமே எடுத்துச் சொல்வோம்.
இயற்கை வளம் மட்டுமல்லாது தமிழ் கொஞ்சும் எழில் வளமும், வீரத்திற்கு வித்திடும் சோழ தேசத்தினர். யானைப்படைக்கு போர் பயிற்சி கொடுக்கும் களமாகவும். அறிவிலே  சிறந்த அறிஞர்கள் பலரை தருவிக்க, கல்வி போதிக்கும் எழில் கொஞ்சும் பூந்தோட்ட குருகுலமும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள இந்த கழுகு வனத்தின் பெயர் காலப்போக்கில் கழுமங்கலம் என மருவி வழங்கி வரலாயிற்று.
(இன்றளவும் இந்த ஊர் அய்யனார் கோவிலிற்க்கு எதிரே, புளியந்தோப்பிற்க்கு கிழக்கே உள்ள முந்திரிக் காட்டுப் பகுதி “ஆனை கள மானிய கொல்லை” என்றே  அழைக்கப்படுகிறது).

வந்தியத்தேவன் மேலும் தனது உரையை தொடர்ந்த வண்ணம்.
எனதருமை புதல்வ. ஆதித்த கரிகாலரின் தம்பி அருள்மொழி என்ற ராஜராஜன். அவரின் நட்பு எனக்கு கிடைத்தது என்பது இந்த உலகத்தில் நான் செய்த பெரும் பாக்கியம்.அதுவும் இல்லாது அவரின் நம்பிக்கைக்குரிய. அவர் அதிக பாசம் வைத்துள்ள அவரது தமக்கையையே எனக்கு மணம் முடித்துக் கொடுத்ததும், இந்த உலகிலேயே மிகவும் பாக்கியம் செய்தவன் நான் தான் என்பதையும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும்.! சோழ வம்சத்தில் நடந்துள்ள பல சம்பவங்களை பார்க்கும் போது உள்ளூர எனக்கு எழுந்த பல பெருத்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே உன்னை அரச பரம்பரையில் வழிகாட்டாமல் வளர்த்துள்ளேன்.
மக்கள் நெருக்கடி இல்லாத ஒரு வனத்தில் வளர்ந்தாலும் ஒரு இளவரசன் எப்படியெல்லாம் வளரவேண்டுமோ.! வாள் வீச்சு. வில் வித்தை என அனைத்து போர்முறை பயிற்சிகளையும் ராஜதந்திர சிந்தனைகளையும் உனக்கூட்டி வளர்க்கப்படுவதை உள்ளதை நீயும் அறிவாய்.
இதோ இன்னும் இரு தினங்களில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் குடமுழுக்கு திருவிழா முடிந்த பின்னர் மாமன்னர் ராஜராஜ சோழன் என அகில உலகம் பேசும் உமது இளைய மாமா அருள்மொழிவர்மரிடம் கேட்கப் போகிறேன்.

மலர் மறக்கும் தேனீக்கள் மண்ணில் உண்டோ.! 
கவி மறக்கும் புலவன் தமிழில் உண்டோ!
அதுபோல .
வாணர்குல வல்லவரையன் வந்தியத்தேவன்
தன் உயிர் உள்ளவரை மறக்க முடியுமா?
பல்லவ குலம் செழிக்க வீரபாண்டியன் தலைகொய்த ஆதித்த கரிகாலரை.!

என தன் விழிகள் நனைய பேசிய வல்லவரையர். ஆதித்த கரிகாலர் மீது தான் வைத்திருந்த ஒப்பற்ற பாசத்திற்கும் அதன்பொருட்டு பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலரின் துர் மரணத்திற்கு காரணமான பாண்டிய தேச ஆபத்துதவிகள் சேர, ஈழ நாட்டுக் கூட்டணி. காந்தளூரில் போர் பயிற்சி பெறுவதாக செய்திகள் கிடைத்துள்ளது.   அந்த நாசகார கும்பலை தண்டிக்க உபய வழி செய்யும் படி கேட்க போகின்றேன். அப்படி அவர் அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இன்னும் சில தினங்களில் என் தலைமையிலும். என் நண்பன் பார்த்திபேந்திர பல்லவர் மற்றும் கருணாகரத் தொண்டைமான். காலாட்கள் தோழ உடையார் இவர்களின் துணையோடு.
விரைவில் அவர்களைக் கண்டுபிடித்து சோழ தேசத்து மக்கள் முன் நிறுத்தி தக்க பாடம் புகட்டினால் நான் என் நெஞ்சில் பதிந்துள்ள ரணம் ஆறும். அதற்குப் பிறகே ரங்கு மஞ்ச ஆதித்த சோழனான என் புதல்வனை இந்த வனத்தில் இருந்து திரும்ப அழைத்து தஞ்சையின் கோட்டை வீதிகளில் ஊர்வலமாக தேசம் காண அழைத்துச் செல்வேன். என கர்ஜிக்கும் சிங்கத்தின் உயர்த்திய குரலோடு அந்த கூட்டத்தினரை பார்த்து பேசிக் கொண்டிருந்தார் வல்லவரையர் வந்தியத்தேவன்.
நேரம் போனது தெரியவில்லை போலும். கிழக்கில் பிறந்த சந்திரன் மேற்கில் மறைய ஆயத்தமாகி கொண்டிருந்தான்.
குடிலுக்கு வெளியே ரதத்திற்கு பாதுகாப்பாக வந்திருந்த பாதுகாவலர்கள் நான்கு பேரும். நடுநிசி முடிந்து அதிகாலை வேளை வரை சம்பாஷணை கூட்டம் நடந்து கொண்டிருந்ததாலும். வெகு தொலைவிலிருந்து குதிரையில் பயணப்பட்டு வந்த அசதியில்  இரண்டு பேர் குடிலின் வாயிலிற்கு அருகே அமர்ந்த படியே உறங்க, மற்ற இருவர் காவல் பணி செய்து கொண்டிருந்தனர்.
குடிலின் உள்ளே இவர்களின் சம்பாஷனைகள் மேன்மேலும் தொடர்ந்து கொண்டிருக்க. வெளியே நான்கு ஜோடி கண்கள் இமைக்காது நோக்கிக்கொண்டிருந்தன இவர்களின் உக்கிரமான உரையாடல்களையும். சபதம் எடுத்த சம்பாஷணைகளையும்.
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அந்த நான்கு ஜோடி கண்கள் தங்களை யாரும் பார்க்கவில்லை என்ற எண்ணத்தோடு குடிலை சுற்றி உலாவிக் கொண்டிருக்க.
வீரர்களின் காலாட்தோழ நண்பரைப்போல. தேரோடு பூட்டியிருந்த அந்த இரண்டு குதிரைகளின் கண்களில் கனகச்சிதமாக அகப்பட்டுவிட்டனர் அவர்கள்.

வெகு லாவகமாக இரு குதிரைகளும் ஒத்த குரலாக உரத்த குரலில் கனைத்த போது தான். வெளியே ஏதோ நடமாட்டம் இருப்பதை போல் உணர்ந்ததால், பூந்தோட்ட குடிலின் உள்ளிருந்து அவசர அவசரமாக வெளியே ஓடி வந்தார்கள்.
உள்ளிருந்து தடதடவென ஓடி வரும் சத்தம் கேட்டவுடன் வெளியே ஆழ்ந்த நித்திரையில் இருந்த இரு வீரர்களும் குய்யோ முய்யோ என கத்திக்கொண்டே ஒருவரின் மேல் ஒருவர் ஏறி. காலால் எட்டி உதைத்தும் உருண்டு பிறண்டு ஆர்ப்பரித்து எழுந்து ஆளுக்கொரு திசையில் ஓடினர். அவர்களுக்கு முன்னால் காவலுக்கு இருந்த மற்ற இரு வீரர்களும் ஓட. பின்னால்  தூக்க கலக்கத்தில் மற்ற இரு வீரர்களும் ஓட.  உள்ளே இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என புலப்பட்டவே நாழிகை நேரம் தேவைப்பட்டது.
அதற்குள் அந்த நான்கு தடித்த உருவங்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக விருவிருவென ஓடி அருகிலுள்ள புளியந் தோப்பில் ஒளிந்து கொண்டனர்.

உள்ளிருந்து வெளியே வந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
வந்தது யாராக இருக்கும். எதற்காக அவர்கள் நம்மை நோட்டமிட வேண்டும் என புரியாத புதிராக எண்ணற்ற பல கேள்விகளுடனும் வந்தது விரோதியா. துரோகியா.  அல்லது ஏதாவது வேட்டை விலங்குகளா எனக் கணிக்க இயலாமல் வியர்த்து விறுவிறுத்து ஆளுக்கொரு திசையாக கையில் கிடைத்த வேல் கம்புகளுடன் தேட ஆரம்பித்தனர்.
நாழிகை நேரம் சுத்திச்சுத்தி தேடிய பின்னர் யாரும் கிடைக்காததால் அனைவரும் வெறுங்கையுடன் குடிலுக்கு திரும்பியபோது சந்திரன் மேற்கு வானத்தின் அடியில் மறைந்து  விடை கொடுத்து கொண்டிருந்தான் இரவுப் பயணத்தின் விடியலுக்கு.

-தொடரும்