மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், பூங்குழலி கதாப்பாத்திரத்தில் முதல்முறையாக நயன்தாரா நடிக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்க பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

தற்போது மணிரத்னம் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களையும் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களையும் வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப் போகிறார் மணிரத்னம். இதற்கான முன்தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியானது. அதன்படி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், பூங்குழலி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ கதையைப் பொறுத்தவரை, இந்த பூங்குழலி கதாபாத்திரம் மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.