மீண்டும் பெண்களின்மீதான ஒரு பாலியல் அத்துமீறல் நிகழ்வு. அந்த நிகழ்வைத் தொடர்ந்து நிறைய விவாதங்கள், கருத்துகள், கேள்விகள் என நமது சமூக வலைதளங்கள் அத்தனை பரபரப்பாய் இயங்குகிறது. சில நாட்களில் அதை எல்லாம் மறந்துவிட்டு நம் வேலைகளை வழக்கம்போல பார்க்கத் தொடங்கிவிடுவோம்.

“இப்படிப்பட்ட ஒரு திடீர் எழுச்சியின் விளைவாக நாம் என்ன சாதிக்க முடியும்? மீண்டும் ஒரு பரபரப்பு என்பதைத் தவிர அந்த நிகழ்வின்மீதான; அதைத் தடுப்பதின்மீதான நமது அக்கறைதான் என்ன?” என்ற கேள்வியை நம்மை நோக்கியே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

ஒரு கொடுங்குற்றம் நடக்கும்போது, நம் அத்தனைபேரும் பரிதவிப்பது ஒன்றே ஒன்றுக்காகத்தான் “இதுபோன்ற நிகழ்வு இனி நடக்கக்கூடாது” அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாம் நிச்சயம் யோசிக்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தின் முழுபரிணாமத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இதில் உள்ள ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது கிட்டதட்ட இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இதேபோன்று பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  “இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்படும்வரை ஏன் இந்தச் சம்பவம் வெளியே வரவேயில்லை?”  “ஒரு பெண்கூட இதை வெளியில் சொல்லாமல் இருந்தது ஏன்?”  “அவர்களை வெளியே சொல்வதை தடுத்தது எது?”  “எதன்மீதான அல்லது யாரின்மீதான பயத்தால் அவர்கள்  ஒருவருக்கும் சொல்லாமல் தங்களுக்குள்ளேயே இதை இத்தனை காலம் புதைத்து வைத்துகொண்டனர்?”, ‘குற்றவாளிகள் மீதுள்ள பயமா?’ அப்படி இருந்தால் அவர்கள் அதில் மீண்டு வந்த பிறகாவது சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை? அப்படியென்றால் அவர்களுக்கு இருந்தது தங்களது குடும்பத்தினரிடம் மீதுள்ள பயம். தங்களது அப்பாவின்மீது, அண்ணனின்மீது, தம்பியின்மீதுள்ள பயம். பாதிக்கப்பட்ட தன்னையே குற்றவாளிகள் ஆக்கிவிடுவார்கள் என்ற பயம். இந்த பயம்தான் இந்தக் குற்றச் சம்பவத்தின் ஆணிவேர். இந்த பயத்தை அடிப்படையாகக்கொண்டுதான் குற்றவாளிகள் இதைத் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக செய்துவருகின்றனர். நம் சமூகத்தில் பெண்களின்மீது தொடர்ச்சியாக நடக்கும் பாலியல் அத்துமீறல்களுக்கு ஏதோ ஒரு வகையில் நமது குடும்ப அமைப்பு சாதகமாக இருக்கிறது என்பது கசப்பான உண்மை.

வளரிளம் பருவத்தினரை அழைத்துக்கொண்டு என்னிடம் வரும் பெற்றோர்களிடம் நான் திரும்ப திரும்ப வலியுறுத்துவது ஒன்றைதான் “இந்தப் பருவத்தில் அவர்களின் நடவடிக்கையில் சில மாறுதல்கள் வரலாம், பாலியல் ஈர்ப்பு என்பது இந்த வயதில் இயல்பானது, அதன் விளைவாக எழக்கூடிய சந்தேகங்களையும், கேள்விகளையும், பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய இடத்தில் நீங்கள் இருக்க வேண்டும். அதை “தவறு, ஒழுக்கமின்மை, கெடுதல்” என்று சொல்லி தடுக்க முற்பட்டால், அதன்பிறகு அவர்கள் உங்களிடம் எதையுமே பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். உங்களுக்குத் தெரியாமல் இந்த வயதில் அவர்கள் செய்யும் அத்தனையுமே அவர்களுக்கு ஆபத்தானதாகத்தான் முடியும். தவறே செய்தாலும் உங்களுக்குத் தெரிந்து அது நடக்க வேண்டும், அந்தச் சுதந்திரத்தை நீங்கள் கொடுக்கும்போதுதான் அவர்கள் தங்களின் சிக்கல்களை, புறவுலகில் தங்களுக்கு நேரும் இன்னல்களை உங்களிடம் சொல்வார்கள். இல்லையென்றால் உங்களுக்கு மட்டும் தெரியக்கூடாது வேறு யாருக்கு வேண்டுமானால் தெரியலாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள் அது ஆபத்தானது”. இந்தச் சம்பவத்தில் இருந்து நமது குடும்ப அமைப்புகள் இந்தப் படிப்பினையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமது குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு நமது குடும்ப அமைப்பு எத்தனை இலகுவாக இருக்கிறது என்பதை நாம் திறந்த மனதுடன் ஆராய வேண்டும். பாலின பேதங்களையும், பெண்களின் மீதான ஒடுக்குமுறையும் போதிக்கும் அமைப்பாகவே நமது குடும்ப அமைப்பு இருந்து வருகிறது, குழந்தைகளின்மீதான பெற்றோர்களுக்கு வரக்கூடிய இயல்பான அன்பையும், பாசத்தையும், உணர்வுகளையும் கலாச்சாரம், பண்பாடு, சாதி போன்ற கோட்பாடுகளைக் கொண்டு நிராகரிக்கிறோம். அவர்களின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை எல்லாம் ஸ்டிக்மட்டைஸ் செய்து அதைப்பற்றி பகிர்ந்துகொள்வதையே நாம் தடுத்து விடுகிறோம். பெண் உடல், கற்பு போன்றவற்றின்மீது செயற்கையாய் பூசப்பட்ட புனிதபிம்பங்களை அவர்களுக்குள் திணிக்கிறோம். அதனால் அவர்கள் இது தொடர்பாக தங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளையும், இன்னல்களையும் வெளியே சொல்லாமல் தங்களுக்குள் மறைத்துக்கொள்கின்றனர்; இந்த வெளிப்படையற்ற நிலையைதான் குற்றவாளிகள் உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். ஒருவன் ஒரு பெண் வீடியோவை வைத்து மிரட்டும்போது அதற்கு அவள் எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் தன் தந்தையிடம் வந்து “இப்படி ஒருத்தன் என்னை மிரட்டுகிறான்” என்று சொல்லியிருந்தால் அதன்பிறகு அந்தக் குற்றசெயல் முற்றிலுமாக தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அதைப் புரிந்துகொள்ளும் நிலையில் நம்முடைய தந்தைகள் இருக்கிறார்களா? என்பது தான் கேள்வி. அப்படி இருந்திருந்தால் ஏதாவது ஒரு பெண் நிச்சயம் இதை முன்பே சொல்லியிருப்பாள். ஆனால் ஏன் சொல்லவில்லை? அப்படி சொன்னால் தன் மீதே அந்த தந்தை குற்றத்தைச் சுமத்திவிடுவார் என்ற பயம், “நீ எதுக்கு அவன நம்பி போன” என்று குற்றத்தின் முழு சுமையையும் தன்மீது ஏற்றி வைத்துவிடுவார் என்று பயம்.

 

நமது குழந்தைகளுக்கு இருக்கும் குடும்பத்தின்மீதான இந்த பயத்தை போக்கவேண்டியது நம் ஒவ்வொருவரது கடமை. அதன் வழியாகவே நமது குழந்தைகளை நாம் பாதுகாக்க முடியும். நமது குழந்தைகளிடம் ஒரு வெளிப்படைத்தன்மையை நாம் உருவாக்க வேண்டும்; அப்படி செய்ய வேண்டும் என்றால், அவர்களின் உணர்வுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்; எந்த முன் முடிவுகளும், நிபந்தனையும் இல்லாமல் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப்பற்றி அவர்களிடம் பேச வேண்டும். வெளியே என்ன நடந்தாலும் எப்படிப்பட்ட சிக்கல்களில் மாட்டிக்கொண்டாலும் இந்தக் குடும்பம் உன்னை புரிந்துகொள்ளும், உன்னோடு சேர்ந்து நிற்கும் என்ற நம்பிக்கையை நம் குழந்தைகளிடம் நாம் ஏற்படுத்த வேண்டும். பாலியல்ரீதியாக ஒருவன் என்னை மிரட்டுகிறான், மிரட்டி என்னை பணியவைக்கிறான் என்ற சூழலில் நமது குழந்தைகளின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? ஒரு சமூகமாக எத்தனையோ பேர் இருந்தும் அவளின் நிதாரதரவான மனநிலைக்கு என்ன காரணம்? “யாரையோ நம்பி அவள் ஏமாந்து விட்டாள்” என அவள்மீது பலி சொல்லிக்கொண்டிருக்கிறோம்.  “நம்மை ஏன் அவள் நம்பாமல் போனாள்?” என்ற கேள்வியை வசதியாக மறந்துவிட்டோம்.

-சிவபாலன் இளங்கோவன்