அங்கே என்ன சத்தம் – 8

“நட்பை நேசிக்க நீங்கள் உங்கள் நண்பரை இழந்தபின் இரங்கலின்போது அவரை நினைவில் கொள்ள கற்றுக்கொண்டால் மட்டும் போதாது; எதிர்காலத்தை நேசிக்கவும் செய்ய வேண்டும்.” – தெரிதா

இரங்குதல் என்பது மரணத்தை வெல்வது, அது ஒருபோது மரணத்துக்காக காத்திருப்பது அல்ல என தனது ‘நட்பின் அரசியல்’ நூலில் தெரிதா எழுதுகிறார். அதாவது மரணம் நிகழ்ந்த பின்னர்தான் இரங்க தொடங்குகிறோம்; அழுகிறோம், நினைவுகளை மீட்டுகிறோம், மறைந்தவரைப் பற்றி பேசிப் பேசி மாய்கிறோம். ஆனால் அப்படி இரங்குவதுகூட ஒரு ‘மரணம்’தான் என்கிறார் தெரிதா. நட்பின் சாரமாக அவர் இந்த ‘மரணத்தைக்’ காண்கிறார். இங்கு மரணம் என்பது உடல் மரிப்பது அல்ல; மொழியின் பலிபீடத்தில் ஒரு மனிதன் ‘தன்னை’ அழித்துக் கொண்டே இருப்பது. நட்புறவாடல் என்பது மொழியில் மற்றமையை அறிவது, தன்னை மற்றமையாக ஒரு மாற்றிக்கொள்வது;

அப்படி மாற்றிக் கொள்கையில் ‘தான்’ மரிப்பது. இந்த ‘மரணம்’ ஒருவரது மரணத்துக்குப் பிறகு ஒரு விதத்தில் சுலபம் ஆகிறது. தன்னுடைய இரங்கல் கூட்டத்துக்கு யாரும் வர வேண்டாம் என நகுலன் ஒரு சிறிய கவிதையில் கூறுவது இதனாலே – இரங்கல் கூட்டத்தில் நகுலன் எனும் மற்றமை காணாமல் போய் விடுகிறார்; அவர் நமது ‘நகுலன்’ ஆகிறார்; நகுலன் நகுலனாக இருந்தபோது அவர் மரணிக்காத மற்றமையாக நம்முடன் இருந்தார்;
அவருடைய கதை, கவிதைகளில் மட்டுமே அவர் ‘மரணித்தார்’ – அவரை நாமாக்கிக் கொள்ள, நாம் அவராகிட அனுமதித்தார். ஆனால் அவரது தூல உடல் நீங்கிய பின்னர் அவர் உருவாக்கிய வெற்றிடத்தில் அவர் ‘இல்லை’ என்பது ஒரு நேர்மறையான, கவித்துவமான அழகான விசயமாகிறது. ‘என் அஞ்சலிக் கூட்டத்துக்கு யாரும் வர வேண்டாம்’ எனும் பகடியை ஒரு நட்பழைப்பாக நாம் காண முடியும்.

நட்பில் இரங்கல் குறித்த ஒரு பதற்றமான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே, நண்பன் மரிக்கும் முன்னரே வந்துவிடுகிறது என்கிறார் தெரிதா. “அது நண்பனை விடாமல் பின்தொடர்கிறது, அது அவனை இரங்கலுக்கு முன்பே இரங்கலுக்குள் தள்ளுகிறது. இந்தப் பீதி ஒப்பாரி நிகழும் முன்னரே வெம்பி அழுகிறது, அது மரணத்துக்காக மரணத்துக்கு முன்னரே அழுகிறது; இதுதான் நட்பின் சுவாசம்…” என அவர் கவித்துவமாக எழுதுகையில் ஒரு முக்கியமான அவதானிப்பு வருகிறது – நட்பு என்பது எப்போதுமே நண்பனைத் தின்று செரிப்பதாகவே இருக்கிறது; நண்பனுடன் நாம் இருக்கும்போது நாம் உரையாடும் மொழியில் அவன் இல்லாமல் ஆவதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது;
ஆனால் அதை நம்மால் துல்லியமாக அப்போது உணர முடிவதில்லை. அவன் உச்சரிக்கும் ஒரு சிறு சொல்லுக்குள் நாம் போய் புகுந்துகொள்கிறோம்; அவன் சொல்லி முடிக்குமுன்னரே நாம் அதனை வசப்படுத்துகிறோம்; அதை வசப்படுத்தி முடிக்கும் முன்னரே நாம் அடுத்த ஒன்றுக்குள் நழுவிச் செல்கிறோம். இது நிகழும்போதே நண்பனும் நம்முடைய மொழி வழியாக நாமாக மாறிக்கொண்டிருக்கிறான். இருவருக்கும் சம்பாஷணை நிகழும் போதே அதனூடாக நாம் தன்னிலை அழிவது குறித்து ஒரு பதற்றம், பயம் இருந்து கொண்டு இருக்கிறது. இதுதான் அழிவது மட்டும் அல்ல, காலத்தில் நாம் நிகழ்காலத்திலோ எதிர்காலத்திலோ கால் பாவி நிற்க முடியாத ஒரு கால அழிவும்தான். அந்தப் பயமானது ஒரு துப்பாக்கி முனைபோல நம்மை நோக்கி சதா சுட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பயமே நட்பின் மிகப்பெரிய கிளர்ச்சியாக இருக்கிறது. இதையே தெரிதா இரங்கலின் கிளர்ச்சி என்கிறார்.

தெரிதா எழுதிய அஞ்சலிக் கட்டுரைகள் பிரசித்தம் – 1981 முதல் 1999 வரை அவர் ரொலாண்ட் பார்த், பூக்கோ, அல்தூசர், டெலூஸ், லையடார்ட் போன்ற தனது பல முக்கிய சமகால சிந்தனையாளர்களுக்கு அஞ்சலிக் கட்டுரைகள் எழுதினார். இவை தொகுக்கப்பட்டு The Work of Mourning என ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியானது. இந்த அஞ்சலிகளில் தெரிதா காலமான தன் நண்பர்களை மதிப்பிட்டு சிலுவையில் ஏற்றாமல் அவர்களின் தரப்பில் இருந்து அவர்களின் பார்வையில் இருந்து உலகைக் காண முயல்கிறார். நெகிழ்ச்சி, மிகையான புகழ்ச்சி, உணர்ச்சித் தளும்பல், நினைவு மீட்டல் என பல தொனிகளை இக்கட்டுரைகள் கொண்டிருந்தாலும் முடிந்தளவுக்கு அவர் முயல்வது அந்த அஞ்சலிகளில் மறைந்தவரை மீட்டுக் கொணர்வதும், அவருடன் அவர் இருந்தபோது சாத்தியமான உரையாடல்களை இப்போது நிகழ்த்துவதுமே. தெரிதா இப்படி இரங்கலைக் காணும் விதமே நூதனமாக, ஆழமாக இருக்கிறது. நமது தமிழ்ச் சூழலில் நாம் நண்பர்களுக்காக இரங்குவதை ஒரு ஈகோ கம்புசுற்றலாக, போலி சடங்காக அன்றி ஒரு உயிரோட்டமான சம்பாஷணையாக, இறந்தவரை மீட்டுக்கொண்டு வந்து மீண்டும் ‘மரணிக்க’ செய்யும் ஒரு நட்பு பாராட்டலாகப் பார்க்க நம்மை அவர் தூண்டுகிறார்.

தமிழ் இலக்கிய சூழலில் ஒருவர் உயிரிழந்ததும் நூற்றுக்கணக்கான அஞ்சலிக்குறிப்புகள் எழுதப்படுவதை, உணர்ச்சிமேலிடும் சொற்கள் நூறு நூறு பூக்களாய் பூத்து அவரது நினைவில் தூவப்படுவதை, அவரைக் குறித்த நினைவுகள் மீள மீள மீட்டப்படுவதைக் காண்கிறோம். சில நேரம் இதை பகடி செய்கிறோம். விமர்சித்துக் கடந்து போகிறோம். ‘அவர் உயிருடன் இருக்கையில் இந்த அன்பு ஏன் காட்டப்படுவதில்லை?’ எனக் கேட்கிறோம். நாம் ஒன்றை அப்போது புரிந்துகொள்வதில்லை – ஒரு மனிதனுடன் அன்பு பாராட்டுவதற்கு பிரதான தடை அவன் ‘உயிருடன்’ இருப்பதே. ஒரு நண்பன் ‘உயிருடன்’ இருக்கையில் அவனிடத்து நட்பைப் பேணுவது மிக மிகக் கடினம்.
நட்புறவாடலில் ஒருவன் ‘இறந்து’போக மறுக்கும்போதே அந்த உறவு கசந்து அது விரோதமாகிறது. ‘சாகாத’ நண்பனிடத்து நாம் பேச வேண்டிய சொற்கள் நூற்றுக்கணக்கான சொற்களாக நமக்குள் குவிந்து மூச்சைத் திண செய்கின்றன. எதிரி நண்பனாகி மீண்டும் எதிரியாகி மடிந்ததும் நண்பனாக உயிர்த்தெழுகிறான். அப்போது நாம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம். இப்போது அந்த ‘காலமற்ற காலம்’ நட்பில் தோன்றுகிறது.

இறந்த நண்பன் நிகழ்காலத்தில் இல்லை. அவனது நினைவுகளை நாம் கடந்த காலத்தில் இருந்து தட்டி எழுப்பி நல்ல சட்டை, பேண்ட் அணிவித்து தலைசீவி ஒப்பனை செய்து நிகழ் காலத்துக்குக் கொண்டுவருகிறோம். ஆனால் அவனுக்கு உயிரளிக்க அவனை நாம் ‘எதிர்காலத்துக்குக்’ கொண்டு சென்றாக வேண்டும். ஒரு பிரச்சனை இப்போது ஏற்படுகிறது – செத்துப் போய்விட்ட அவன் எதிர்காலத்தில் இல்லையே. அதனாலே வேறுவழியின்றி அவனை நாம் மொழிக்குள் ஒரு காலமற்றக் காலத்தை சிருஷ்டித்து உயிர்ப்பிக்கிறோம் – அதுதான் இரங்கல்; அதுதான் அஞ்சலிக் கட்டுரை.

இதனால்தான் தான், நீண்ட காலமாய் தன்னுடன் பேசாது இருந்த சு.ரா 2005 அக்டோபர் 15 அன்று இறந்துபோன பிறகு ஜெயமோகன் சில நாட்களில் இரவு பகலாய் ஒரு நீண்ட அஞ்சலிக்கட்டுரை எழுதி அதை ஒரு நூலாக விரிவாக்கி பிரசுரித்தார் – அதாவது ஒரு பக்கம் சு.ராவுக்கு அஞ்சலிக்கூட்டம் நடந்தபோது இன்னொரு பக்கம் அவரைப் பற்றின ஜெயமோகனின் அஞ்சலி நூலும் உயிர்மை மூலம் வெளியானது. இந்த நூலுக்கு ஜெயமோகன் அளித்த தலைப்பு வெகு பொருத்தமானது – ‘சு.ரா: நினைவின் நதியில்’.

நதி எந்த காலத்தில் இருக்கிறது? அது கடந்த காலத்தில் இருந்து எதிர்காலத்துக்குப் பாய்கிறது, ஆனால் அதை நீங்கள் துழாவிக் கையில் அள்ளிக் கொள்ளும்போது அது நிகழ்காலத்தில் கூட இல்லை. நீங்கள் அள்ளி எடுத்த நீரானது கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்தின் வழி எதிர்காலத்துக்குச் சென்று கொண்டிருந்தது; அது ஒரு மீ-காலத்தில் இருந்தது. ‘நினைவின் நதியில்’ இருந்து ஜெயமோகன் அள்ளி எடுத்து கைக்குவளையில் வைத்துப் பார்த்த சு.ராவும், கடந்த காலத்தில் இருந்து எழுந்து வந்தாலும், நிஜத்தில் எதிர்காலத்தில் தன் காலை நீட்டிப் (அனந்தபத்மநாபனைப் போல) சயனித்துக் கொண்டிருப்பவரே; நாம் பார்த்துக் கொண்டிருக்கையிலே அந்தக் கால்கள் எதிர்காலத்தையும் தாண்டி ஒரு காலமற்ற காலத்தில் அசைந்து கொண்டிருக்கிறது. அந்த சு.ராவின் அசையும் கால்களுக்கு காலமே இல்லை என்பதால் அவர்மீதான் நட்புக்கும் இனிமேல் முடிவே இல்லை.

முந்தைய தொடர்கள்:

7.காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்https://bit.ly/33tiHCB

6.எனது நண்பன் எனது நண்பன் அல்லhttps://bit.ly/2xTmygJ

5.ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?https://bit.ly/2U1ZmW0

4.நிழல் நிஜமாகிறதுhttps://bit.ly/3a3P9xM

3.பாய் பெஸ்டிகளின் தர்மசங்கடம்https://bit.ly/2QuC09r

2.தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர்https://bit.ly/2Qsg1jn

1.யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன்https://bit.ly/33AmePx

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. திரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்
  2. கிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும்? - மணிரத்னத்திலிருந்து மிஷ்கின் வரை - ஆர். அபிலாஷ்
  3. ’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை - ஆர். அபிலாஷ் (பெங்களூர்)
  4. கொரோனோ பயங்கரமும் பா.ஜ.க அரசின் கார்பரேட் பயங்கரவாதமும் - ஆர். அபிலாஷ் 
  5. முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது?- ஆர். அபிலாஷ்
  6. காட்ஃபாதர் முதல் முள்ளும் மலரும் வரை: கதைக்குள் இருக்கும் கதை- ஆர். அபிலாஷ்
  7. சினிமாவில் போதனை இருக்கலாமா?- ஆர். அபிலாஷ்
  8. பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல் - ஆர். அபிலாஷ்
  9. ‘அலைபாயுதே’ - திரைக்கதை நுணுக்கங்கள் - ஆர். அபிலாஷ்
  10. தனிமையின் காதலே நட்பு- ஆர். அபிலாஷ்
  11. ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?- ஆர். அபிலாஷ்
  12. பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- ஆர். அபிலாஷ்
  13. காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- ஆர். அபிலாஷ்
  14. எனது நண்பன் எனது நண்பன் அல்ல- ஆர். அபிலாஷ்
  15. ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?- ஆர். அபிலாஷ்
  16. நிழல் நிஜமாகிறது - ஆர்.அபிலாஷ்
  17. சத்யன் அந்திக்காடு: தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர் - ஆர். அபிலாஷ்
  18. யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன் - ஆர்.அபிலாஷ்