காஷ்மீரின் இரண்டு முன்னணி பத்திரிக்கைகளுக்கு அரசு விளம்பரம் வழங்கபடாது என ஜம்மு-கஷ்மீர் அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில் அதற்குத் தகுந்த பதிலளிக்க வேண்டும் என இந்திய பத்திரிக்கையாளர் சபை(Press Council Of India) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த பிப்,16 ஆம் தேதி முதல் ஜம்மு-கஷ்மீர் அரசாங்கம் கிரேடர் காஷ்மீர்(Greater Kashmir) மற்றும் காஷ்மீர் ரீடர்ஸ்(Kashmir Readers) ஆகிய இரண்டு பத்திரிக்கைகளுக்கும் அரசு விளம்பரங்களை வழங்க மாட்டோம் என ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் விளம்பரம் இடைநீக்கம் குறித்து அரசு எந்தப் பதிலும் தெரிவிக்காததால் கடந்த பிப்,22ந் தேதி காஷ்மீர் பத்திரிக்கையாளர் சங்கமானது, “மாநில நிர்வாகம் ஊடகத்தை வேண்டுமென்றே திசை திருப்பி அவற்றை அழிக்க முற்படுவது மட்டுமல்லாமல் ஊடக சுதந்திரத்தை கீழறுக்க முயற்சித்து வருகின்றது” என தெரிவித்தது.

இதனையடுத்து கடந்த மார்ச்,10 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் முக்கிய ஆங்கிலம் மற்றும் உருது பத்திரிக்கைகள் அரசாங்கத்து எதிராக எதிர்ப்புத் தெரிவித்து வெற்று முன் பக்கங்களுடன் வெளியானது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் விளம்பர இடைநீக்கம் குறித்து தகுந்த பதிலளிக்க வேண்டும் என இந்திய பத்திரிக்கையாளர் சபை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 2018 முதல் ஜம்மு-காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.