பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட விவகாரத்தில், உள்துறை செயலாளர், கோவை எஸ்.பி மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் புகார் தந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதாகக் கோவை எஸ்.பி பாண்டியராஜன்மீது புகார் அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார் வழக்கறிஞர் சூரியபிரகாஷ். பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய கோவை எஸ்.பி. பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கல்லூரி பெயரை வெளியிட்டதாகவும், பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் இடம்பெற்றதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிடுவது இந்திய தண்டனை சட்டத்தின்படி குற்றம் என்றும், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், புகாருக்கு ஆளாகி இருக்கும் இருவரும் உயர் அதிகாரிகள் என்பதால் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்ய மாட்டார்கள் என்றும், எனவே இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் சூரியபிரகாஷ் அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனு வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக இருப்பதாகக் கூறப்படுகிறது.