பொள்ளாச்சி பாலியல் கொடுமையில் புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட கோவை எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, கோவை மாவட்ட எஸ்பியாக சுஜித்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி ஒரு கும்பல் மிரட்டிவந்தது தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் வெளியிட்டார்.

அதேபோல, இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாகத் தமிழகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. எஸ்.பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டங்களும், வழக்குகளும் தொடரப்பட்டன. இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்கத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டது, இந்திய தண்டனைச் சட்டத்தின்படி குற்றம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, கோவை மாவட்ட எஸ்.பிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிரான புகாரில் கோவை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி வருவதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட கோவை எஸ்.பி பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். கோவை மாவட்ட புதிய எஸ்.பியாக சுஜித்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி டி.எஸ்.பி ஜெயராம் மற்றும் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் நடேசனும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய டிஎஸ்பியாக சிவக்குமார், ஆய்வாளராக வெங்கடராமன் நியமனம் செய்து இன்று (ஏப்ரல் 1) உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.