பத்தி: அங்கே என்ன சத்தம் (2)

பொதுவாக நாம் மலையாளப் படங்களின் புதுமையான எதார்த்தமான கதைகளை வியப்பது வழமை. அதற்கு ஏற்றாற் போல தமிழில் கற்பனையே பண்ண முடியாத வித்தியாசமான எண்ணற்ற படங்களை மலையாளத்தில் ரொம்ப குறைவான பட்ஜட்டில் எடுத்திருக்கிறார்கள். பாசில், பரதன் போன்றவர்கள் மலையாளக்கரை தாண்டி இங்கே வந்து வெற்றிப்படங்களை (அல்லது நல்ல படங்களைத்) தந்திருக்கிறார்கள். ஆனால் மலையாள மண்ணில் தமிழ் சினிமாவுக்கே உரித்தான குடும்ப செண்டிமெண்டுகளுடன் கடந்த முப்பது வருடங்களாக ஒருவர் படமெடுத்து வருகிறார் – சத்யன் அந்திக்காடு.

மலையாளப் படங்களைப் பார்க்க விரும்பும் தமிழ் நண்பர்கள் / தோழிகளுக்கு நான் உடனடியாய் பரிந்துரைப்பது சத்யன் அந்திக்காடின் படங்களையே. ஏனென்றால் நமது விசு அல்லது விக்கிரமன் போன்றவர்கள் தெரியாமல் மலையாளத்துக்கு சென்று சற்று நேர்த்தியாக தெளிவாக படமெடுத்தது போல இருக்கும் அவரது பல படங்கள். குறிப்பாக “மனசினக்கரே”, “வீண்டும் சில வீட்டு காரியங்கள்”, “தலையண மந்திரம்”, “அச்சுவிண்டே அம்மா”, “கத துடருந்நு” போன்ற படங்களை இதைப் படிக்கிற உங்களில் யார் வேண்டுமெனிலும் கண்ணை மூடிக் கொண்டு பார்க்கலாம் என்பேன். அதுவும் “யார்த்திரக்காருடே ஷ்ரெத்தெக்கு” அப்படியே வசந்த் எடுத்தது போல இருக்கும்.

நான் அவர் எடுத்தது தான் எனத் தெரியாமல் சத்யன் அந்திக்காடின் படங்களுக்கு ரசிகனாக இத்தனைக் காலமும் இருந்திருக்கிறேன். அதற்குக் காரணமும் என் தமிழ் உளவியலாக இருக்கலாம்.  அதிலும் “வீண்டும் சில வீட்டு காரியங்கள்” நான் பலமுறை மனம் கசிய பார்த்த படம்: ஒரு வசதியான கிறித்துவக் குடும்பம். இளைய மகனைத் தவிர பிற பிள்ளைகள் படிப்பு, வேலை என செட்டில் ஆகி விடுகிறார்கள். இளையமகன் தான் அப்பாவுக்கு ரொம்ப பிரியம். அதனாலே செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்து விடுகிறார். அவனுக்கு நாடகம், இசை போன்றவற்றில் ஆர்வம் அதிகம். தான் ஒரு பெரிய நடிகன், நாடகாசிரியன் என வீண் ஜம்பம் அவனுக்கு. ஆனால் நாடகத்தின் அரிச்சுவடி தெரியாது. அப்பாவுக்கும் நாடகத்தில் அனுபவமும் ஆர்வமும் உண்டு என்பதால் இரண்டு பேரும் பிறருக்குத் தெரியாமல் நாடகம், கலை என கூத்தடிக்கிறார்கள். ஒருநாள் தன் மகன் எல்லை மீறிப் போகிறான், பொறுப்பில்லாமல் வீணாகிறான் எனத் தோன்றும் அப்பா அவனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அடுத்து என்னவாகிறது என்பது தான் மிச்சக் கதை.

அப்பாவாக திலகனும் மகனாக ஜெயராமும் அபாரமாக நடித்திருப்பார்கள். லோகித தாஸின் கச்சிதமான திரைக்கதை. இந்த படத்தின் கதை அப்படியே “படிக்காத மேதை” படத்தைக் தழுவியது என்பது இந்நேரம் உங்களில் சிவாஜி ரசிகர்களுக்கு நிச்சயமாய் புரிந்திருக்கும். ஆனால் “படிக்காத மேதை” ஒன்றும் புதிய கதை அல்லவே. அது “ஜோக் பியாக்” எனும் வங்கப்படத்தை தழுவியது. அந்த படத்தையும் கூட ஒரு நாவலைத் தழுவி எடுத்திருந்தாலும் அதுவும் ஒன்றும் ஒரிஜினல் அல்ல. தழுவித் தழுவி நம் ஆட்கள் பதினாறாம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரசித்த நாடகமான “கிங் லியர்” வரை போய் விட்டார்கள். “கிங் லியரில்” கதையில் ஒரு வயதான மன்னர் தனது நாட்டை மூன்று மகள்களில் யார் தன்னிடம் அதிகம் பாசம் காட்டுகிறார்களோ அவர்களுக்கே பங்கிட்டு அளிப்பேன் என அறிவிக்கிறார். பாசாங்கு காட்டி இரண்டு பெண்கள் நாட்டைப் பறித்துக் கொண்டு அப்பாவை பின்னர் துரத்தி விடுகிறார்கள். நாணயமாக இருந்த ஒரு மகளுக்கு உரிய பங்களிக்காமல் அப்பா ஆரம்பத்தில் துரத்தி விடுகிறார். இப்போது மன்னர் நாட்டையும் அதிகாரத்தையும் இழந்து கண்ணில்லாத பிச்சைக்காரராகத் திரியும் போது அவருக்கு ஆதரவளித்து பாதுகாப்பது அந்த மூன்றாவது மகள் தான். அந்த கதையை சுதந்திரத்துக்குப் பிறகான ஒழுக்கம் சீரழிந்த பாசம் மறந்த இந்திய சமூகத்தில் வைத்தால் “படிக்காத மேதை” தோன்றுகிறது. அதே கதையை கேரளாவுக்கு கொண்டு வந்து அப்பா மகனைத் திருத்துவதற்காக வீட்டை விட்டு துரத்துவதாக மாற்றினால் “வீண்டும் சில வீட்டு காரியங்கள்” வந்து விடுகிறது.

இதே “வீண்டும் சில வீட்டு காரியங்கள்” கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து அப்பாவுக்குப் பதிலாக அம்மாவை மாற்றி மகனுக்கும் வளர்ப்பு மகனுக்கும் இடையிலான பாசப்போராட்டம் ஆக்கினால் “மனசினக்கரே” வந்து விடுகிறது (இந்த கதையையும் இன்னும் கொஞ்சம் தழுவி தமிழுக்கே திரும்ப கொண்டு வந்தார்கள் என்பது வேறு கதை – ரஞ்சித் நடித்த “பசுபதி மே / பா ராக்காபாளையம்”).

ஆனால் இந்த படங்களில் சொல்லாமல் சுட்ட பாவத்துக்குப் பரிகாரம் என்பது போல சத்தியன் அந்திக்காடு ஒரே ஒரு படத்துக்கு மட்டும் ஒழுங்காக அனுமதி பெற்று தழுவி எடுத்தார்.  “சம்சாரம் அது மின்சாரம்” படத்தை மலையாளத்தில் “குடும்ப புராணம்” என மறுஆக்கம் செய்தார்.

சத்யன் அந்திக்காடு குடும்ப செண்டிமெண்ட் படங்கள் மட்டுமல் அல்லாமல்  “நாடோடிக் காற்று”, “பட்டணப் பிரவேசம்”, “சந்தேஷம்”, “காந்தி நகர் செகண்ட் ஸ்டிரீட்” போன்ற நகைச்சுவை, பகடி படங்களும் எடுத்து பெரும் வெற்றி பெற்றார். மோகன்லால், ஶ்ரீனிவாசன் இருவரின் நடிப்பு வாழ்வில் மறக்க முடியாத முத்திரைப் படங்களாக இவை அமைந்தன. “அர்த்தம்” எனும் வித்தியாசமான இருத்தலிய சாயல் கொண்ட சற்றே பரிட்சார்த்தமான படத்தையும் எடுத்தார்; அது வெற்றியும் பெற்றது. மற்றொரு பக்கம் “பின்காமி”, “களிக்களம்” போன்ற ஆக்‌ஷன், போலீஸ்-திருடன் பாணி படங்களை எடுத்து கையையும் சுட்டுக் கொண்டார். இந்த மாற்றுக்கதைகளை விடுத்தால் சதய்ன் அந்திக்காடின் கிட்டத்தட்ட எல்லா படங்களுக்கு ஒரு பொதுவான சரடு உண்டு – அது ஒரு கதாபாத்திரம். வாழ்க்கையில் தொடர்ந்து தோற்றுப் போகும் ஆனால் அதை ஏற்றுக் கொள்ள விரும்பாத போலி அபிமானம் மிக்க ஒரு மத்திய வர்க்க ஆண். அவனது அதிரடி சேட்டைகளை, குழப்படிகளை நகைச்சுவை கதைப்பின்னணியில் வைத்தால் “நாடோடிக் காற்று”, “பட்டணப் பிரவேசம்” ஆகி விடும். சமூகக் களத்தில் வைத்தால் “சந்தேஷம்” வந்து விடுகிறது. போலி கௌரவம் காரணமாய் சொந்த ஊரில் வேலை செய்ய முடியாமல் கூர்க்காவாக மாறுவேடம் போட்டு வேறு ஊருக்கு வேறு மாநிலத்துக்கோ சென்று புதிய வேலைகள் செய்கிறவனின் கதையாக்கினால் “நாடோடிக் காற்று”, “காந்தி நகர் செகண்ட் ஸ்டிரீட்” போன்ற படங்கள் தோன்றுகின்றன. இதே பாத்திரத்தை குடும்பக் களம், அரசியல் களம் என மாற்றி வைத்து பல சுவையான படங்களை சத்யன் அந்திக்காடு எடுத்தார். (இந்த வெட்டி வீராப்பு நாயகன் தான் தமிழில் வடிவேலுவின் வடிவில் எதேச்சையாக ஒரு அட்டாகாசமான நகைச்சுவை சாதனையாளனாக மாறியதோ எனத் தோன்றுகிறது.)  ஒரே பாத்திரம், வெவ்வேறு சூழல்கள் என வித்தியாசமான கதைகளை அவர் உண்டு பண்ணி வெற்றிப்படமாக்குவது ஒரு தனிசாதனை எனத் தோன்றுகிறது. வேறு எந்த இயக்குநரையும் இவ்விசயத்தில் சத்தியன் அந்திக்காடுடன் ஒப்பிட இயலாது (தமிழில் பாக்கியராஜ் மற்றும் அவரது சீடர்களைத் தவிர)

முந்தைய தொடர்கள்:

1.யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன்https://bit.ly/33AmePx

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. திரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்
  2. கிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும்? - மணிரத்னத்திலிருந்து மிஷ்கின் வரை - ஆர். அபிலாஷ்
  3. ’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை - ஆர். அபிலாஷ் (பெங்களூர்)
  4. கொரோனோ பயங்கரமும் பா.ஜ.க அரசின் கார்பரேட் பயங்கரவாதமும் - ஆர். அபிலாஷ் 
  5. முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது?- ஆர். அபிலாஷ்
  6. காட்ஃபாதர் முதல் முள்ளும் மலரும் வரை: கதைக்குள் இருக்கும் கதை- ஆர். அபிலாஷ்
  7. சினிமாவில் போதனை இருக்கலாமா?- ஆர். அபிலாஷ்
  8. பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல் - ஆர். அபிலாஷ்
  9. ‘அலைபாயுதே’ - திரைக்கதை நுணுக்கங்கள் - ஆர். அபிலாஷ்
  10. தனிமையின் காதலே நட்பு- ஆர். அபிலாஷ்
  11. ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?- ஆர். அபிலாஷ்
  12. பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- ஆர். அபிலாஷ்
  13. அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்- ஆர். அபிலாஷ்
  14. காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- ஆர். அபிலாஷ்
  15. எனது நண்பன் எனது நண்பன் அல்ல- ஆர். அபிலாஷ்
  16. ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?- ஆர். அபிலாஷ்
  17. நிழல் நிஜமாகிறது - ஆர்.அபிலாஷ்
  18. யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன் - ஆர்.அபிலாஷ்