2017-18ல் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.1 ஆக உயர்ந்துள்ளது என அதிர்ச்சியூட்டும் தகவலை கடந்த ஜனவரி மாதம் தேசிய புள்ளியியல் ஆய்வு அலுவலகம்(NSSO) மாதிரி கால நிலை தொழிலாளர் ஆய்வறிக்கை (PLFS) ஒன்றை வெளியிட்டிருந்தது.

 

1972-73 வேலையின்மை மிக அதிகமாக இருந்த காலக்கட்டம் என்று கூட சொல்லலாம் . ஆனால் தற்போது அதனை முறியடிக்கும் நோக்கத்தில்  இந்த அரசாங்கம் முழுமுயற்சியுடன் போராடி கொண்டிருக்கிறது என்று சொன்னால் தவறேதும் இல்லை. நவம்பர் 2016 ல் மோடி அரசால் பணமதிப்பிழப்பு( பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது )  என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நடவடிக்கையை அடுத்து, அரசாங்க நிறுவனத்தால் முதல் ஆய்வறிக்கை வெளியிடப்பட உள்ளது.

 

கிராமப்புறங்களை (5.3%) காட்டிலும் நகர்ப்புறங்களில் (7.8%) வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இளைய பட்டதாரிகள் இடையே வேலைவாய்ப்பின்மை என்பது 2016-17 ஆம் ஆண்டுகளை விட 2017-18 ல் அதிகமாக உள்ளது . கிராமப்புற பெண் பட்டதாரிகளிடையே 17.3% மாகவும் ஆண் பட்டதாரியிடையே 10.5% வேலைவாய்ப்பின்மை உள்ளது.  இளைய தலைமுறையினர் விவசாயத்தை விட்டு விலகி, நகர வாழ்க்கையை நோக்கி படையெடுக்கின்றனர்.  இது நகர்ப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பின்மையின் சதவீதத்தை அதிகரிக்கிறது என்றே சொல்லலாம். மோடி ஆட்சிக்கு வரும்முன் தனது தேர்தல் அறிக்கையில் , ” நான் பிரதமராக பதவியேற்றவுடன் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேர்க் வேலைவாய்ப்பு வழங்கப்படும்,” என்று உறுதிமொழி அளித்தார் . அதன்படி பார்த்தால் இந்த 5 ஆண்டுகளில் 10 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றிருக்க வேண்டும் . ஆனால் வேலைவாய்ப்பின்மை நாடுகளில் இந்தியா முன்னேறி கொண்டே செல்கின்றது எனலாம். இதுதான் மேக் இன் இந்தியா போலும்.

 

கடந்த மாதம் 63,000 ரயில்வே பணி காலியிடங்களுக்கு   19 மில்லியன் பேர் விண்ணப்பித்திருந்தனர். தற்போது தமிழகத்தில் தலைமை செயலகத்தில் 14 துப்புரவு பணியாளர் பணியிடத்துக்கு பி.காம் , பி.எஸ்சி , எம்.காம் , எம்.டெக் ,பி.டெக் , எம்பில் , என்ஜினீயர் என பெரும்பாலும்  பட்டதாரிகளே  விண்ணப்பித்துள்ளனர் என்பது கவலைக்கிடமான விடயமாக உள்ளது.

 

சாதி அமைப்பு, மெதுவான பொருளாதார வளர்ச்சி , மக்கள் தொகை அதிகரிப்பு , விவசாயத்தை பருவகால தொழிலாக கொள்ளுதல் , குடிசை மற்றும் சிறுதொழில் வீழ்ச்சி , குறைந்த சேமிப்பு மற்றும் முதலீடு , திட்டமிடுதலில் உள்ள குறைப்பது , போதுமான பாசன வசதிகள் இல்லாமை போன்றவை வேலைவாய்ப்பின்மையின் சில காரணங்களாக உள்ளன.