லண்டனில் கடந்த புதன்கிழமை பேருந்து பயணம் மேற்கொண்ட தன்பால் ஈர்ப்பாளர்கள் இருவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி வன்கொடுமை செய்துள்ளனர்.

லண்டனைச் சேர்ந்த தன்பால் ஈர்பாளர்களான கிரிஷ் மற்றும் மெலனியாவும்  வெளியே சென்றுவிட்டு இரவு பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அன்றிரவு இவர்கள் இருவரையும் நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்ட மெலனியா, “நானும், என் தோழி கிரிஷும் தனிமையில் இருந்ததால் முத்தமிட்டுக் கொண்டோம். அப்போது பேருந்தில் இருந்த நான்கு இளைஞர்கள் எங்களை முத்தமிடச் சொல்லி வற்புறுத்தினர். நாங்கள் மறுத்தோம். அவர்கள் உடனே எங்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டினார்கள்.  பின்னர் என்னைச் சரமாரியாக தாக்க தொடங்கிவிட்டனர். அது மட்டுமில்லாமல் எங்கள் மேல் சில்லரையைச் சிதறினர். இவற்றை தாங்காத என் தோழி அவர்களிடம் சண்டையிட்டாள். அவளையும் தாக்கினர். அங்கு நாங்கள் மிக மோசமாக நடத்தப்பட்டோம்” என பதிவிட்டார்.

அவரின் பதிவைக் காண https://www.facebook.com/melaniapeese/posts/2310276979289157.

மேலும் இதுபற்றி போலீஸார் கூறுகையில்,  “இச்சம்பவம் கடந்த மே 30ம் தேதி நள்ளிரவு 2.30 மணி அளவில் நடந்துள்ளது. மெலனியா புகார் அளித்ததன் அடிப்படையில் அந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   சிசிடிவி கேமிரா மூலம் இந்தக் கும்பலில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் நான்கு பேரும் 15-18 வயதே  ஆனவர்களாவர். அவர்களிடம் இருந்த செல்போன் பேக் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறுகையில், “பெண்களுக்கும் நடந்த இச்சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.  இது வேதனை தரும் தாக்குதல். யாராக இருந்தாலும்  தாங்கள் யார் என்பதையும், யாரை நேசிக்கிறார்கள் என்பதையும் மறைக்க வேண்டியதில்லை. தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு எதிரான இதுபோன்ற  வன்முறைகளை முடிவிற்குக் கொண்டுவர நாம் பாடுபட வேண்டும்” எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.