இயக்குநர் மகேந்திரன் மறைந்ததை தொடர்ந்து பல்வேறு திரைக்கலைஞர்கள் அவர் குறித்து எழுதியதிலிருந்து சேகரிக்கப்பட்ட தொகுப்பு இது.

வைரமுத்து:

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது. செயற்கை நாடகத்தன்மை கொண்ட தமிழ்த் திரைப்படங்களைச் செவ்வியல் தன்மைக்கு உயர்த்திக் காட்டிய இயக்குநர்களில் உன்னதமானவர் மகேந்திரன். தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் கொடுத்தவர். நாவல்களைத் திரைப்படமாக்கிப் படைப்பிலக்கியத்திற்குப் பக்கத்தில் திரைப்படத்தைக் கொண்டுவந்தவர்.

பி.சி. ஸ்ரீராம்:

மகேந்திரன்… அவர் குறைவாகப் பேசினார். அவரது படங்கள் அதிகமாகப் பேசின. எனக்கு அவரது படங்கள்தான் மிகப்பெரிய உந்துசக்தி. ‘உதிரிப்பூக்கள்’ பார்த்தபிறகு பல இரவுகள் தூக்கமின்றி இருந்ததை என்னால் மறக்க முடியாது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

சுஹாசினி:

எனது வழிகாட்டி இயக்குநர் மகேந்திரன் சார் ஆன்மா சாந்தியடையட்டும். எழுத்திலும் சிந்தனையிலும் நீங்கள் முன்னோடியாக இருந்தீர்கள். நாங்கள் அனைவரும் உங்கள் மாணவர்கள். நிஜ சினிமாவுக்கு வழிகாட்டிய உங்களுக்கு நன்றி.

பார்த்திபன்:

முள்ளும் மலரும் மரணம்?. இன்னும் நூறு வருடமாவது வாழும் மகேந்’திறன்’!!! பலரின் மரணம் வருத்தமளிக்கும். சாகுறவரைக்கும் சாதிக்கலையேன்னு…ஆனால் மகேந்திரன் சாரின் புகழ் இன்னும் நூறு வருடங்கழித்தும் சாகாது!

சேரன்:

‘முள்ளும் மலரும்’ என்று சொன்ன நீங்கள் மீண்டும் மலரவேண்டும். ‘உதிரிப்பூக்கள்’ எடுத்த நீங்கள் எங்கள் இதயத்தில் என்றும் உதிராப்பூக்கள். உங்கள் படைப்புகளோடு என்றும் எங்களோடு வாழ்வீர்கள்… நீங்கள் இல்லையென்ற செய்தி வந்தபோது உங்கள் படைப்புகளின் ஆயிரம் காட்சிகள் கோர்வையாக வந்துபோகின்றன.

வசந்தபாலன்:

சமரசமில்லாத கலைஞன் இயக்குநர் மகேந்திரன். தன் படைப்புகள் மட்டும் பேசப்பட்டால் போதும் என்று ஆர்ப்பாட்டமில்லாமல் சுயபெருமை பேசாமல், அவர் படங்களில் காணக்கிடைக்கும் அமைதியைப் போல வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். அவரிடம் இருக்கும் நிதானம், அர்த்தமிக்க அமைதி, முதிர்ச்சி அவரது படங்களில் பிரதிபலிக்கும். அவர் இழுத்துச் சென்ற தேர் அதே இடத்தில் அதன் தரிசனம் குறையாமல் ஒளிவீசிய வண்ணம் இருக்கிறது.

சிம்புதேவன்:

வயதில் சிறியவர்களைக்கூட மிஸ்டர் எனக் கூறி அழைக்கும் மிக அன்பிற்குரிய, பண்பிற்குரிய மாபெரும் இயக்குநர் எங்கள் மகேந்திரன் சார். இறுதிவரை எல்லோரையும் உற்சாகப்படுத்தினீர்கள். தங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம் மிஸ்டர் மகேந்திரன் சார்.

சசிகுமார்:

தமிழ் சினிமாவை உலக சினிமாவாக வளர்த்தெடுத்த ஆளுமை மகேந்திரன் ஐயா மறைந்தாலும் தன் கலைப் படைப்புகள் வழி நம்மோடு கலந்திருக்கிறார்.

பா .ரஞ்சித்:

இயக்குநர் மகேந்திரன், எளிமைதான் உங்கள் இலக்கு. திரைவிமர்சனம் எழுதியது மட்டும் இல்லாமல் எது கலைத்தன்மையோடு வெகு சன மக்களை கவர்ந்திழுக்கும் சினிமா என்று ‘உதிரிப்பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’ போன்ற படங்களை எடுத்து காட்டிய அதிசயம் நீங்கள். ஐயா உம் படைப்புகள் எப்போதும் வாழும்.

மாரி செல்வராஜ்:

நீங்கள் எப்போதும் போல உங்கள் முட்களின் வழியாகவோ, உங்கள் மலர்களின் வழியாகவோ அல்லது உங்கள் காளி ஆங்காரத்தோடு ஓலமிட்டு ஆடுவானே… அந்தக் கொல்லிமலை வழியாகக்கூட ஊர்ந்துபோங்கள் மகேந்திரன் சார்