இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக, ‘எமிசாட்’ என்ற நவீன செயற்கைக்கோளை, இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் இன்று(ஏப்ரல் 1) காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து அனுப்பப்பட்டது

‘எமிசாட்’ செயற்கைக்கோளுடன், அமெரிக்கா தயாரித்த 24 செயற்கைக்கோள்கள், ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோள், லுத்துவேனியா நாட்டின் 2 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 29 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி – சி 45 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது

உலகிலேயே முதன்முறையாக 3 வெவ்வேறு புவி வட்டப்பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 436 கிலோ எடை கொண்ட எமிசாட் செயற்கைக்கோள், புவியில் இருந்து 749 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்படுகிறது. மீதமுள்ள 28 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 220 கிலோ ஆகும். இவை 504 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளன.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ மூலம் முதல்முறையாக ஒரே ராக்கெட்டில் 3 செயற்கைக்கோள்கள் வெவ்வேறு புவி சுற்றுவட்டப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 71-வது ராக்கெட் இதுவாகும். பி.எஸ்.எல்.வி.-க்யூஎல் வகையில் விண்ணில் பாயும் முதல் ராக்கெட் இதுவாகும். இந்த செயற்கைக்கோள் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள், நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. எமிசாட் செயற்கைக்கோள் மூலம் மின்காந்தஅலைக்கற்றைகளை கண்காணிக்க முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.