சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாகப் பொன்மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

சிலைக் கடத்தல் வழக்குக்களை விசாரிக்க ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்துக் கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். சிலைக் கடத்தலில் தொடர்புள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் பலரை கைது செய்து விசாரணை நடத்திவந்தார் பொன்மாணிக்கவேல். தமிழக அரசு போதமான ஒத்துழைப்பை தங்களுக்கு தரவில்லை எனப் பொன்மாணிக்கவேல் தரப்பிலும், பொன்மாணிக்கவேல் தங்களுக்கு எந்த அறிக்கையும் அளிக்கவில்லையென தமிழக அரசு தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணையில் தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதித்து, ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு கூடுதலாக ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கி, அவரைச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுச் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணையில், சிலைக் கடத்தல் வழக்கைப் பொன்மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம் என்றும் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில் பொன்மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக அதிகாரிகள் உள்ளிட்ட 66 காவல்துறையினர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை இன்று (ஏப்ரல் 26) விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டது.