ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணிகளுக்கான குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கடந்த 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதைதொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது வேதாந்தா நிறுவனம்.

ஏற்கனவே நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் சத்திய நாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 23) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணிகளுக்காகத் தங்களது உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையைக் கண்கானிக்க ஏற்கனவே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.