கதை ஏபி கொட்டாரக்கரா, வசனம் ஆரூர் தாஸ், இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாடல்கள் கண்ணதாசன், ஒளிப்பதிவு விட்டல்ராவ்  இயக்கம் ஏ.பீம்சிங்

1961 ஆம் ஆண்டு வெளியான பாசமலர் தமிழின் சிறந்த குடும்பப் பாசத் திரைப்படங்களில் ஒன்றெனத் திகழ்வதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். நடிகர் திலகம் என விளிக்கப்பட்ட சிவாஜிக்கு நடிகையர் திலகம் எனப் போற்றப்பட்ட சாவித்ரி தங்கை. பெற்றோரை இழந்த பின் தானே தன் தங்கைக்கு சகலமுமாகிறான் ராஜூ. தங்கை ராதாவின் முகம் பார்த்தே வாழ்பவன் ராஜூ. வேலை பார்க்கும் ஆலை முடங்கிப் போகையில் தான் சிறுவயதிலிருந்து சேமித்த ஆயிரம் ரூபாயை (இன்றது பல லட்சம்) அண்ணனிடம் தந்து தனக்கு நன்றாய்த் தெரிந்த பொம்மை செய்தலையே தொழிலாகச் செய்யுமாறு அறிவுறுத்துகிறாள். குறுகிய காலம் கடின உழைப்பில் ராஜூ பெரும் பணத்தை ஈட்டுகிறான். தனக்கு முந்தைய ஆலையில் வேலை வாங்கிக் கொடுத்த நண்பன் ஆனந்தைத் தற்செயலாகச் சந்திக்கிறான். அவனுக்குத் தன் தொழிலில் வேலையும் அளிக்கிறான்.

தன் தங்கையும் ஆனந்தனும் விரும்புவதை அறிந்த ராஜூ முதலில் கடுமையாக நடக்கிறான். தங்கையின் ஆழக்காதல் அறிந்த பிற்பாடு ஆனந்தனையே அவளுக்கு இணையராக்கி மகிழ்கிறான். ராஜூவுக்கும் டாக்டர் மாலதிக்கும் மணமாகிறது. ஆனந்தனின் குடும்பத்தோடு அனைவரும் ராஜூவின் மாளிகையிலேயே வாழ்வைத் தொடங்குகின்றனர். குடும்பம் எனும் ஒரு சொல்லுக்குள் அமைதியும் ஆர்ப்பரிப்பும் தனியே இடம்பெறுவதில்லை. மாறாக குடும்பத்தாரின் குண நன்மைகளைப் பொறுத்து அவை இரண்டும் முடிவாகின்றன.

ஆனந்தன் தன் அத்தையின் பேச்சை புறந்தள்ள முடியாதவனாகிறான். அத்தையின் சூதும் சுயநலனும் குடும்பத்தைத் துண்டாடுகிறது. குடும்பம் உடைந்து பிரிகிறது. எத்தனையோ முயன்றும் தங்கை குடும்பத்தோடு இணையமுடியாத ஏக்கம் அண்ணனும் தங்கையும் பிரிவெனும் புயலைத் தாளவொண்ணாமல் பரிதவிக்கின்றனர். குடும்பத்தைவிட்டு வெகுதூரம் சென்று பலகாலம் கழித்துத் திரும்பும் ராஜூவால் தன் தங்கையை சந்திக்கக்கூட முடியாமற் போகிறது. துவண்டு திரும்புகிறவன் பட்டாசுவெடித்தலினின்றும் ஒரு குழந்தையைக் காப்பாற்றப் போய் அவனது கண்பார்வை பறிபோகிறது. மருத்துவமனைக்கு வரும் ராதா சொல்லித்தான் ராஜூவால் காப்பாற்றப்பட்டது ராதாவின் குழந்தை என்பது தெரியவருகிறது. ராஜூ இறக்கிறான். ராதாவும் அண்ணன் மீதே சரிந்து விழுந்து இறக்கிறாள். பாசமலர்கள் என்றென்றும் வாடுவதில்லை என்பதைப் பறைசாற்றியபடி படம் நிறைகிறது.

நாடகத் தன்மை மிகுந்தொளிர்ந்த சினிமாவின் தொடக்கக்காலத்தின் ஆகக் கடைசி பருவத்தின் பெருவெற்றி சினிமா என நம்மால் பாசமலரை சுட்ட முடிகிறது. அதற்குப் பல காரணங்கள். மையக்கதையாடலின் பலத்தைவிடக் கொஞ்சமும் குறைவற்ற உபகதையாடல்கள் இந்தப் படத்தின் பெரியதோர் பலமாகவே திகழ்ந்தன. தொழிலாளியாக ஜெமினியும் முதலாளியாக சிவாஜியும் வார்த்தை மோதலில் ஈடுபடுகிற நெடிய காட்சி முதல் உதாரணம். சிவாஜி இன்ஸ்பெக்டரை அழைத்துப் பேசும்போது குழப்பம் என்பதைத் தன் முகத்தில் மட்டுமல்லாது தொனியிலும் நிகழ்த்தி இருப்பார். விருந்தொன்றில் சிவாஜியும் எம்.என்.நம்பியார் மற்றும் எம்.என்.ராஜம் இருவரும் சந்திக்கும்போது சிவாஜி மற்றும் ராஜம் ஆகியோரது உடல்மொழியும் முகபாவங்களும் பேசாமல் பேசிக்கொள்ளும் அன்றைய காலத்துக் காதல் ஆதார கணத்துப் பரிமாற்றத்தின் ஏக்கம் தவிப்பு இன்னபிறவற்றை எல்லாம் அழகுற எடுத்தியம்பிற்று. ஒரு சிட்டிகை கூடுதலானாலும் மிகை நடிப்பு என்று தள்ளப்பட்டிருக்கும். அதனதன் இடத்தில் அவ்வந்தச் சொற்களை நிறுத்தி உணர்வுகளைப் பெருக்கி அற்புதமான நடிப்பை நல்கினார் சிவாஜி.
சாவித்ரி சென்று நம்பியாரிடம் நின்றுபோன சிவாஜி ராஜம் இருவரின் திருமணத்தை நடத்துவதற்காகக் கேட்கும் போது நம்பியாரின் நடிப்பு அந்த ஒரு காட்சி வாழ்காலத்துக்குப் போதுமான ஒளிர்தலை நிகழ்த்திற்று என்பது என் அபிப்ராயம். ஒரு கட்டத்தில் மெல்லக் கனியும் நம்பியாரின் முகம் அடுத்த கணம் லேசாய்ச் சிரிப்பார். அந்த அளவு அந்தச் சிரிப்பிற்கான வழங்கல் மாபெரிய நுட்பமான குணவாளத்தைப் பறைசாற்றும். முன்பின் காணவியலா அற்புதமாக்கிற்று.

இந்தக் கதை என்பது இம்மாதிரியான கதைகளின் கூட்டுப்பிரதி. இவற்றுக்கு ஒருமித்த புள்ளியிலான ஒற்றை முடிவு என்பது யூகத்திற்கு அப்பாறபட்டது. அப்படியான கதையை சோகத்திலாழ்த்தி முடித்தது ரசிகர்களின் மனங்களில் அண்ணன் தங்கை எனும் உறவுக்கு என்றைக்குமான போற்றிச்சித்திரமாக வணக்கத்திற்குரிய கதாபாத்திரங்களாக நடிகர்களாக ஏன் ஞாபகங்களாகவும் பாசமலர் சிவாஜி சாவித்ரி ஆகிய பதங்களை மாற்றிற்று. வாழ்க்கைக்குள் சினிமாவை அழைத்தலின் ஒரு பங்காகவே இன்னமும் கல்யாணம் அண்ணன் தங்கைப்பாசம் போன்ற பலவற்றிற்கும் பாசமலரின் கதைமாந்தர்களும் அவர்களிடை உணர்வுப்பெருக்கமான பாசம் ஆகியவை சுட்டப்படுகிறது.

பாசமலரின் பாடல்கள் தனித்த அடையாளம் கொண்டு பெருகுபவை. முழுமையான ஆல்பம் என்று பாசமலரின் பாடல் பேழையைச் சொல்ல முடியும். வாழ்வின் பல அணுக்கத் தருணங்களை ஒட்டிய சொற்களை இசையை அவற்றுக்கான இடம்பெறலை மன ஓட்டங்களை எல்லாம் எடுத்துவைக்கும் இசைவழி சாட்சியங்களாகவே பாடல்கள் விளங்கின. எதைச் சொல்லி எதைவிட்டாலும் அது குற்றம் மொத்தமாகவே பாடல்கள் அனைத்தும் தங்கம்.

பாசமலர் பீம்சிங் செய்து காட்டிய மேஜிக். அது வித்தகமா திறமையா திறனா கலையா என்றெல்லாம் பகுத்துப் பார்ப்பதைவிடவும் பாசமலர் படத்தின் ஒரேயொரு வருகையைக் கொண்டாடுவதே ரசிகன் செய்தாக வேண்டிய ரசனை ஆகமம். வாடாபாச மலர்மல்லி.