பொதுவாக நீதிமன்றங்களில் வழக்காடும்போதும் எழுத்துப்பூர்வ பரிமாற்றங்களின்போதும் நீதிபதிகளை ‘மை லார்ட்’ என்றும் ‘யுவர் லார்ட்ஷிப்’ என்றும் அழைப்பதே வழக்கம். ஆங்கிலேயர் ஆட்சியின் மிச்சமாக இங்கு தொக்கி நிற்கும் காலனியாதிக்க எச்சங்களில் இதுவும் ஒன்று. நாட்டிலேயே முதன்முறையாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் காலனியாதிக்க வார்த்தைகளான  ‘மை லார்ட் (My Lord)’ மற்றும் ‘யுவர் லார்ட்சிப் (Your Lordship)’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் ‘Sir’ அல்லது ‘ஸ்ரீமான் ஜீ’ போன்ற வார்த்தைகளையே பயன்படுத்தலாம் என்று வழக்கறிஞர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ஞாயிறு அன்று நடைபெற்ற நீதிமன்றத்தின் கூட்டத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதன் கீழுள்ள ஜோத்பூர் மற்றும் ஜெய்பூர் நீதிமன்ற நீதிபதிகளிடம் இதனை அறிவித்துள்ளது. அரசியல் சாசனம் வழங்கும் சமத்துவத்தைக் கடைபிடிக்கும் நோக்கில் இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதாக நீதிமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இனி வழக்காடும் போதும் எழுத்துப்பூர்வ பரிமாற்றங்களிலும் யாரும் நீதிபதிகளை ‘மை லார்ட்’ என்றெல்லாம் அழைக்கத் தேவையில்லை ‘சார்’ அல்லது ‘ஸ்ரீமான் ஜீ’ என்று அழைப்பதே போதுமானது.

இந்திய நீதிமன்றங்களிலேயே இதுபோன்று நடப்பது இதுவே முதன்முறையாகும். 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே இந்திய பார் கவுன்சில் இதுபற்றிய தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தாலும், நீதிமன்றம் ஒன்று இதனை செயலாக்குவது இதுவே முதன்முறையாகும்.

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ரஞீத் ஜோஷி இந்த அறிவிப்பினை மிகவும் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.