தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார் வழக்கறிஞர் அரவிந்த் சுவாமிநாதன். அந்த அமனுவில், இறந்தவரின் பெயர், முகவரியை மட்டும் மாற்றி ஒரே பிரேத பரிசோதனை அறிக்கையை தருவதாக அவர் புகார் கூறியிருந்தார். மேலும், பிரேத பரிசோதனை செய்வதற்கு உரிய மருத்துவர்கள் இல்லாததால் 700 அறிக்கைகள் கையொப்பமிடாமல் உள்ளன என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு மருத்துவமனைகளுக்கான மூத்த தடயவியல் நிபுணர் நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்தனர்.

மேலும், இவ்வழக்கில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வரை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்ட நீதிபதிகள்,  வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணிக்கு சரியாக வராததால், மருத்துவமனையில் பணிபுரியும் காவலாளி மற்றும் தொழிலாளிகள் சிகிச்சை பார்ப்பது மற்றும் பிரேத பரிசோதனை செய்வது போன்ற அவலம் அரங்கேறி வருவதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வரும் நிலையில், இந்த வழக்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.